Saturday, January 26, 2019

227 கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் ரத்து?

Added : ஜன 26, 2019 05:43


சென்னை: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, லட்சக்கணக்கில் கட்டண பாக்கி வைத்துள்ள, 227 கல்லுாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. கட்டண பாக்கி செலுத்தாவிட்டால், அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்றும், எச்சரிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு மற்றும்அங்கீகாரம் பெற்று, 700 கல்லுாரிகள் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகள், ஆண்டுதோறும், தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,யிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.அதேபோல, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், பாடத்திட்ட இணைப்புக்கு அங்கீகாரம் பெற வேண்டும்.ஒவ்வொரு கல்லுாரியும், இணைப்பு அங்கீகாரம் பெற, கல்வியியல் பல்கலைக்கு, ஆண்டுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரத்தை பெற, கல்லுாரிகள் விண்ணப்பிக்குமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.'அவ்வாறு விண்ணப்பிக்கும் கல்லுாரிகள், உடனடியாக, இணைப்பு கட்டணம் தொடர்பான பழைய பாக்கியை செலுத்தவேண்டும்' என, பல்கலை பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு கல்லுாரியும், லட்சக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளன.இதற்காக, 227 கல்லுாரிகளுக்கு, பல்கலையில் இருந்து, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அந்த கல்லுாரிகளின் பட்டியலையும், பல்கலை வெளியிட்டுள்ளது. அவற்றில், வேலுாரை சேர்ந்த, ஒரு ஆசிரியர் பயிற்சி கல்லுாரி, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக பாக்கி வைத்துள்ளது.திருச்சியை சேர்ந்த மற்றொரு கல்லுாரியும், ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இந்த கல்லுாரிகள், நிலுவை கட்டணத்தை செலுத்த தவறினால், அவற்றுக்கு, வரும் கல்வி ஆண்டில் இணைப்பு அங்கீகாரம் நீடிக்கப்பட மாட்டாது என, பல்கலை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024