Wednesday, April 1, 2020

எஸ்.பி.ஐ., ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி நிதி

Added : மார் 31, 2020 21:06

சென்னை :கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர்களின், இரண்டு நாள் சம்பளமான, 100 கோடி ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 2.56 லட்சம் ஊழியர்களின், இரண்டு நாள் சம்பளமான, 100 கோடி ரூபாய், பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.'வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தாமாக முன்வந்து, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு, தங்களது இரண்டு நாள் சம்பளத்தை வழங்கி உள்ளனர்.

எஸ்.பி.ஐ., தன் ஆதரவை, அரசுக்கு தொடர்ந்து வழங்கும்' என, வங்கி தலைவர், ராஜ்னிஷ்குமார் தெரிவித்துள்ளார். வங்கியின் ஆண்டு லாபத்தில், 0.25 சதவீதம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் என, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பெருகும் குடும்ப வன்முறை

Updated : ஏப் 01, 2020 02:59 | Added : ஏப் 01, 2020 02:56 

புதுடில்லி : நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குடும்ப வன்முறை புகார்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24 நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதுமுதல் அனைத்து நிறுவனங்கள் வணிக வளாகங்கள் தொழிற்சாலைகள் திரையரங்குகள் உள்ளிட்டஅனைத்தும் மூடிக்கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏராளமானோர் வேலையிழப்பு ஊதியக் குறைவு போன்ற அச்சம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இத்துடன் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கணவன் மனைவி மற்றும் குடும்பத்தினருடனான மோதல் அதிகரித்து வன்முறையில் முடிகிறது.

இது குறித்து தேசியமகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது: மார்ச் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய மகளிர் ஆணையத்திற்கு 58 புகார்கள் வந்துள்ளன. அனைத்தும் மின்னஞ்சல் புகார்கள். பெரும்பாலும் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் இருந்து அதிக புகார்கள் பதிவாகி உள்ளன.வீட்டில் மன உளைச்சலுடன் உள்ள ஆண்கள் அதை பெண்கள் மீது வெளிப்படுத்தும் போது மோதல் ஏற்படுகிறது. இது தவிர குறைந்த வருவாய் பிரிவு பெண்கள் அஞ்சல் கடிதம் மூலம் அனுப்பிய புகார்களையும் சேர்த்தால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஊரடங்கால் அஞ்சல் புகார்கள் குறைவாக உள்ளன. நாடு தற்போதுள்ள சூழலில் எங்களை அணுக முடியாது என பல பெண்கள் நினைக்கின்றனர். அது தவறு. அவர்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கலாம். அல்லது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கூறலாம்.இவ்வாறு அவர் கூறினார். இந்தாண்டு ஜனவரியில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 270 புகார்கள் வந்தன. இது பிப்ரவரியில் 302 ஆக உயர்ந்தது. மார்ச்சில் 30ம் தேதி வரை 291 புகார்கள் வந்துள்ளன.
வீட்டு வாடகை கேட்காதீர் அரசு அதிரடி உத்தரவு

Updated : ஏப் 01, 2020 00:11 | Added : ஏப் 01, 2020 00:02 |

சென்னை:'வாடகைக்கு குடியிருக்கும் தொழிலாளர்களிடம், வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாதம், வாடகை கேட்க வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தடையுத்தரவை மீறி, தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரையை ஏற்று, தமிழக அரசு, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:வெளி மாநில தொழிலாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே, தற்காலிக இருப்பிடம், உணவு போன்றவற்றை, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் உள்ள சொந்த ஊர் வரும் தொழிலாளர்களை பரிசோதனை செய்து, 14 நாட்கள் தனியே தங்க வைக்க வேண்டும்.

ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள், கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் அதில் வேலை பார்த்த ஊழியர்கள், தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

தொழிற்சாலை, கடைகள் போன்றவற்றில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, தடையுத்தரவு காலங்களில், சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாதம், வாடகை கேட்கக் கூடாது.தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை, வீட்டை காலி செய்யும்படி, இடத்தின் உரிமையாளர் கூறினால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்றுடன்,'ரிடையர்'ஆகும் மருத்துவர்களின் பணி இரண்டு மாதம் நீட்டிப்பு!

