வெளிநாட்டு சுற்றுலா பயணியர் நேரடியாக அந்தமான் செல்லலாம்
Added : ஜன 01, 2019 06:15
புதுடில்லி : அந்தமானில், போர்ட்பிளேர் நகரில் உள்ள விமான நிலையம், அதிகாரபூர்வ குடியேற்ற சோதனை மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலா பயணியர், நேரடியாக, அந்தமானுக்கு பறந்து செல்லலாம்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், போர்ட்பிளேர் விமான நிலையத்தை, அதிகாரபூர்வ குடியேற்ற சோதனை மையமாக அங்கீகரித்து உள்ளது. மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போலீஸ் கண்காணிப்பாளர், குடியேற்ற சோதனை மையத்தின், சிவில் ஆணையராக, நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தேவையான ஆவணங்களுடன் வரும் வெளிநாட்டவர், அந்தமானுக்கு நேரடியாக, விமானம் மூலம் சென்றடையலாம். அதேபோன்று, அங்கிருந்து, நேரடியாக, தங்கள் நாட்டிற்குச் செல்லலாம்.இதற்கு முன், அந்தமான் செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், இந்தியாவில் உள்ள சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள குடியேற்ற சோதனை மையங்களுக்கு வந்து தான், செல்ல வேண்டியிருந்தது.
சமீபத்தில், அந்தமானில் உள்ள சென்டினல் பழங்குடியினர் தீவுக்கு சென்ற அமெரிக்கர், சென்டினல் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து, உலகம் முழுவதும் பிரபலமான பகுதியாக, அந்தமான் உருவெடுத்துள்ளது. அந்தமானுக்கு வருகை தரும் வெளிநாட்டவர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment