Tuesday, August 14, 2018

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் காலமானார்

Added : ஆக 13, 2018 23:41



கோல்கட்டா: லோக்சபா முன்னாள் சபாநாயகரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான, சோம்நாத் சாட்டர்ஜி, 89, உடல் நலக் குறைவால், கோல்கட்டாவில் நேற்று காலமானார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சோம்நாத் சாட்டர்ஜி, 1968ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக பதவி வகித்துள்ள அவர், 10 முறை, லோக்சபா உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.கடந்த, 2004 - 2009ல், லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார். கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்ட சோம்நாத், மருத்துவமனையில், 40 நாட்கள் சிகிச்சை பெற்றார்.பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, சமீபத்தில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.இருப்பினும், 7ல், உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.அங்கு, சிறுநீரகம் உட்பட முக்கிய உறுப்புகள் செயல் இழந்ததால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.இறப்புக்கு பின், தன் உடலை தானம் செய்வதாக, சோம்நாத் சாட்டர்ஜி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, அவரது உடல், கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'இந்திய அரசியலில் மாபெரும் தலைவராக திகழ்ந்தவர், சோம்நாத் சாட்டர்ஜி; நம் பார்லிமென்ட் ஜனநாயகத்தை செம்மைப்படுத்தியவர்' என, கூறியுள்ளார்.
காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட செய்தியில், 'சிறந்த தலைவராக திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, கட்சி பேதமின்றி, அனைத்து அரசியல் தலைவர்களாலும் உயர்வாக மதிக்கப்பட்டவர்' என, தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'லோக்சபா சபாநாயகராக, 2004 ஜூன் முதல், 2009 மே வரை பதவி வகித்து, சபையை திறம்பட வழி நடத்தியவர். 'அவர் இறந்த செய்தி அறிந்து, மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என, கூறியுள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள், சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


நேர்மை... துாய்மை... எளிமை!

சிறந்த பார்லிமென்ட் உறுப்பினராக திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, பொதுவாழ்வில் நேர்மை, துாய்மையை கடைபிடித்தார். சபாநாயகராக இருந்தபோது அரசு மாளிகையில் தங்கினார். அரசு நிதியை பயன்படுத்திக் கொள்ள சட்டத்தில் இடமிருந்தும், சொந்த தேவைகளை தன் செலவிலேயே நிறைவேற்றினார். வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்றபோது, குடும்பத்தினர் உடன் வந்தால், அவர்களுக்கான செலவை சொந்தப் பணத்திலிருந்து செலுத்தினார்.

முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அசாமின் தேஜ்பூரில், 1929 ஜூலை, 25ல் பிறந்தார். இவரது தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜி, அகில பாரதிய ஹிந்து மகா சபையின் நிறுவனர்களில் ஒருவர். கோல்கட்டாவில் கல்லுாரிப் படிப்பை முடித்த சோம்நாத், சட்டம் பயின்று சிறந்த சட்ட வல்லுனராக விளங்கினார். அரசியலில் நுழைவதற்கு முன், கோல்கட்டா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். எம்.பி.,யாக இருந்த இவரது தந்தை இறந்தவுடன், பர்தவான் தொகுதிக்கு, 1971ல் நடந்த லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் ஆதரவுடன், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு முதன்முறையாக லோக்சபா, எம்.பி., ஆனார். பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த அவர், மேற்கு வங்கத்தின், ஜாதவ்பூர் (இரண்டு முறை), போல்பூர் (ஏழு முறை) தொகுதிகளில் போட்டியிட்டு, 10 முறை லோக்சபாவுக்கு தேர்வானார்.கடந்த, 1989 - 2004 வரை லோக்சபாவில் மார்க்சிஸ்ட் தலைவராக இருந்தார். இவரின் சிறந்த செயல்பாட்டை பாராட்டி, 1996ல், சிறந்த பார்லிமென்ட் உறுப்பினர் விருது வழங்கப்பட்டது. 2004 - -2009 வரை, மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார். இவரே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல் சபாநாயகர். பதவிக்காலத்தில் லோக்சபாவை சிறப்பாக வழிநடத்தினார். மக்களின் வரிப்பணத்தில் பார்லிமென்ட் செயல்படுகிறது என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டிய இவர், சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து, மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது என, அறிவுறுத்தினார்.

கடந்த, 2008ல், காங்., அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கொண்டு வந்தது. ஆனால், சோம்நாத் சாட்டர்ஜி இதை ஆதரிக்கவில்லை. இதையடுத்து, மார்க்., கம்யூ., கட்சியிலிருந்து சாட்டர்ஜி நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 'என் வாழ்நாளில் மிக சோகமான நாள்' என, குறிப்பிட்டார்.

10 முறை எம்.பி., : மறைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971 - 2004 வரை மேற்கு வங்கத்தில் இருந்து, 10 முறை, எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.ஒருமுறை மட்டும், 1984ல் ஜாதவ்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். லோக்சபா வரலாற்றில் அதிகபட்சமாக, 11 முறை, எம்.பி.,யாக இருந்தவர், இ.கம்யூ., கட்சியை சேர்ந்த இந்திரஜித் குப்தா.இரண்டாவது இடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், காங்கிரசின் சயீத் ஆகியோருடன் சோம்நாத் சாட்டர்ஜியும் உள்ளார். மூவரும், 10 முறை, எம்.பி., யாக இருந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024