Tuesday, January 1, 2019

மனசு போல வாழ்க்கை 34: அறிவுரைகளும் அனுபவங்களும்

Published : 17 Nov 2015 11:32 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

மறுபதிவு




பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிள்ளைகள் வாழ்கிறார்கள். கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு. சிற்சில மாறுதல்களோடு. கொஞ்சம் வேறுபாடுகளுடன். ஆனால் ஆதார வாழ்க்கை நம் பெற்றோர்களுடையதுதான். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பெற்றோர்களிலிருந்து தொடங்கி நம் முன்னோர்கள் வரை பலரிடமிருந்து பெற்றிருக்கிறோம்.

இதை விஞ்ஞானம் மரபணுக்களின் காரணம் என்கிறது. முன்னோர் செய்த வினை என்று ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக, இந்து மதம் பூர்வ ஜென்மம் என்றும் ஜென்மங்கள் என்றும் சொல்லும். உளவியலாளர்களில் ஒரு சாரார் தட்டையாக நாம் எல்லாவற்றையுமே பெற்றோரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் உங்கள் நம்பிக்கைகளும் சார்பு நிலைகளும் மாறுபடலாம். ஆனால், பெற்றோர்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் குழந்தைகள் வாழத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொதுவாக யாரும் மறுக்கமாட்டார்கள்.

யாரோட ஜெராக்ஸ்?

அப்பா, அம்மா, தாத்தாக்கள், பாட்டிகள் என நிறைய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால் நாம் ஒரு கார்பன் காப்பியாகயாகவோ ஜெராக்ஸ் நகலாகவோ மட்டும் இல்லாமல் ரசமான கலவையாக இருக்கிறோம். ஒவ்வொருவரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கியிருக்கிறோம். சில பண்புகள் தூக்கலாகத் தெரியும். பல உள்ளார்ந்து இருக்கும். மிகச் சில பண்புகள் நமக்கே தெரியாமல் என்றோ ஒரு நாள் பீறிட்டுக்கொண்டு வரும்.

இந்த ஒற்றுமைகளைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தையின் உருவ ஒற்றுமைகளில் இது ஆரம்பமாகும்.

“அப்படியே அம்மா தான்” , “நெத்தி மட்டும் தாத்தா. மத்தபடி அவங்க பக்கம்தான்”, “ அப்படியே டிட்டோவா பொள்ளாச்சி ஃபீச்சர்ஸ்”, “மீசையை ஒட்ட வச்சா அப்படியே அவள் அவங்கப்பாதான். அப்படியேதான் வருவா.” என்று குழந்தையைப் பார்த்து அடிக்கப்படும் டயலாக்குகள் நமக்குத் தெரியும்தானே!

உருவ ஒற்றுமைகளுக்குப் பிறகு சுபாவங்கள் அலசப்படும்.

“அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என்ன கோபம் பாரு!” “என்னா அழுத்தம் பாரு. அவ அம்மாவே தான்.” “எப்படி மழுப்பறா பாரு. அவ அத்தை இப்படித்தான் நழுவுவா எதைக் கேட்டாலும்!”

வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் வாழ்வின் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடப்பதையும் உணரலாம். தாயின் அதே துயரம் மகள் வாழ்விலும் நடக்கும். தந்தை செய்த அதே தவறை மகனும் செய்வார். வாழ்வின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் இப்படிப்பட்ட பல ஒற்றுமைகளைக் பார்ப்பீர்கள். இவை யதேச்சையானவை அல்ல.

அறிவுரைகளும் அனுபவங்களும்

பாஸ்ட் லைஃப் ஹீலிங் என்று ஒன்று உண்டு. கடந்த காலத்தின் கர்ம வினைகளைக் களைவதற்கான சிகிச்சை முறை. மதங்கள் அனைத்துமே கர்மவினைகளைப் போக்கத்தானே முயல்கின்றன?

