Wednesday, August 15, 2018

காற்றில் கரையாத நினைவுகள்

காற்றில் கரையாத நினைவுகள் 24: எது பொற்காலம்!

வெ.இறையன்பு

Published :  14 Aug 2018 09:11 IST

மனம் பழையவற்றை வசந்தகாலமாக எண்ணிப் பார்க்கும் விசித்திரம் கொண்டது. சிலநேரங்களில் விடு பட்டவைகூட மகிழ்ச்சியானதாக தோன் றும். விடுதலையானவன் சிறைச்சாலையைக் கடக்கும்போது சோகப்படுவதுபோன்ற ஒருவித மயக்கம் அது. சமூக அளவில் இந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக் கின்றன. கல்லூரியில் கிராம முகாம் சென்றபோது, அங்கிருந்த தேநீர் கடைகளில் இரட்டைக் குவளைகள் இருப்பதைப் பார்த்து வேதனைப் பட்டோம். ஒருவரை ‘ஒதுக்கிவைக்கப்பட்டவர்’ எனக் குத்திக் காட்டு வதற்கு அதனினும் வேறு முத்திரை இல்லை. இன்று எல்லா இடங் களிலும் காகிதக் குவளைகள் அந்த அவலத்தை அறவே நீக்கி விட்டன. மனிதர்கள் செய்ய முடியாததை தொழில்நுட்பம் சாதித்துவிட்டது.

இந்திய ஆட்சிப் பணி என்பது கனவாக இருந்த காலம் மாறி எண்ணற்ற சிற்றூர்களில் இருந்து தமிழில் படித்தவர்கள் எழுதித் தேர்ச்சி பெற்று இந்தியாவெங்கும் உயர்ந்த பணிகளில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். மாதிரித் தாள்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து நடையாக நடந்து அவற்றைப் பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.

இன்று விரலைச் சொடுக்கினால் விவரங்கள் குவியல் குவியலாக வந்துவிழும் இணைய வசதி. அரிய புத்தகங்களை எளிதில் பெறும் வசதி. உலகின் எந்த மூலையில் கிடைக்கும் புத்தகத்தையும் கணினியில் பதிவிறக்கம் செய்து விடலாம். அறிவு ஒரு சாராருக்கே சொந்தம் என்பதை அடித்து ஒடித்த விஞ்ஞான முன்னேற்றம். எந்த நாட்டுக்கும் ஒரு விநாடியில் மின்னஞ்சல் அனுப்ப முடியும் என்ற அதிவேக தகவல் பரிமாற்ற வசதி.

நிறைய குழந்தைகள் பெரிய வயிற்றுடன். வெளிறிய முகத்துடன். குழி விழுந்த கண்களுடன் போஷாக்குக் குறைவுடன் இருந்த நிலை மாறி இன்று ‘ஊளைச் சதையை குறைப்பது எப்படி?’ என்கிற கவலையில் பெற்றோர். அன்று கோழிமுட்டை என்பது ஒரு சில கடைகளில் இரும்புக் கூடையில் உறியில் தொங்கும் அபூர்வ வஸ்து. பால் காலையில் மட்டுமே கிடைக்கும் அரிய பண்டமாக இருந்த நிலை மாறி, 24 மணி நேரமும் பாக்கெட்டில் வாங்கி வரும் பொருள்.

வதவதவென பிள்ளைகளைப் பெறுவது வாடிக்கையாக இருந்தது. பெண்கள் உடல்நலம் குறைந்து, ஆண்கள் கவலைகள் நிறைந்து அப்போதெல்லாம் கதைகளில் ‘40 வயதுப் பெரியவர்’ என்று எழுதும் வழக்கம் இருந்தது. இன்று 60 வயது நிறைந்தவர்களும் 20 வயதுபோல இருக்க முனைகிறார்கள். வயது என்கிற வரையறை இன்று எடுபடுவதில்லை.

எங்கு பார்த்தாலும் ஓலைக் குடிசைகள் இருந்த சிற்றூர்கள் இன்று மெல்ல மெல்ல மாறி வருகின்றன. அப்போது ஓட்டு வீடு அரிது. மாடி வீட்டை கல்வீடு என்று அழைப்பார்கள். இன்று பல வீடுகள் மச்சு வீடுகளாக மாறி வருகின்றன. அரசு கட்டித் தரும் வீடுகளும், மானியத்தால் உருவாக்கப்படும் இல்லங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. அன்று வசதியுள்ளவர் உபயோகித்த ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ள சிலர் ஆயத்தமாக இருந்தார்கள். இன்று பழைய துணிகளை யாரும் பெற விருப்பமாக இல்லை.

இன்றைய தலைமுறை சென்ற தலைமுறையைவிட உயரமாகிக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக்கள், புரதம் போன்றவை தாராளமாகக் கிடைப்பதும் இதற்குக் காரணம். தெளிவான முகமும், தோற்றப் பொலிவும் அனைவருக்கும் சாத்தியமாகும் நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. பலரது முகத்தில் படித்த களையும், கற்றறிந்த தேஜசும் காணப்படுகின்றன. கல்லூரிக் கல்வி ஒரு சில ருக்கு மட்டுமே என்பது மாறி மேனிலைப் பள்ளி களாக மூலைமுடுக்குகளிலெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. பொறியியல் படிப்பு சிற்றூர்களிலும் கிடைக்கிறது. பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காத குடும்பங்களில் மருத்துவமும், பொறியியலும் சாத்தியமாகியிருக்கின்றன.

வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது. பஞ்சம், பட்டினி ஆகியவற்றின் தாக்கம் குறைந்திருக்கிறது. சோப்புகூட ஆடம்பரப் பொருள் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று சின்னச்சின்ன ஊர்களிலும் உடல் தூய்மையை உறுதிசெய்யும் பொருட்கள் சின்னப் பொட்டலங்களாக கண் சிமிட்டி மின்னுகின்றன. ஊருக்கு ஓர் ஆங்கிலப் பள்ளி என்றிருந்த நிலை மாறி திரும்பிய பக்கமெல்லாம் ‘ஆங்கிலவழி படிப்பு’ என்று அந்நிய மொழியில் படிப்பது இப்போது சர்வசகஜமாகிவிட்டது. ஆனால், தமிழும் சரியாகப் படிக்கத் தெரியாமல் ஆங்கிலமும் முறையாக பேசத் தெரியாமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாய்த் தடுமாறும் தலைமுறை ஒன்று உருவாகியிருக்கிறது.

இன்று சமூக விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. திரைத் துறையினரும் நடிப்பு மட்டுமே வாழ்வு என நினைக்காமல் மக்களின் நாடித் துடிப்புகளையும் அறிந்து களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எதையோ தொலைத்த உணர்வு எங்கள் தலைமுறையில் அனைவருக்கும் இருக்கிறது. அந்த இனம்புரியாத சோகத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியாக இருந்த காலங்களை மனத்தால் வருடிப் பார்க்கின் றோம்.

பிள்ளைகளுக்கு எல்லாம் வாங்கித் தந்தும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தோன்ற வில்லை. ஆனால் அன்று எதுவுமே யாரும் வாங்கித் தராமலேயே நாங்கள் மகிழ்ச்சியாக இருந்த உணர்வு. இன்று வீட்டில் பொருட்களெல்லாம் குவிந்தும் ஒருவித வெறுமை. உறுப்பினர்கள் நிறைந்தும் ஒருவிதத் தனிமை.

மிகுந்த பாதுகாப்பான வாழ்க்கைக்கு நடுவில் ஏதோ பயம் ஊஞ்சலாடுகிறது. தூங்கி எழும்போது பொழுதை ரசித்துக்கொண்டு எழுபவர்கள் குறைவு. எதுவும் இல்லாதபோது இருந்த சுதந்தரம் எல்லாம் இருக்கும்போது பறிபோனதைப் போன்ற பரிதாபம்.

நம் உறவுகளையும், உரிமைகளையும் யாரோ வழிப்பறி செய்ததைப்போன்ற எண் ணம். ஏதோ ஒன்று குறைகிற மாதிரியே எப்போதும் இருக்கிறது. சுவர்கள் பலமாக இருந்தாலும் இதயம் பலவீனமாக இருக்கிறது.

நாகையில் கல்லார் தர்காவில் கந்தூரி விழாவின்போது அங்கு இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் அக்கரைப் பேட்டை நைனியப்ப நாட்டாரை `அப்பா’ என்று அழைப்பதைப் பார்த்து பூரித்துப் போயிருக்கிறேன். சின்ன வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சுபான் பாயும், விக்டர் குடும்பமும் அண்ணன், தம்பிகளாக உறவு வைத்து அழைத்துப் பழகியது நினைவுக்கு வந்தது. இப்போது அக்கம்பக்கங்களில் ஏனோ கண்ணுக்குத் தெரியாத இமயத் தடுப்புகள் பிரி வினைகளின் பெயரால் எல்லா இடங் களிலும் விரவிக் கிடப்பதைப் போன்ற வேதனை.

புதிய புதிய சந்திப்புகளில் பழைய உறவுகளையும், நட்புகளையும் தொலைத்துக்கொண்டே இருக்கிறோம். எல்லாம் மேம்போக்காக இருக்கும் பழக்கத்தில் மையத்தைத் தவற விடுகி றோம்.

இழந்தவற்றை நினைவுபடுத்த எப்போதும் இல்லாத அளவு எல்லா இடங்களிலும் பழைய மாணவர்கள் சந்திப்பு. அங்கு வழியிலேயே இடறி விழுந்தவர்கள் நினைவில் இதயம் வலிக்கிறது.

ஓய்வுக்குப் பிறகு சகோதர சகோதரிகள் ஒரே இடத்தில் ஒன்றாய்த் தங்க முடியாதா! செலவைப் பிரித்து உணவைப் பகிர்ந்து உயிரை நீட்டிக்க முடியாதா! ஒரே சமையலறையில் உள்ளங்கள் ஒன்றாக மாலையில் பழங்கதைகள் பேசி களித்திருக்க இயலாதா! அதிக நாட்கள் முடியாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு வாரமாவது ஒன்றாய்க் கூடி மகிழலாமே!

அப்போது அந்தப் பொற்காலம் திரும்பலாம்.

அன்பின் ஆதிக்கம் அனைத்து சுயநலங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு எழும்பி நிற்கும் காலம்தானே பொற்காலமாக இருக்க முடியும்!

- நிறைந்தது -

No comments:

Post a Comment

Passengers of an international flightdropped off at domestic terminal

Passengers of an international flight dropped off at domestic terminal The Hindu Bureau CHENNAI 3.01.2025 Passengers of an international fli...