இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாதுசி.பி.எஸ்.இ.,க்கு மைக்ரோசாப்ட் உதவி
dinamalar 14.08.2018
புதுடில்லி : இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நிகழாமல் தடுக்கும் வகையில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், இந்தாண்டு நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், வருங்காலத்தில், வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க திட்டமிட்ட, சி.பி.எஸ்.இ., அமெரிக்காவை ச் சேர்ந்த, தகவல் தொடர்பு துறை ஜாம்பவான் நிறுவனம், மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது.
இரு நிறுவனங்களும் செய்துள்ள ஒப்பந்தப்படி, சி.பி.எஸ்.இ.,யின் டிஜிட்டல் கேள்வித்தாள்கள், வெளியாகாத வகையில், அதீத பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தொழில்நுட்ப தீர்வை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும்.
இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண்மை இயக்குனர், அனில் பன்சாலி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வுகளின்போது, டிஜிட்டல் முறையிலான கேள்வித் தாள்கள், தேர்வு துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் வரை,
பார்க்க முடியாத வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்படும்.
அதற்கென, பிரத்யேக தொழில் நுட்பத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி உள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் வினாத்தாள்கள், சிறப்பு குறியீடு உடையவை. எனவே, எந்த சமயத்தில் தவறு நிகழ்ந்தாலும், எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த தொழில் நுட்பம் தொடர்பாக நடந்துள்ள அனைத்து சோதனைகளும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment