Sunday, January 27, 2019


தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் நாளை காலை 9 மணிக்கு பணியேற்க உத்தரவு

By DIN | Published on : 27th January 2019 07:43 PM 


சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் நாளை காலை 9 மணிக்கு பணியேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவர்களின் நலன் கருதி ஜன.25-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் விடுத்த வேண்டுகோள் பலனளிக்கவில்லை.

இதையடுத்து கொடுக்கப்பட்ட அவகாசம் முடிவடைந்ததால் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிக்கு வராத 1.50 லட்சம் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு 10 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களில் 420 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் (ஜன.28) பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் நாளை காலை 9 மணிக்கு பணியேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்கால ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்கால ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. இதன் அடிப்படையில் அரசு வேலைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது. அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். தொகுப்பூதியத்தில் சேரும் ஆசிரியர்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகே சம்பளம் வழங்கப்படும் என பணி நியமன ஆணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...