Monday, August 27, 2018

வாஜ்பாய்: அள்ள அள்ளக்குறையாத உயர்ந்த பண்புகளின் பொக்கிஷம்

Published : 18 Aug 2018 12:08 IST

பால்நிலவன்



நல்ல தலைவர்களை வாழும்போதே அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் நாம், அவர்கள் மறைவின்போது கொஞ்சமாவது நினைவுகூர வேண்டும். அதிலும், அரசியல் நாகரிகத்தின் இலக்கணமாகத் திகழ்ந்தவர், தென்னகத்தின் மீது குறிப்பாக தமிழகத்தின் மீது உள்ளார்ந்த நேசம் செலுத்திவந்த வாஜ்பாயைப் பற்றிப் பேசுவது நல்ல அரசியலைப் பற்றிப் பேசுவதாகும்.

சுவரில் மாட்டப்படும் இன்னுமொரு படமாக இல்லாமல் சுழலும் பூமிக்கு ஒரு பாடமாக வாழ்ந்தவர் வாஜ்பாய். அவரை நாம் அறிந்துகொண்ட செய்திகளை விட அறியாத சிறப்புகளே அதிகம்.

அரசியல் பாதையில் ஒரு 'பெஸ்ட் பார்லிமென்டேரியன்' என்று பெயரெடுத்த ஒருவருக்கு இந்தியாவை அங்குலம் அங்குலமாக நேசித்ததோ மனித உறவுகளை மேம்படுத்தி அழகு பார்த்ததோ ஆச்சரியம் இல்லைதான்.

நேற்று திருவல்லிக்கேணி லாம்சி பிளாஸா டீ ஸ்டாலில் அவ்வளவு டேபிள்கள் கூட்டம் நிறைந்திருக்க எங்கள் டேபிளுக்கு தானாக விரும்பி வந்து அமர்ந்த ஒரு நண்பர் கேட்டார். 'பெஸ்ட் பார்லிமென்டேரியன்' ரைட்டு, ஆட்சியைத் தக்கவைக்க போயஸ் கார்டனுக்கு நடையா நடந்தாரே அவ்வளவு உயர்ந்த தலைவரே அப்படி இறங்கி வரலாமா? என்று.

சரியான கேள்வி, உயர்ந்த தலைவர்கள்தான் இறங்கி வரமுடியும். அன்றைக்கு அதிமுகவிடம் நிறைய எம்.பி.க்கள் இருந்தனர். ஆட்சியைத் தக்கவைப்பது என்பதைவிட காங்கிரஸுக்கு மாற்றாக, திடமான ஓர் ஆட்சியை நிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய மனிதர் நேரில் வந்தும் போயஸ் கார்டன் அதைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. காரணம் அவர்களுக்கும் நிறைய கோரிக்கைகள் இருந்தன. ஆதரவு தர முன்வருபவர்கள் கோரிக்கைகள், நிபந்தனைகளை வைக்கத்தானே செய்வார்கள். ஒரு கட்டத்தில் அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது.

அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. இன்னுமொரு பொதுத் தேர்தலில் நம்பிக்கையோடு களமிறங்கினார். பலமான கூட்டணியோடு ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதை மட்டும் அப்போதைக்குப் பதிலாக சொல்லமுடிந்தது.

உண்மையில், ''குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேனும் காத்தல் அரிது'' என்ற குறளுக்கு உதாரணமாகத் திகழ்ந்த மனிதர் அவர். 23 கட்சிகளை இணைத்து அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒரு ஸ்திரமான காங்கிரஸ் அல்லாத ஒரு மாற்று அரசியலை இந்தியாவில் நிலைப்படுத்தினார் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?

ஆனால் அது உண்மையான பாஜக ஆட்சிக்கு உதாரணமாகத் திகழ்ந்த ஆட்சி அது. அதற்குள் சில நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மிதமான, தீவிரமான ஆட்சிகளை நாம் பார்த்து வருகிறோம். இதமான ஒரு ஆட்சி என்றால் அது வாஜ்பாய் ஆட்சிதான்.

சின்ன வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தாலும் ஒரு கம்யூனிஸவாதியாக அவரது சிந்தனைகள் விளங்கின. காந்திய சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்டவர். நேர்மையே பாடம் கற்றுக்கொள்ளவேண்டிய மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் 77-79களில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையின்போது இரண்டாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அதன் பிறகு காங்கிரஸுக்கு மாற்று தேவை என்பதை உணர்ந்தார். அதன் பின்னர் அவரே 80களில் பாஜகவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஒருவகையில் பாஜகவின் தந்தை அவர். இத்தகைய பிதாமகனிடம்தான் 96களில் இந்தியா ஒப்படைக்கப்படுகிறது.

அவரது ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்திலிருந்து திடீரென்று நேரு படம் அகற்றப்பட்டது. நேரு போன்ற சோஷலிஸ சிற்பிகளின் படங்களினால் நாடாளுமன்றத்திற்குத்தான் பெருமை... அதை அங்கேயே வையுங்கள் என்று உத்தரவிட்டார்.

மாற்று சிந்தனையாளர்கள் என்றாலும் அவரது கோரிக்கைகள் நியாயம் இருப்பின் அதை நிறைவேற்றுவதில் எந்த சுணக்கமும் அவரிடம் பார்க்க முடியாது.