கர்ம வினை என்பதை முதலில் எளிமைப்படுத்துவோம். ஒரு செயலைச் செய்து அதிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு அதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம். ஆனால் செயல் ஏற்படுத்திய பாதிப்பு நமக்கு வந்து விடுகிறது. அந்த பாதிப்பைப் பிறகு குறைக்கப் பார்க்கிறோம். அதன்பின் அந்த அனுபவத்தால் மற்றவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளிடம் அதைச் செய். இதைச் செய்யாதே. இது பாவம். அது புண்ணியம் என்று அறிவுரை சொல்கிறோம்.

ஆனால் அறிவுரைகளை விட அனுபவங்கள்தான் சக்தி வாய்ந்தவை. அப்பாவின் தவறு மகனுக்குப் புரியாது, பட்டுத் தெரியும் வரை. படுவதற்கு முன் தெரிந்து கொள்ள முடியாதா என்பதுதான் ஒவ்வொரு தகப்பனின் ஏக்கமும். ஆனால் தீ சுடும் என்று எவ்வளவு சொன்னாலும் தொட்டால் தானே தீயின் குணம் தெரியும்? இதனால் தான் எவ்வளவு சொல்லியும் தவிர்க்க இயலாமல் பெற்றோர்களின் தவறுகள் பிள்ளைகளால் மீண்டும் செய்யப்படுகின்றன.

அறிவுரைகள் எந்தக் காலத்திலும் பெரிய பலனை அளித்ததில்லை. அறிவுரைகள் சொல்வதை விட நம் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதுதான் முக்கியம்.

பிள்ளைகள் பார்த்துத் தெரிந்துகொள்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. பெற்றோர்கள் சொல்வது முக்கியமில்லை. செய்வது தான் முக்கியம்.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்று சொல்லிவிட்டு போன் வரும் போது “நான் வீட்டில் இல்லைன்னு சொல்லு” என்று சொல்லும் அப்பாவிடம் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும்?

“பொய் சொல்லலாம்; ஆனால் பொய் சொல்லக் கூடாது என்று பேசிக்கொள்ள வேண்டும்!” என்றுதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.

மோசமான கருத்துள்ள திரைப்படத்தையோ தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாமல் பெற்றோர்கள் பார்க்கும்போது குழந்தைகள் அதை சம்மதமாகவே என எடுத்துக்கொள்வார்கள்.

தேர்வு அவர்கள் கையில்

நம் பழக்கங்கள், நாம் பயன்படுத்தும் சொற்கள், நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் எனக் குழந்தைகள் நம்மை நகல் எடுக்கின்றன.

“ நான் அதிகாலை எழுந்திருக்கிறேன். அவன் அப்படி இல்லையே. இதையெல்லாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களிடமிருந்து இதைத்தான் குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தேர்வு செய்வது அவர்கள் கையில். ஆனால் உங்கள் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையோ அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நீங்கள் காட்டும் உலகம்தான் அவர்களுக்கு முதல் உலகம். பிறகுதான் அவர்கள் வாழ்வில் நண்பர்கள், ஊடகம், பயணங்கள் என மற்ற வகையான தாக்கங்கள் நிகழ்கின்றன.

பெற்றோர்களின் வாழ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு, உங்கள் வாழ்வைச் சீராக்குங்கள். அவைதான் அடுத்த சந்ததிக்கு நீங்கள் செய்யும் மூலதனம். என் வாழ்க்கையை என் பிள்ளை அப்படியே பெறட்டும் என்று சொல்ல முடிந்தால் நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.

உங்கள் வாழ்வைச் செப்பனிடும்போது உங்கள் பிள்ளைகள் வாழ்வு சீராகும். அதனால் மனசு போல வாழ்க்கை என்பது உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் மனசு தான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
தமிழகம் முழுவதும் நாளை முதல் ஆர்டிஓ அலுவலகங்களில் பணமில்லா பரிவர்த்தனை



கி.மகாராஜன் 01.01.2019

தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்து சேவைகளுக்கும் ஆன் லைனில் மட்டுமே பணம் செலுத்தும் பணமில்லா பரிவர்த்தனைத் திட்டம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை பழகுநர், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்தல், ஆர்சி புத்தகத் தின் நகல் பெறுதல், முகவரி மாற்றம் போன்ற சில சேவைகளுக்கு மட்டும் ஆன்லைனில் பணம் வசூலிக்கப்பட்டது.

