நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கருதப்படும்: பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை
By DIN | Published on : 27th January 2019 06:43 PM
சென்னை: நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் என்று கருதப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி ஜன.25-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் விடுத்த வேண்டுகோள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து கொடுக்கப்பட்ட அவகாசம் முடிவடைந்ததால் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிக்கு வராத 1.50 லட்சம் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு 10 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களில் 420 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் (ஜன.28) பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது.
அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம். அப்படி வர தவறினால் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 ஆம் தேதிக்கு பின்னர் பணிக்குவருபவர்கள் அதே பள்ளியில் பணியாற்ற இயலாது. ஏதேனும் ஒரு காலிப்பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உட்பட்டே பணியில் சேர வேண்டியது இருக்கும்.
No comments:
Post a Comment