Updated : மார் 31, 2020 23:57 

சென்னை:தமிழகத்தில், நேற்றுடன் ஓய்வு பெறவிருந்த, அரசு டாக்டர்களுக்கு, இரண்டு மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் கடன் தவணை தொகை செலுத்த, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 'கொரோனா' வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு பக்கத்தில், தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன; மறுபக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்காக, தனிமை வார்டுகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மார்ச் 31ம்தேதியுடன் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் டாக்டர்கள், நர்ஸ்கள் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாத பணிநீட்டிப்பு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிக தேவை

இந்த நிலைமையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள், அதிகளவில் தேவைப்படுகின்றனர். எனவே, தற்காலிகமாக, டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தேர்வு செய்ய, அரசு ஏற்பாடு செய்துள்ளது.இப்பணிகள் துரிதமாக நடந்து வரும் சூழலில், தற்போது பணியில் இருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார தொழில்நுட்ப பணியாளர்கள் நிறைய பேர், நேற்று ஓய்வு பெற இருந்தனர்.

அவர்களை ஓய்வு பெற அனுமதித்தால், அரசு மருத்துவமனைகளில், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என, அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, மார்ச், 31ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த, அரசு டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு அமைத்துள்ள குழுக்களுடன் ஆலோசித்த பின், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* தமிழகத்தில், நேற்று ஓய்வு பெறவிருந்த, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவரும், ஒப்பந்த முறையில், மேலும் இரண்டு மாதங்கள் பணியில் தொடர, தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும்

* கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க் கடன் பெற்றோர், தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், ஜூன், 30 வரை, மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்கு, தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்

* அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, கடன் தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில், கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் தொகை செலுத்த, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்

* 'கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம்' என்ற பெயரில், 200 கோடி ரூபாயில், சிறப்பு கடனுதவி திட்டம், 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின், அவசர மூலதன தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்

* 'சிப்காட்' நிறுவனத்திடம், மென் கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள், கடன் தவணை செலுத்தவும், சிப்காட் பூங்கா தொழில் நிறுவனங்கள், பராமரிப்பு கட்டணம் செலுத்தவும், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மக்கள் செலுத்த வேண்டிய, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த, மூன்று மாதம் அவகாசம் தரப்படும். வாடகை வீட்டில் குடியிருப்போரிடம், வாடகை தொகையை, இரு மாதங்கள் கழித்து, வீட்டு உரிமையாளர்கள் பெற வேண்டும்

* தமிழகத்தில், கொரோனா நோய், மூன்றாம் கட்டத்திற்கு பரவாமல் இருக்க, பொது மக்கள், வீட்டில் இருப்பது அவசியம். அத்தியாவசிய பொருட்களை வாங்க, அரசு பிறப்பித்துள்ள, நேரக் கட்டுப்பாடுகளை, பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

முதியோர் உதவித்தொகைநேரில் வழங்க உத்தரவு

தமிழகத்தில், ஒவ்வொரு மாதமும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை, மணியார்டர் மற்றும் வங்கிக் கணக்கு வழியாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும், 32.45 லட்சம் பயனாளிகளுக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, சிறப்பு ஏற்பாடாக, பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

'லைசென்ஸ், பெர்மிட்'புதுப்பிக்க அரசு அவகாசம்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின், மோட்டார் வாகனப் பிரிவு இயக்குனர், பியூஸ் ஜெயின், அனைத்து மாநில போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தற்போது, அவசர சேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கான ஆவணங்கள், காலாவதியாகி உள்ளதாகவும், அதனால், அனுமதி மறுக்கப்படுவதாகவும் நிறைய புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், மோட்டார் வாகன சட்டப்படி, ஆவணங்களை புதுப்பிக்க வேண்டிய நடைமுறைகள் தளர்த்தப்படுகின்றன.தற்போது, ஊரடங்கின் காரணமாக, வட்டார போக்குவரத்து அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், எப்.சி., என்ற, வாகன தகுதி சான்றிதழ், 'பெர்மிட்' என்ற வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்களுக்கான பதிவு உள்ளிட்ட, வாகனம் சார்ந்த அனைத்து நடைமுறைகளுக்கான விதிகளும் தளர்த்தப்படுகின்றன.

