Saturday, January 26, 2019


பதிப்பாளர் கணக்குப் பார்த்தால்... 

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 24th January 2019 03:07 AM |

நாற்பத்திரண்டாவது சென்னை புத்தகக் கண்காட்சி இனிதே நிறைவு பெற்றுவிட்டது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 17 நாள்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட சுமார் பதினைந்து லட்சம் பேர் வந்திருந்தனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு லட்சம் அதிகம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

வருகை தந்த வாசகர்கள் சுமார் 70 லட்சம் புத்தகங்களை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். இதன் மதிப்பு சுமார் ரூ.18 கோடி. சென்ற ஆண்டைக் காட்டிலும் சுமார் ரூ.3 கோடி அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.
வழக்கம்போல சமையல் குறிப்பு, ஜோதிடம் போன்ற புத்தகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும் அதிகம் விற்பனையானதாகத் தெரிகிறது. மேலும், தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தையொட்டி அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் பற்றிய புத்தகங்களையும் இளைய தலைமுறையினர் ஆர்வமாக வாங்கிச் சென்றிருப்பதாகக் கண்காட்சியை நடத்திய தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கண்காட்சி தொடங்கியதிலிருந்து முடியும் வரையிலும் முகநூல் உள்ளிட்ட இணையப் பொதுவெளிகளில் பதிவிடப்பட்ட பல்வேறு கருத்துகளையும் பார்க்க நேர்கையில், வழக்கம் போல சிறு பதிப்பாளர்கள் வெளியிட்ட நூல்களின் விற்பனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றே தோன்றுகிறது. அடுத்த முறை இங்கே புத்தக ஸ்டாலுக்குப் பதிலாக டீ ஸ்டால் வைப்பதே சிறந்தது என்று இடப்பட்டிருந்த பதிவு ஒன்றை சிறு பதிப்பாளர்களின் உணர்வுகளுக்கு ஒரு சோற்றுப் பதமாக எடுத்துக் கொள்ளலாம்.

இத்தனைக்கும் முன்பு போல் மொத்தப் புத்தகத்தையும் அச்சுக் கோர்த்து, குறைந்தபட்சம் 1,200 பிரதிகள் அச்சிட வேண்டிய நிலைமை இப்போது இல்லை. கணினி மூலம் தட்டச்சு செய்து, தேவையான படங்களையும் சேர்த்து ஒருமுறை மென் பிரதி தயார் செய்து ஒரு குறுந்தகட்டில் சேமித்து வைத்துவிட்டால், பிறகு அவ்வப்போது எழும் தேவைக்கு ஏற்ப நூறு நூறு பிரதிகளாகக்கூட அச்சிட்டுக்கொள்ள அறிவியல் முன்னேற்றம் வழிவகை செய்திருக்கிறது.

ஆனால், ஒவ்வொரு கண்காட்சியிலும் ஸ்டால் போட இடம் பிடித்து, புத்தகக் கட்டுகளையெல்லாம் பார்சல் செய்து எடுத்துச் சென்று, அவற்றை விற்பனை செய்யத் தேவையான நபர்களை நியமித்து முடிந்த வரையில் விற்பனை செய்தாலும் பெரிதாக ஒன்றும் லாபம் இல்லை என்பதே நிதர்சனம்.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்ற பழமொழியைச் சற்றே மாற்றி, பதிப்பாளர் கணக்குப் பார்த்தால் பத்து ரூபாய் கூட மிஞ்சாது என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கும்.

பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க எழுத்தாளர் ஒருவர் சென்றபோது, சாப்பாட்டுக்கு என்ன பண்றே என்று கேட்டாராம். கதை எழுதுகிறேன் என்றாராம் எழுத்தாளர். காமராஜர் விடவில்லை. அதனாலதான் கேட்கிறேன், சாப்பாட்டுக்கு என்ன பண்றே என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாராம். கேட்டு விட்டு கைச்செலவுக்குப் பணமும் கொடுத்தாராம்.
இன்றைய சூழலில் எழுதிப் பிழைப்பது எத்தனை சிரமமோ, அவ்வளவு சிரமம் புத்தகங்களைப் பதிப்பிப்பதிலும் இருக்கிறது. எத்தனையோ பெரிய பெரிய வெளியீட்டு நிறுவனங்கள் நொடித்துப் போனதும் உண்டு. நிர்வாகத் திறமையுடன், அதிர்ஷ்டமும் சேர்ந்துகொள்ள, இந்தத் துறையில் நீண்டகாலமாகக் கோலோச்சும் பதிப்பு நிறுவனங்களும் உண்டு.
உண்மையைச் சொல்வதென்றால், கோனார் நோட்ஸ், டி.என்.பி.எஸ்.சி. மாதிரி வினா-விடை போன்ற கல்வி மற்றும் போட்டித் தேர்வுகள் தொடர்பான புத்தகங்களை வெளியிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, இலக்கிய நூல்களைத்தான் வெளியிடுவேன் என்று உறுதியாக இருக்கும் பதிப்பாளர்களின் பாடு திண்டாட்டம்தான்.

வார, மாத இதழ்களைப் போன்று விளம்பரங்களுடன் சேர்த்து வெளியிட முடியாததாலும், சற்றே கனமான அட்டை மற்றும் தரமான அச்சுத்தாள்கள் தேவைப்  படுவதாலும், இயல்பாகவே இந்தப் பதிப்பாளர்கள் வெளியிடும் புத்தகங்களுக்கு விலை அதிகமாகத்தான் வைக்க முடியும். வாரா வாரம் ரூ.20 கொடுத்து வணிக இதழ் ஒன்றை வாங்கிப் படிப்போருக்கு, ஆண்டுக்கு ஒருமுறை ரூ.400 அல்லது ரூ.500 கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்குவதற்குத் தயக்கம் இருக்கவே செய்கிறது.

மேலும், சினிமாவை விட்டால், புத்தகங்கள் ஒன்றே பொழுதுபோக்கு என்ற காலத்தைத் தாண்டி இப்போது வெகு தொலைவு வந்து விட்டோம். தொலைக்காட்சி, கணினி, செல்லிடப்பேசி ஆகியவை புத்தகங்களைவிடக் கவர்ச்சிகரமான முறையில் நமது நேரத்தினைப் பங்குபோட்டுக் கொள்ளுகின்றன. புத்தகம் வாங்குவதே ஒரு தண்டச் செலவு என்ற எண்ணம் கொண்ட மூத்த தலைமுறையினர் இன்னொரு புறம்.
இப்படி, மகாபாரதக் கர்ணனைப் போல எல்லா வித எதிர்மறைச் சூழல்களைச் சந்தித்தபோதும் சளைக்காமல் பதிப்புத் துறையில் நீடிக்கும் அனைத்துப் பதிப்பாளர்களும் சாதனையாளர்கள்தாம். இந்த நிலையில் திருமணம் முதலிய விழாக்களில் புத்தகப் பரிசையே தருவது என்று வாசகர்களாகிய பொதுமக்கள் முடிவு செய்து முனையவும் வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் இன்னும் அதிக எண்ணிக்கையில் நூலகங்களைத் திறப்பதன் மூலம் நூலகத் துறையை விரிவுபடுத்தி, அந்தத் துறைக்கு நூலகத்துறைக்குப் பதிப்பாளர்களிடமிருந்து இப்போதைய நடைமுறையைவிட அதிக அளவில் நூல்களை வாங்குவதென்று நமது மாநில அரசும் சபதம் ஏற்று அதைச் செயல்படுத்தவும் வேண்டும்.
இந்தச் சபதங்கள் பதிப்பாளர்களின் வாழ்வுநலனுக்கு மட்டுமின்றி, குடிமக்களின் அறிவுநலனுக்கும் வழிவகை செய்யும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024