ஒருமுறை டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, கி.வீரமணி போன்றவர்கள் அவரிடம் முறையிட்டனர். உடனே பெரியார் இடத்திற்கு அதைவிட பெரிய இடத்தை ஒதுக்கித்தர உத்தரவிட்டார் வாஜ்பாய்.

ஒரு வற்றாத ஜீவநதியின் ஊற்றைப்போல ஒரு சிறந்த மனிதனின் வாழ்க்கையில், அற்புதமான செய்திகள் வந்துகொண்டேயிருக்கும். நெருக்கடி நிலை காலத்திலிருந்து இந்திரா காந்தியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த வாஜ்பாய் சஞ்சய் காந்தி மரணத்தின்போது அமைதி காத்தார். ஒரு தாயின் வலி எத்தகையது என்பது அவருக்குத் தெரியும். அதை மதிக்கவேண்டும் என்ற உணர்வில் இந்திராவை விமர்சிப்பதை கொஞ்ச காலம் தள்ளிப்போட்டார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம், சிறுநீரக பிரச்சினையில் அவதிப்பட்டு வந்த வாஜ்பாயை ராஜீவ் காந்தி அழைத்தார். நான் ஐநா சபையில் உரையாற்றச் செல்கிறேன். நீங்களும் வாருங்கள், அமெரிக்காவில் நல்ல சிகிச்சையை எடுத்துக்கொண்டு தாங்கள் உடல்நலம் பெற வேண்டும் என்று அழைக்க இவரும் அவருடன் செல்கிறார். ஐநா சபை கூட்டத்தை முடித்துக்கொண்ட ராஜீவ் வாஜ்பாயிடம், சிகிச்சை முழுமையாக முடிந்தபிறகே நீங்கள் இந்தியா திரும்பவேண்டும் அதற்கான ஏற்பாடுகளைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்ததை நன்றியோடு ஒரு நேர்காணலில் நினைவுகூர்கிறார் வாஜ்பாய்.

எளிமை, தன்னடக்கம், நன்றியுணர்வு, யாரையும் மதித்தல் என்பதில் அவரது குணங்கள் ஒவ்வொன்றும் அனுபவங்களாகவே வெளிப்பட்டுள்ளன.

பிரதமராவதற்கு முன்பு மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேச வந்தார். அப்போது வாஜ்பாய் வந்த கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. சாலையில் ஒரு டவுன்பஸ் தென்பட நான் இதிலேயே மதுரை போகிறேன் என்று சொல்லிவிட்டு அதில் ஒரு ஏறி அமர்ந்து எளிய மனிதனாகப் பயணம் செய்து மதுரைக் கூட்டத்தில் பேசினார்.

அப்போதெல்லாம் டெல்லியின் நடைபாதைகளில் இவர் அடிக்கடி நடந்து செல்வதை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும் என்கிறார்கள் டெல்லி வாசிகள்.

கிராமப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சுயஉதவிக்குழுக்களை தொடங்கி சாதித்துக் காட்டிய சின்னப்பிள்ளைக்கு ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருது வழங்கியபோது அந்தப் பெண்மணியின் காலைத் தொட்டு வணங்கியதை நாம் எளிதில் மறந்துவிடமுடியாது.

தேசியத் தலைவர்களில் தமிழகத்தை நேசித்ததில் பலரையும் விட வாஜ்பாய் ஒருபடி மேலே நிற்பவராகத்தான் இருக்கிறார். அண்ணா எம்.பி.யாக டெல்லி வந்த நாட்களில் அவருடன் இனிமையாகப் பழகிய நாட்களை அடிக்கடி நினைவுகூர்கிறார் வாஜ்பாய். அதுமட்டுமின்றி இவரது கவிதைத் தொகுப்பு தமிழில் வெளியானபோது அதில் எனது அருமை நண்பர் அண்ணாவுக்கு சமர்ப்பணம் என்று முதல் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அப்துல் கலாமை வைத்து அணுகுண்டு சோதனைகள் நிகழ்த்தியதோடு அவரையே நாட்டின் ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்தார்.

2001-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் வாஜ்பாய் கலந்துகொண்டபோது அதில் கருணாநிதி பேசுகையில், நாங்கள் ஒன்றாக போராடிய அவசர நிலை காலத்தை மறக்கமுடியாது என்று பேசினார்.

உண்மையான தேசப்பற்றுமிக்க முன்னுதாரண பாஜக ஆட்சியைத் தந்த பிதாமகனை இழந்ததில் இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும்போது லட்டு வாங்கி வருகிறேன், ஜிலேபி வாங்கி வருகிறேன் என்று அழும் குழந்தைகளுக்கு ஆசைகாட்டி புறப்பட்டுச் செல்லும் தந்தையைப் போல கடைசிவரைக்குமே வாயால் வடைசுடும் தலைவர்கள் நிறைந்த நமது நாட்டில் நிச்சயம் வாஜ்பாய் தனித்துவமானவர்.

வழக்கமாக மூவர்ணக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுவிட்டு அடுத்தநாளே வேலைமுடிந்தது என்று மறந்துபோய்விடக்கூடிய சம்பிரதாயத்துக்குள் வாஜ்பாய் அடங்கப் போவதில்லை.


No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024