Sunday, January 27, 2019


10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை! - நெகிழச் செய்யும் 80 வயது `மெர்சல்’ டாக்டர்

Published : 24 Jan 2019 18:09 IST

கி.பார்த்திபன்





ஏழை, நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லவே பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். மத்திய, மாநில அரசுகளே, லட்சக்கணக்கில் தொகை வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைத் தொடங்கும் அளவுக்கு, தற்போது மருந்துவக் கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன.

ஆனால், 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 80 வயது டாக்டர் கே.ஜனார்த்தனன். திரைப்படங்களில் மட்டுமே இதுபோன்ற டாக்டர்களைப் பார்த்துப் பழகிய நமக்கு, இது ஆச்சரிய தகவல்தான். மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருக்கும் அவரைப் பார்க்கச் சென்றோம்.

"சொந்த ஊர் பல்லடம். தந்தை என்.கிருஷ்ணராவ், தாய் நாகம்மை. தந்தை மருத்துவர் என்பதால், பணி நிமித்தமாக தஞ்சாவூர் வல்லத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். அங்கு பள்ளிப் படிப்பு முடித்த பின், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றேன்.

விடுதியில் தங்கிப் படிக்க செலவு அதிகம் என்பதால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்து, அங்கு கல்லூரிப் படிப்பை முடித்தேன். பின்னர், மதுரை மேலுார் வெள்ளலூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கடந்த 1966-ம் ஆண்டு தற்காலிக மருத்துவராகப் பணியில் சேர்ந்தேன். அங்கு ஓராண்டு பணிபுரிந்தேன்.

தொடர்ந்து, திருச்சியில் உள்ள காசநோய் மருத்துவமனையில் 9 மாதம் பணியாற்றினேன். அதற்குப் பிறகு, மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 1970 ஏப்ரல் மாதம் பணியில் சேர்ந்து, 1997-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். எனினும், ஆலை நிர்வாகம் வலியுறுத்தியதால், ஓய்வு பெற்ற பின்னரும் 22 ஆண்டுகளாக பணியில் உள்ளேன். அடுத்த ஆண்டுடன் இங்கு 50-வது ஆண்டை நிறைவு செய்கிறேன்" என்றவரிடம், "சிகிச்சைக்காக ரூ.10 மட்டும் கட்டணமாக பெறுகிறீர்களாமே?" என்று கேட்டோம்.

"எனது தந்தை ரூ.3 மட்டுமே மருத்துவக் கட்டணமாக பெற்றார். அவரிடமிருந்துதான் எனக்கு இந்தப் பழக்கம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாகவே ரூ.10 தான் கட்டணம். காலை 11.30 மணி முதல் 4 மணி வரை சர்க்கரை ஆலையிலும், மாலையில் மோகனூரில் உள்ள வீட்டிலும் சிகிச்சை அளித்து வருகிறேன். மாத்திரை, மருந்து எழுதித் தந்துவிடுவேன். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மட்டும் இலவசமாக மருந்து வழங்குகிறேன். அவற்றை, எனது உறவினர் ஒருவர் அன்பளிப்பாக அளித்து வருகிறார்.

பெரும்பாலும் ஏழை, எளிய மக்களே சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது முறையா? மருத்துவம் ஒரு சேவைதான். அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவது அவசியம்" என்றவரிடம், "மருத்துவம் தாண்டி வேறு எதில் கவனம் செலுத்துகிறீர்கள்?" என்றபோது, "இதுவரை ஆன்மிகம் சார்ந்து இரு புத்தகங்கள் எழுதியுள்ளேன். 'மனித இயல்பும், வாழ்க்கை நெறியும்', 'மெய்ப்பொருள்' என்ற இரு புத்தகங்கள் எழுதியுள்ளேன்" என்றார்.

தொடர்ந்து சிகிச்சையில் கவனம் செலுத்திய டாக்டர் ஜனார்த்தனன், நோயாளிகளிடம், அவர்களது குடும்ப உறுப்பினர்போல பேசியபடி, சிகிச்சை அளித்தார்.

கட்டணம் குறைவாக வாங்குவது மட்டுமின்றி, அவரது அன்பான வார்த்தை களுக்காவே ஏராளமானோர் அவரை நாடி வருகின்றனர். "ஓய்வூதியம் நிறைய வாங்குவதால்தான், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறாரோ?" என்ற சந்தேகமும் எழுந்தது. விசாரித்தபோது, அவர்

மாதம் ரூ.1000 ஓய்வூதியம் மட்டுமே பெறுவதும் தெரியவந்தது. "எனக்கு இதுவே போதும்?" என்றுகூறி நம்மை மெர்சலாக்குகிறார் ஜனார்த்தனன்.`

இந்திய மருத்துவ சங்கம் கவுரவிப்பு

டாக்டர் ஜனார்த்தனின் மருத்துவ சேவை மற்றும் அவரது எழுத்தாற்றலைக் கவுரவிக்கும் வகையில், கடந்த 2018-ல் இந்திய மருத்துவச் சங்கம் `மருத்துவ தமிழறிஞர் விருது` வழங்கியுள்ளது. இதையெல்லாம்விட, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் அவரை கடவுளாகவே பார்க்கிறார்கள்.

குறைந்த கட்டணம் மட்டுமல்ல, இவரிடம் போனாலே என்ன நோய் என்று தெளிவாகக் கண்டுபிடித்து, உரிய சிகிச்சை அளித்துவிடுவார் எனக் கருதுகின்றனர். `இந்த டாக்டரை அணுகினால் நிச்சயம் சரியாகிவிடும் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைதான் உண்மையான விருது. இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற, தொடர்ந்து உழைப்பேன்" என்கிறார் டாக்டர் ஜனார்த்தனன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024