ஜன. 1 முதல் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி செலுத்துதல், வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளுக்கும் இணையதளம் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். பின்னர் ஆன்லைனில் பணம் கட்டியதற்கான ஒப்புகைச் சீட்டுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி எளிதில் சேவையைப் பெறலாம்.

மதுரையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் (மதுரை மத்தி) தலைமை வகித்தார்.

இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னர், மேக்ஸிகேப் உரிமையாளர்கள் சங்கத்தினர், சுற்றுலா பேருந்து, ஆட்டோ உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலு வலக சேவைகளுக்கு இணைய தளம் மூலம் பணம் செலுத்துவது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
பெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம்

By அர்ஜுன் சம்பத் | Published on : 01st January 2019 03:03 AM 

தனியார் கட்டண சேனல்களுக்கு (கேபிள் டி.வி. மற்றும் டிடிஎச் உள்ளிட்டவை) புதிய கட்டணங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') விரைவில் அமல்படுத்த உள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடிஎச் முறை மூலம் மட்டுமே இனி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைப் பார்க்க முடியும்.

இலவச சேனல்களைக் பார்ப்பதற்குக்கூட செட்-ஆப் பாக்ஸ் அல்லது டிடிஎச் நிறுவனத்துக்கான கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக தமிழக அரசுக்குச் சொந்தமான அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70 சந்தா செலுத்தி கட்டணச் சேனல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்களைக் கண்டு களித்துவந்த பொது மக்கள் இனிமேல் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

"டிராய்' விதிமுறைகளின்படி விரும்பும் கட்டணச் சேனல்களைத் தேர்வு செய்து அந்த சேனல்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி மட்டுமே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களைக் காண முடியும். கட்டணத்துடன் அதற்கான ஜிஎஸ்டி-யும் சேர்த்து பொதுமக்கள் செலுத்த வேண்டும். ஒருவகையில் பேக்கேஜ் முறையில் தாங்கள் விரும்பாத, பார்க்காத சேனல்களுக்கும் கட்டணம் செலுத்தி வந்த பொதுமக்களுக்கு இது நன்மை செய்வதாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு தனியார் கட்டண சேனல்களுக்கும் "டிராய்' மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது அனைத்துக் கட்டண சேனல்களும் தங்களுக்கான கட்டணத்தை வெளிப்படையாக அறிவித்து விளம்பரம் செய்து வருகிறார்கள்.

வருங்காலத்தில் பொது மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களைப் பார்த்திட குறைந்தபட்சம் மாதம் ரூ.130 மற்றும் இதற்கான ஜிஎஸ்டி விதிப்புடன் சேர்த்து ரூ.153.40 முதல் ரூ.300 வரை செலவு செய்ய நேரிடும். இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். நடுத்தர குடும்பத்தினர் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க முடியாது.
தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70-க்கு கட்டணச் சேனல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பார்த்து வந்த மக்கள், இனிமேல் மூன்று மடங்கு கட்டணத்தை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் .

இது ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்துடன் உருவாக்கிய அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாக அமைந்துள்ளது.

டிஜிட்டல் மயமாக்குதல் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இனி அனலாக் முறை சிக்னல்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கேபிள் டி.வி. வர்த்தகத்தில் தனியார் தொலைக்காட்சிகளுக்குச் சாதகமாக இருந்த சூழலை மாற்றிடவும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் சென்று கொண்டிருந்ததைத் தடுக்கவும் இந்தத் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை அழிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

கேபிள் டிவி தொழிலில் உள்ள ஏகபோக முறையை ஒழித்துக் கட்டவும், அரசுக்கு வந்து சேரவேண்டிய வருவாய் தனியார் நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழக அரசு கேபிள் டி.வி.நிறுவனம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே தமிழக அரசு கேபிள் டி.வி. யை பலவீனப்படுத்தி ஒழித்துக் கட்ட சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
38 லட்சம் வாடிக்கையாளர்களுடன் பலம் பொருந்திய தமிழகத்தின் பெரிய நிறுவனமாக மக்களுக்குச் சேவை செய்துவரும் அரசு கேபிள் டி.வி.க்குப் போட்டியாக தனியார் டிடிஎச் நிறுவனங்கள் மற்றும் தனியார் செட்-ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மக்களுக்குத் தேவையான இணையதள சேவைகளும் வழங்கப்படுகின்றன.

