Monday, January 28, 2019

தலையங்கம்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்



கடந்த வாரம் புதன், வியாழன் ஆகிய இரு தினங்களில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிர்பார்த்த அளவிற்கு மேலாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஜனவரி 28 2019, 04:00

கடந்த வாரம் புதன், வியாழன் ஆகிய இரு தினங்களில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிர்பார்த்த அளவிற்கு மேலாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகளைவிட, அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் மாநாட்டில் 9 நாடுகள் பங்கேற்றன. மேலும் அந்த மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் ரூ.62 ஆயிரத்து 738 கோடி மதிப்பிலான 61 நிறுவனங்களின் முதலீடுகள் மட்டுமே பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன என்றும், இதன் மூலம் 96 ஆயிரத்து 341 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன என்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். செயலாக்கத்தில் உள்ளன, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அறிவித்திருந்தநிலையில், எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? எவ்வளவு பேர் வேலைவாய்ப்புகளை பெற்றுவிட்டார்கள்? என்பதை அறியத்தான் தமிழகம் காத்திருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட பெஞ்சு, 2015–ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அதன்படி, எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது? அவற்றின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து தமிழக அரசின் தொழில்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறது. இப்போது நடந்த 2–வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், இந்த 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தவிர, 12 ஆயிரத்து 360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை தொடங்கும் வகையிலான ஒப்பந்தங்கள்தான். நிச்சயமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விரைவில் தொடங்கப்படுவதற்கும், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் இந்த மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டால் 10,56,141 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். வீட்டுவசதி, சுற்றுலா, வேளாண்மை, உயர்கல்வி, கல்வி, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் என்று பலதரப்பட்ட புதிய தொழில்களுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் பல பெரிய நிறுவனங்களும் விரிவாக்க திட்டங்களுக்கு முன்வந்துள்ளன.

கனரக தொழில்களுக்காக மட்டும் 136 ஒப்பந்தங்களும், வீட்டு வசதி துறையில் 70 ஒப்பந்தங்களும், உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்காக 50 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன. இவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில் இதில் 70 சதவீதத்திற்கு மேலான ஒப்பந்தங்களையாவது நிறைவேற்றி முடிக்கும்வகையில், இந்த மாநாட்டை நடத்தி காட்டிய முனைப்பை விட அதிகமான முனைப்பை தமிழக அரசு காட்ட வேண்டும். அந்த பணிகளும் இதேவேகத்தில் தொய்வில்லாமல் நடந்து தொழில்துறையில் தமிழகம் முதல் இடத்தை பெறவும், லட்சக்கணக்கான படித்த, படிக்காத, திறன் படைத்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுமே தனது இலக்காகக் கொண்டு தமிழகஅரசு முழுமூச்சுடன் செயல்படவேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுவதோடு மட்டுமல்லாமல், அது நிறைவேற்றப்படுவதில்தான் சாதனை இருக்கிறது என்பதை முழுமையான குறிக்கோளாகக்கொண்டு தமிழகஅரசு வெற்றி காண வேண்டும்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...