அதன்படி, பிப்., முதல் புதுப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கு, ஜூன், 30 வரை அவகாசம் வழங்க வேண்டும். இதை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பின்பற்றி, இந்த இக்கட்டான சூழலில், அவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களின், புதுப்பிக்காத ஆவணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள்

Added : மார் 31, 2020 21:08

சென்னை :தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் கூறியதாவது:மருத்துவ கல்வி மாணவர்களுக்கு, விரிவுரை பாடங்களை, மூன்று வகையான இணையதள வழி வகுப்புகள் வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நடத்தப்பட வேண்டிய பாடங்கள், பல்வேறு தலைப்புகளாக பிரித்து, தனித்தனி, 'வீடியோ'க்களாக, மருத்துவ பல்கலையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

காட்சி விளக்க முறையில் பதிவேற்றப்படுவதால், மாணவர்கள் எந்நேரத்திலும் பார்த்து பயன் பெறலாம். அதை தொடர்ந்து, 'கூகுள் கிளாஸ் ரூம்' என்ற, இணைய செயலி வாயிலாக, மாணவர்களை ஒருங்கிணைத்து, வகுப்புகள் நடத்தப்படும்.அதன்பின், 'டி.சி.எஸ்., அயான் டிஜிட்டல் கிளாஸ் ரூம்' என்ற, இணைய சேவை முறையில், மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளனர்.

இந்த இணைய சேவையை, மாணவர்கள் தரவிறக்கம் செய்து, தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில், பேராசிரியர்கள் பாடம் நடத்தும், வீடியோக்களை காண இயலும். இந்த மூன்று முறைகளிலும், மாணவர்களின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
நாளை கொரோனா நிவாரண வினியோகம் துவக்கம்: சென்னைக்கு ரூ.134 கோடி; கோவைக்கு ரூ.93கோடி

Added : மார் 31, 2020 21:03

சென்னை :கொரோனா பரவல் தடுப்புக்கால பாதிப்புக்காக, அரசு அறிவித்த, 1,000 ரூபாய் நிவாரண தொகை, கூட்டுறவு ரேஷன் கடைகள் வாயிலாக, நாளை முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக, சென்னைக்கு,134 கோடி ரூபாய்; கோவைக்கு, 93 கோடி ரூபாய் தரப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுதும்,ஏப்., 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால், தமிழக அரசு, அரிசி ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரணத்தை அறிவித்து உள்ளது. நிவாரணம், ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், 35 ஆயிரத்து, 244 ரேஷன் கடைகள் உள்ளன. அதில், 1,455 கடைகளை, உணவு துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிப கழகமும்; மற்ற கடைகள் எல்லாம்,கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களும் நடத்துகின்றன.

கூட்டுறவு ரேஷன் கடைகளில், 1.88 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கும்; வாணிப கழக கடைகளில், 13 லட்சம் கார்டுதாரர்களுக்கும், நிவாரணமாக, 1,000 ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. கூட்டுறவு கடைகளில் வழங்க வேண்டிய, 1,882 கோடி ரூபாயில், முதல் கட்டமாக, 941 கோடி ரூபாயை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மின்னணு பரிவர்த்தனை வாயிலாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில், நேற்று வரவு வைத்தது. மீதி தொகை, நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கி கணக்கில், அந்த தொகை பெறப்பட்டதும், ரேஷன் கடைகளை நடத்தும் சங்கங்கள் வாயிலாக, ரேஷன் கடைகளுக்கு தரப்பட்டு, கார்டுதாரர்களிடம் வழங்கப்பட உள்ளது.
வங்கிகள் நாளை முதல் வழக்கம் போல இயங்கும்!

Added : மார் 31, 2020 20:46

சென்னை, :வங்கிகள், நாளை முதல் வழக்கம் போல, மாலை, 4:00 மணி வரை செயல்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, வங்கிகள், காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், வங்கிகள், நாளை முதல் வழக்கம் போல செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்ற நோக்கில், அவசர தேவைகளுக்கு மட்டும், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர்.மேலும், வங்கிகளின் வேலை நேரமும், காலை, 10:00 முதல் மாலை, 2:00 மணி வரை குறைத்திட, மாநில அளவிலான வங்கிகள் குழு, சுற்றறிக்கை அனுப்பியது.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் நேரடி நிவாரண நிதியை, பயனாளிகள் பெறும் வகையில், வங்கிகள் மீண்டும், மாலை, 4:00 மணி வரை செயல்பட, வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இன்று வங்கிகளில் பண பரிவர்த்தனை கிடையாது; நாளை முதல், வங்கிகள் மாலை, 4:00 மணி வரை செயல்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...