தொடக்கம் முதலே மத்திய அரசின் "டிராய்' நிறுவனம் தமிழக அரசு கேபிள் டிவிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை ஒவ்வொரு விஷயத்திலும் தாமதப்படுத்தி வருகிறது. உரிய அங்கீகாரத்தை வழங்க பல்வேறு விதமான சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு முறையும் தமிழக அரசு சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை நடத்தி வருகிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கத்தைத் தடை செய்ய வேண்டும். கொள்ளை லாபநோக்கத்துடன் கட்டண சேனல்களை தனியார் தொலைக்காட்சி முதலாளிகள் நடத்துகின்றனர்.
ஏற்கெனவே விளம்பரம் மூலம் அதிக வருவாய் ஈட்டி லாபகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள், திடீரென கட்டண சேனல்களாக மாறி மேலும் கொள்ளை லாபம் அடிக்கின்றன.

கட்டண சேனல்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி-யையும் சந்தாதாரர்களே (பொதுமக்கள்) செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சிகளான தூர்தர்ஷன் உள்பட ஏராளமான இலவச சேனல்களும் மேலும் தனியாருக்குச் சொந்தமான இலவசச் சேனல்களும் உள்ளன.

இனிமேல் இவற்றை கேபிள், செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடி எச் முறை மூலம் காணவும் குறைந்தபட்ச கட்டணமான ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்தித்தான் ஆகவேண்டும். சன் டி.வி. குழுமம், விஜய் டி.வி. குழுமம், ராஜ் டி.வி. குழுமம் உள்ளிட்டவை இலவச சேனல்களாகவே இருந்தன; லாபகரமாகவும் இயங்கி வந்தன. இவர்கள் தங்கள் குழுமத்தின் ஏதாவது ஒரு சேனலை இலவசமாக கொடுத்துவிட்டு, மீதி அனைத்துச் சேனல்களையும் கட்டணச் சேனல்களாக மாற்றி "பேக்கேஜ்' முறை அமல்படுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர்.

இனி அரசுக்குச் சொந்தமான இலவசேனல்களைக் பார்ப்பதற்குக்கூட, அதாவது தொலைக்காட்சி பார்ப்பதற்குகூட குறைந்தபட்ச கட்டணமாகிய ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கேபிள் டி.வி. தொழிலில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் செல்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') அறிவித்துள்ள மக்களே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் முறையினால் ஏற்படும் சிறு நன்மை மட்டுமே உண்டு. மற்றபடி "டிராய்' நிர்ணயித்துள்ள கட்டணங்கள் மிகவும் அதிகமாகும்.

எனவே, கட்டண சேனல்களை தடை செய்யும் வகையில் விதிமுறைகளிலும் சட்டத்திலும் "டிராய்' நிறுவனம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நாடு முழுவதும் கட்டணச் சேனல் முறையைத் தடை செய்ய வேண்டும்.
தனியார் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரம் மூலம் லாபம் ஈட்டி வருகின்றன. அவற்றுள் சில கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கத்தில் கட்டண சேனல்களாக மாற்றுவதற்குத் தடை செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் கட்டண சேனல்களையும் தடை செய்ய வேண்டும். இது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாகும்.
இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குச் சேனல்கள், செய்திச் சேனல்கள், கல்வி மற்றும் மருத்துவத்துக்கு உதவி செய்யக்கூடிய அனைத்துச் சேனல்களும் இலவசமாகவே வழங்கப்படவேண்டும்.ஸ்ரீ
தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் தனியார் டி.வி. சேனல்கள், கொள்ளை லாபம் அடிக்க துணைபோகும் வகையில் புதிய சட்டம் மற்றும் விதிமுறைகள் அமைந்துள்ளன.
தமிழக அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை "டிராய்' அங்கீகரித்து, அதிகாரம் கொடுத்து மக்கள் குறைந்த கட்டணத்தில் (ரூ.70) அனைத்துச் சேனல்களையும் பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர
வேண்டும்.

