Saturday, January 26, 2019

கைவிரிப்பு!
10 சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க மறுப்பு
சட்டம் செல்லுமா என விசாரிக்க கோர்ட் சம்மதம்
 
dinamalar 26.01.2019

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது; இருப்பினும், அந்த சட்டம் செல்லத்தக்கதா என, ஆராய்வதாக,நீதிபதிகள் கூறியுள்ளனர்.


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த, காங்., மூன்று மாநிலங்களில் வென்று, ஆட்சியை கைப்பற்றியது; இது, இந்த மாநிலங்களில் ஆட்சி செய்து வந்த, பா.ஜ.,வுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. இதையடுத்து, வரும், ஏப்ரல், மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே, மக்கள் மத்தியில், பா.ஜ.,வுக்கு உள்ள அதிருப்தியை போக்கும் வகையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அவற்றில் ஒன்றாக, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோருக்கு, பொதுப் பிரிவில், கல்வி, வேலை வாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு

அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு தயாரித்தது. இந்த மசோதா, லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேறியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுடன், சட்டமானது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 'ஜன்ஹித் அபியான்' என்ற அரசு சாரா அமைப்பு உட்பட, பலர் வழக்குதொடர்ந்துள்ளனர்.

அந்த மனுக்களில், 'பொருளாதார ரீதியில் மட்டுமே இடஒதுக்கீடு அளிக்க முடியாது; இந்த சட்டம், '50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது' என்ற நீதிமன்ற உத்தரவை மீறுவ தாக உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதி, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு முன், நேற்றுவிசாரணைக்கு வந்தன.

மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீடு மசோதாவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. இருப்பினும், அந்த சட்டம், செல்லுபடியாகுமா என்பதை ஆராய்வதாக நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கில், மூன்று வாரங்களில் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, ''இந்த மனுக்கள், விசாரணைக்கு ஏற்றவை அல்ல. மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது,'' என்றார்.

அந்தசமயம், நீதிமன்றத்திற்கு வந்திருந்த வேறு சில வழக்கறிஞர்கள், ஆவேசமாக, தங்கள் வாதத்தை முன்வைக்க துவங்கினர். இதையடுத்து, 'மனுக்கள்

தொடர்பாக பதில் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' மட்டுமே தற்போது அனுப்பப்படுகிறது. சச்சரவு ஏற்படுத்தும் நோக்கில், இந்த அமர்வு முன், யாரும் வரவேண்டாம். அடுத்த வழக்கை துவக்கலாம்' என, நீதிபதிகள் கூறினர்.

பஸ்வான் வரவேற்பு

பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்பட்டோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்ததை, லோக் ஜனசக்தி கட்சி வரவேற்றுள்ளது.இது குறித்து, லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருமான, ராம்விலாஸ் பஸ்வான், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இடஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது; இதை நாங்கள் வரவேற்கிறோம்.

பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்பட்டோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம், நீதித்துறையின் ஒப்புதலை பெறும் என, முழுமையாக நம்புகிறேன்.எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பான வழக்கில், அந்த திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது; அதையும், வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024