ஸ்டாலினுக்கு பயம்: அழகிரி ஆவேசம் dinamalar 14.08.2018
சென்னை,:''தி.மு.க.,வில், என்னை மீண்டும் சேர்த்தால், நான் வலிமையான தலைவராகி விடுவேன் என்ற பயம், ஸ்டாலினுக்கு உள்ளது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி கூறினார். சென்னையில்,நேற்று ஆங்கில, 'டிவி' சேனலுக்கு, அழகிரி அளித்த பேட்டி:
உங்கள் ஆதங்கம் தான் என்ன?
எனக்கு பல ஆதங்கங்கள் இருக்கின்றன; அந்த ஆதங்கங்களை எல்லாம், ஆறு மாதத்தில், தொண்டர்கள் நிறைவேற்றுவர்.
மீண்டும், தி.மு.க.,வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா?
என்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.
கட்சியில் சேருவது தொடர் பாக, நீங்கள் பேச்சு நடத்தியுள்ளீர்களா?
நான் எந்த பேச்சும் நடத்தவில்லை. 'செய்தி தொடர்பாளர்கள் யாரும், 'டிவி'க்களில், என்னை பற்றி பேட்டி அளிக்கக் கூடாது' என, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்; பின், எப்படி என்னைக் கட்சியில் சேர்ப்பர்?
கருணாநிதி மரணம் அடைந்துள்ள நிலையில், உங்களை புறக்கணிப்பது, சரியான முடிவா?
இதுபற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான், ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும், ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், கட்சி சின்னாபின்னமாகி விடும்.
அவர்கள் பேச்சு நடத்த வந்தால், நீங்கள் பேசத் தயாரா?
அதெல்லாம், அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். கண்டிப்பாக, காலம் பதில் சொல்லும். அவர்களை எல்லாம், கருணாநிதியே தண்டிப்பார். கருணாநிதியின் ஆத்மா, அவர்களைச் சும்மா விடாது.
கட்சியில், உங்களை சேர்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
எனக்கென்ன தெரியும்? எனக்குப் புகழ் இருக்கிறது; கட்சித் தொண்டர்கள், என்னை விரும்புகின் றனர். அதனால், அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால், வலிமையான தலைவராகி விடுவேன் என்ற, எண்ணமாக இருக்கலாம்.
குடும்ப உறுப்பினர்களிடம் பேசி சரி செய்யலாமே?
குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும், இதில் அக்கறை இல்லை. நான் கட்சிக்குள் வருவது பற்றி, யாரும் பேசியதில்லை.
தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., சரியாக செயல்படுகிறது என, நினைக்கிறீர்கள்.
சரியாகச் செயல்பட்டால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 'டிபாசிட்' பறி
போகுமா; தொடர்ந்து, தேர்தல் தோல்விகளை சந்திக்கின்றனர். 'கட்சிக்காரன் பணம் வாங்கி விட்டான்' என, துரைமுருகன் பேசுகிறார். கட்சிக்காரன், தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான்! அண்ணாதுரை காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இந்த பேச்சை, அவன் எப்படி எடுத்துக் கொள்வான். இதெல்லாம் தான் என் ஆதங்கம்.பணம் கொடுத்தால், பதவி கொடுக்கின்றனர். முன்பு, ஒரு செயலர் இருந் தால், ஒரு துணைச் செயலர் இருப்பர். தற்போது, 10, 15 பேர் இருக்கின்றனர்.இவ்வாறு அழகிரி கூறினார்.
இன்று தி.மு.க., செயற்குழு
தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.- நமது நிருபர் -
No comments:
Post a Comment