ஏழை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவையாக விளங்கும் அரசு கேபிள் டிவிக்கு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கவேண்டும். கேபிள் டிவி தொழிலில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.
கேபிள் வயர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி மற்றும் மின் கம்பங்களில் கேபிள் கொண்டு செல்ல அனுமதி வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கட்டண சேனல்களின் கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவும் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை மேம்படுத்தவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் ஒளிபரப்பை மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்கள் மூலம்தான் ஒளிபரப்புகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்களில் அரசு சேவை நிறுவனங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வினாலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பெரும் சுமையாக வரவிருக்கின்ற கேபிள் டிவி கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்.

கட்டண சேனல்களை பொதுமக்கள் புறக்கணித்து மத்திய அரசின் தூர்தர்ஷன் பொதிகைச் சேனல்களையும் இலவச் சேனல்களையும் மட்டுமே ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பெரும் சுமையாக வரவிருக்கும் கேபிள் டி.வி. கட்டண உயர்விலிருந்து தப்பிக்க முடியும்.

கட்டுரையாளர்:
தலைவர், இந்து மக்கள் கட்சி.
dinamalar 01.01.2019

'கஜா' புயல் நிவாரணத்திற்காக, தமிழகத்திற்கு ஏற்கனவே, 173 கோடி ரூபாய் அளித்த நிலையில், நேற்று, 1,146 கோடி ரூபாயை விடுவித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புயல் சேதத்திற்காக கேட்ட இடைக்கால நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசும், பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில், நவ., 16 அதிகாலை, 'கஜா' புயல், கரையை கடந்தது. புயலால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. 

டெல்டா மாவட்டங்கள், முழுமையாக பாதிக்கப்பட்டன.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மக்கள், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தனர். புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, நவ., 20ல், டில்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார்.'புயலால்



பாதிக்கப்பட்ட பகுதிகளில், தற்காலிக புனரமைப்புக்கு, 1,431 கோடி ரூபாய்; நிரந்தர புனரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்கு, 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாய் வழங்க வேண்டும். புயல் சேதங்களைப் பார்வையிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
இதையேற்று, மத்திய குழுவை அனுப்ப, பிரதமர் உத்தரவிட்டார். மத்திய குழுவினர், நவ., 23 முதல், 27 வரை, புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று, சேதங்களை பார்வையிட்டனர். அவர்களிடம், தமிழக அரசு சார்பில், இடைக்கால நிவாரணமாக, 2,700 கோடி ரூபாய் வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, மத்திய குழுவினர் ஆய்வு முடித்தபின், புயல் நிவாரணப் பணிகளுக்கு

உதவ, மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, மத்திய அரசின் பங்காக, 353.70 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்தது. அதன்பின், மத்திய வேளாண்மைத் துறை சார்பில், தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 173 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்டது. 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், நேற்று, உயர்நிலைக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர், அருண்ஜெட்லி, வேளாண்துறை அமைச்சர், ராதா மோகன் சிங், நிதி ஆயோக் துணைத் தலைவர், ராஜிவ்குமார் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கஜா புயல் நிவாரணமாக, தமிழகத்திற்கு, 1,146 கோடி

ரூபாய் ஒதுக்க, அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு, இடைக்கால நிவாரணமாக, 1,146 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த உதவியால், தங்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான சலுகைகள் கிடைக்கும் என, டெல்டா மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கூடுதல் தொகை

தமிழகத்தில், வர்தா புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானபோது, தமிழக அரசு, மத்திய அரசிடம், 22 ஆயிரத்து, 573 கோடி ரூபாய் நிதி கேட்டது. மத்திய அரசு, 266.17 கோடி ரூபாய் ஒதுக்கியது.ஒக்கி புயலால், தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசிடம், 5,255 கோடி ரூபாய் நிவாரணம் கோரியது. இதற்கு, 133 கோடி ரூபாயை மட்டும், மத்திய அரசு வழங்கியது. தற்போது, கஜா புயல் நிவாரணத்திற்கு, இடைக்கால நிவாரணமாக, 1,431 கோடி ரூபாய் கேட்ட நிலையில், இரண்டு கட்டமாக, 1,319 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

