Sunday, August 12, 2018

இனி, முழுநேரம் விவசாயம் தான் ! பணி ஓய்வு போலீஸ் அதிகாரி அசத்தல்

ந.பா.சேதுராமன்

தொடர்ச்சியாக இரண்டுமுறை கார்களை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது, ஆனால் ராஜேந்திரன் அதிலிருந்து தப்பித்தார். விவகாரம் அப்போதைய போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கவனத்துக்குப் போனது. ராஜேந்திரனுக்கு, 'துப்பாக்கி பாதுகாப்பு'க்கு கமிஷனர் உத்தரவிட்டார்.



முழுநேர விவசாயமே, இனி என் வாழ்க்கை என்கிறார், இன்று பணி ஓய்வு பெறும் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன். 1987-ம் ஆண்டு 'பேட்ச்' நேரடி சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறைக்கு வந்தவர், என்.பி.ராஜேந்திரன். 35 ஆண்டு காலம் காவல் பணியாற்றி, பதவி உயர்வில் டி.எஸ்.பி வரை வந்த ராஜேந்திரன் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்ட டி.எஸ்.பியாகி பணி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 31.7.2018 அன்று பணி ஓய்வு பெற்றவருக்கு இன்று (12.8.2018) மதுராந்தம், சோத்துப்பாக்கம் கிராமத்தில் பிரிவுஉபசார விழா நடக்கிறது. விழாவை உள்ளூர் கிராம மக்களே முன்வந்து நடத்துகின்றனர்.

2002- மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன் பணியாற்றினார். குறிப்பிட்ட அந்த இரண்டாண்டுகளில் மட்டுமே கைது நடவடிக்கையாக 2015 பேரை ராஜேந்திரன் சிறையில் அடைத்திருக்கிறார், 120 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார். பல முன்னணி நடிகைகள், துணை நடிகைகள் நாள்தோறும் கைது நடவடிக்கையில் சிக்கியதும் அந்த காலகட்டத்தில்தான். விபசார உலகின் தரகர்களாக அறியப்பட்ட பூங்கா வெங்கடேசன், ஐதராபாத் பிரசாத், டெய்லர் ரவி, ராயப்பேட்டை சுரேஷ், விக்கி, மும்பை நாகேஸ்வரராவ் போன்ற பலர், சிறைக்குப் போன பட்டியலில் இடம் பெற்றனர். ராஜேந்திரனால், 'தொழில்' பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கருதிய விபசாரக் கும்பல், ராஜேந்திரனைக் கொலை செய்து விட்டு அதை விபத்து போல சித்தரிக்கத் திட்டம் போட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டுமுறை கார்களை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது, ஆனால் ராஜேந்திரன் அதிலிருந்து தப்பித்தார். விவகாரம் அப்போதைய போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கவனத்துக்குப் போனது. ராஜேந்திரனுக்கு, 'துப்பாக்கி பாதுகாப்பு'க்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

குடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்த காவல் பணிக்கான பதக்கம், தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான மெச்சத்தகு முதல் விருது என ராஜேந்திரன் விருதுகளால் கௌரவிக்கப் பட்டார். சென்னை நகரே 2015-ல் வெள்ளத்தில் மூழ்கியபோது கோட்டூர்புரம் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது தத்தளித்த ஏராளமான பொதுமக்களை நீரில் சென்று காப்பாற்றிய வகையில், போலீஸ் உயரதிகாரிகளின் பாராட்டும் ராஜேந்திரனுக்குக் கிடைத்திருக்கிறது. பணி ஓய்வு குறித்து நம்மிடம் பேசிய ராஜேந்திரன், "காவல் பணியில், உயரதிகாரிகளிடம் எந்தத் தண்டனையும் பெறாமல், பொது மக்களின் குற்றச் சாட்டுக்கும் ஆளாகாமல் என்னுடைய 35 ஆண்டுகால சர்வீஸை முடித்ததே பெரிய சாதனை என்றுதான் நினைக்கிறேன். போலீஸை நம்பித்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. குடும்பச் சண்டைகள் தொடர்பான 90 சதவிகிதம் பிரச்னைகளுக்கு அதிலேயே தீர்வு கிடைத்து விடும். ரோந்துப் பணியில் தீவிர கவனம் செலுத்தினால் சமூக விரோதிகளின் நடமாட்டமே இல்லாமல் போய்விடும். இந்த யூனிபார்ம் முழு மனநிறைவோடு விடைபெறுகிறது. அதே மனநிறைவை நான் மீண்டும் பெற, இடுப்பில் துண்டோடு கழனியில் இறங்கி விவசாயம் பார்க்கப் போகிறேன், இனி அதுதான் என் உலகம்" என்கிறார் ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Passengers of an international flightdropped off at domestic terminal

Passengers of an international flight dropped off at domestic terminal The Hindu Bureau CHENNAI 3.01.2025 Passengers of an international fli...