Wednesday, August 1, 2018

7 ஆண்டு சிறை! அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்தால்..
 புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் 


1.8.2018

புதுடில்லி,: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிப்போருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.



நியாயமான வகையில் செயல்படும் அரசு ஊழியர்கள் மீது, உண்மைக்கு மாறாக, லஞ்சப் புகார்கள் அளிப்பதை தடுக்கும் வகையில், ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி சமீபத்தில் கூறியிருந்ததாவது:ஊழல் ஒழிப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம், நியாயமான அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்படுவர். பொய் வழக்குகள் தொடுக்கப்படுவதால், நேர்மையாக செயல்படும் அரசு ஊழியர்கள் பயப்படும் சூழ்நிலை நிலவியது.இதனால், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் முடிவு எடுக்காமல் தள்ளிப்போட்டு, பின் வரும் அதிகாரி, அந்த முடிவை எடுக்கட்டும் என்ற மனப்பான்மை, அதிகாரிகள் மத்தியில் நிலவியது. இதனால், நியாயமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், புதிய ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
அளித்துள்ளதாக, அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த சட்டம், ஜூலை, 26 முதல் அமலுக்கு வந்து உள்ளதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை

அரசுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய சட்டப்படி, அரசு ஊழியர் அல்லது அதிகாரி எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக, எத்தகைய குற்றச்சாட்டு கூறப்பட்டாலும், அவர் சார்ந்த துறையின் முன் அனுமதி இன்றி, போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடாது. இந்த பாதுகாப்பு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.அதேசமயம், தனக்காக அல்லது வேறு ஒருவருக்காக, ஏதாவது பிரதிபலனை ஒரு அதிகாரி பெற்றாலோ, பெற முயற்சி செய்தாலோ, அதற்காக கைது செய்யப்படும் வழக்குகளில், போலீசார் விசாரணை நடத்த, முன் அனுமதி பெறத் தேவை இல்லை.புதிய சட்டப்படி, அரசு ஊழியருக்கு பிரதிபலன் அளிப்பவர் மற்றும் அளிப்பதாக வாக்குறுதி தருபவருக்கு, ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப் படலாம்.

தீர்ப்பு

ஊழல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு வழங்க, அதிகபட்சம், இரண்டு ஆண்டுகாலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதிய, ஊழல் ஒழிப்புசட்டத்தில், அரசு ஊழியர்கள் தவிர, அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், வங்கி துறையை சேர்ந்தோர் ஆகியோருக்கும், சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குஎதிராக புகார் தரப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆணையத்திடம், முன் அனுமதி பெற்ற
பின்பே, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், விசாரணை நடத்த முடியும்.லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கும் சட்டம், ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

7 நாளில் புகார் செய்யணும்!

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால், லஞ்சம் தர நிர்ப்பந்தம் செய்யப்படும் பொதுமக்களை பாதுகாக்க, புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, அரசு அதிகாரிகள் லஞ்சம் தரும்படி, யாரையாவது கட்டாயப்படுத்தினால், அது பற்றி, ஏழு நாட்களுக்குள், சம்பந்தப்பட்டோர், விசாரணை அதிகாரியிடம் அல்லது போலீசில் புகார் செய்ய வேண்டும்.லஞ்சம் வாங்குவோருக்கு, புதிய சட்டத்தின் கீழ், குறைந்தபட்சம், மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த தண்டனையை, ஏழு ஆண்டு வரை நீட்டிக்கவும், சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.லஞ்சம் தரும் வர்த்தக நிறுவனங்களும், புதிய சட்ட வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, வர்த்தக நிறுவனத்துடன் தொடர்புள்ள நபர், அரசு அதிகாரிக்கு லஞ்சம் தந்தாலோ, தருவதாக வாக்குறுதி அளித்தாலோ, அபராதம் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...