நிதியின்றி தவிக்கும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம்

Added : ஜன 01, 2019 04:39 |

போதிய நிதி இல்லாததால், 'லேண்ட் லைன்' இணைப்பை, திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஆறு மாதங்களாக, 'டிபாசிட்' தொகையை வழங்க முடியாமல், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர், வி.சத்தியபாலன் கூறியதாவது:என் வீட்டிற்கு, பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் இணைப்பு பெற்றிருந்தேன். நீண்ட காலமாக பயன்பாடின்றி இருந்ததால், அதை, ஜூனில், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தேன். இதற்கான டிபாசிட் தொகையை, விதிமுறைப்படி, 90 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்; இதுவரை, டிபாசிட் தொகை தரப்படவில்லை. தாமதமானால் வட்டியுடன் தர வேண்டும். என்னைப் போன்று, ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:இணைப்பை திருப்பித் தரும் வாடிக்கையாளர்களுக்கு, டிபாசிட் தொகையை வழங்க, நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை. இதனால், 90 நாட்களுக்குள், டிபாசிட் தொகையை வழங்க முடியவில்லை.ஆறு மாதங்களாக, யாருக்கும் டிபாசிட் தொகை கொடுக்கப்படவில்லை. நெருக்கடி தரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், டிபாசிட் தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

சுதா சேஷையன் பொறுப்பேற்பு

Added : ஜன 01, 2019 04:56


சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தர், சுதா சேஷையன், நேற்று பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக இருந்த, டாக்டர் கீதாலட்சுமியின் பதவி காலம், டிச., 27ல் முடிந்தது. புதிய துணைவேந்தர்இதையடுத்து, சென்னை மருத்துவ கல்லுாரியில், துணை முதல்வராக பணியாற்றி வந்த, டாக்டர் சுதா சேஷையனை, புதிய துணைவேந்தராக, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக, டாக்டர் சுதா சேஷையன், நேற்று பொறுப்பேற்றார்.

முக்கியத்துவம் :

நிகழ்ச்சியில், சுதா சேஷையன் பேசுகையில், ''பல்கலையை, முன்மாதிரி மருத்துவ பல்கலையாக மாற்ற முயற்சி மேற்கொள்வேன். ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ''எனக்கு, பொன்னாடை, பூ, பழங்கள் தர வேண்டாம்; அதற்கு பதிலாக உங்கள் அன்பை கொடுங்கள்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணியர் நேரடியாக அந்தமான் செல்லலாம்

Added : ஜன 01, 2019 06:15



புதுடில்லி : அந்தமானில், போர்ட்பிளேர் நகரில் உள்ள விமான நிலையம், அதிகாரபூர்வ குடியேற்ற சோதனை மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலா பயணியர், நேரடியாக, அந்தமானுக்கு பறந்து செல்லலாம்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், போர்ட்பிளேர் விமான நிலையத்தை, அதிகாரபூர்வ குடியேற்ற சோதனை மையமாக அங்கீகரித்து உள்ளது. மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போலீஸ் கண்காணிப்பாளர், குடியேற்ற சோதனை மையத்தின், சிவில் ஆணையராக, நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தேவையான ஆவணங்களுடன் வரும் வெளிநாட்டவர், அந்தமானுக்கு நேரடியாக, விமானம் மூலம் சென்றடையலாம். அதேபோன்று, அங்கிருந்து, நேரடியாக, தங்கள் நாட்டிற்குச் செல்லலாம்.இதற்கு முன், அந்தமான் செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், இந்தியாவில் உள்ள சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள குடியேற்ற சோதனை மையங்களுக்கு வந்து தான், செல்ல வேண்டியிருந்தது.

சமீபத்தில், அந்தமானில் உள்ள சென்டினல் பழங்குடியினர் தீவுக்கு சென்ற அமெரிக்கர், சென்டினல் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து, உலகம் முழுவதும் பிரபலமான பகுதியாக, அந்தமான் உருவெடுத்துள்ளது. அந்தமானுக்கு வருகை தரும் வெளிநாட்டவர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...