Wednesday, April 1, 2020


நேற்றுடன்,'ரிடையர்'ஆகும் மருத்துவர்களின் பணி இரண்டு மாதம் நீட்டிப்பு!

Updated : மார் 31, 2020 23:57 

சென்னை:தமிழகத்தில், நேற்றுடன் ஓய்வு பெறவிருந்த, அரசு டாக்டர்களுக்கு, இரண்டு மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் கடன் தவணை தொகை செலுத்த, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 'கொரோனா' வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு பக்கத்தில், தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன; மறுபக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்காக, தனிமை வார்டுகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மார்ச் 31ம்தேதியுடன் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் டாக்டர்கள், நர்ஸ்கள் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாத பணிநீட்டிப்பு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிக தேவை

இந்த நிலைமையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள், அதிகளவில் தேவைப்படுகின்றனர். எனவே, தற்காலிகமாக, டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தேர்வு செய்ய, அரசு ஏற்பாடு செய்துள்ளது.இப்பணிகள் துரிதமாக நடந்து வரும் சூழலில், தற்போது பணியில் இருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார தொழில்நுட்ப பணியாளர்கள் நிறைய பேர், நேற்று ஓய்வு பெற இருந்தனர்.

அவர்களை ஓய்வு பெற அனுமதித்தால், அரசு மருத்துவமனைகளில், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என, அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, மார்ச், 31ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த, அரசு டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு அமைத்துள்ள குழுக்களுடன் ஆலோசித்த பின், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* தமிழகத்தில், நேற்று ஓய்வு பெறவிருந்த, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவரும், ஒப்பந்த முறையில், மேலும் இரண்டு மாதங்கள் பணியில் தொடர, தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும்

* கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க் கடன் பெற்றோர், தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், ஜூன், 30 வரை, மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்கு, தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்

* அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, கடன் தவணைத் தொகை செலுத்துவதற்கான அவகாசம், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில், கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் தொகை செலுத்த, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்

* 'கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம்' என்ற பெயரில், 200 கோடி ரூபாயில், சிறப்பு கடனுதவி திட்டம், 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின், அவசர மூலதன தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்

* 'சிப்காட்' நிறுவனத்திடம், மென் கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள், கடன் தவணை செலுத்தவும், சிப்காட் பூங்கா தொழில் நிறுவனங்கள், பராமரிப்பு கட்டணம் செலுத்தவும், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மக்கள் செலுத்த வேண்டிய, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த, மூன்று மாதம் அவகாசம் தரப்படும். வாடகை வீட்டில் குடியிருப்போரிடம், வாடகை தொகையை, இரு மாதங்கள் கழித்து, வீட்டு உரிமையாளர்கள் பெற வேண்டும்

* தமிழகத்தில், கொரோனா நோய், மூன்றாம் கட்டத்திற்கு பரவாமல் இருக்க, பொது மக்கள், வீட்டில் இருப்பது அவசியம். அத்தியாவசிய பொருட்களை வாங்க, அரசு பிறப்பித்துள்ள, நேரக் கட்டுப்பாடுகளை, பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

முதியோர் உதவித்தொகைநேரில் வழங்க உத்தரவு

தமிழகத்தில், ஒவ்வொரு மாதமும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை, மணியார்டர் மற்றும் வங்கிக் கணக்கு வழியாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும், 32.45 லட்சம் பயனாளிகளுக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, சிறப்பு ஏற்பாடாக, பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

'லைசென்ஸ், பெர்மிட்'புதுப்பிக்க அரசு அவகாசம்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின், மோட்டார் வாகனப் பிரிவு இயக்குனர், பியூஸ் ஜெயின், அனைத்து மாநில போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தற்போது, அவசர சேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கான ஆவணங்கள், காலாவதியாகி உள்ளதாகவும், அதனால், அனுமதி மறுக்கப்படுவதாகவும் நிறைய புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், மோட்டார் வாகன சட்டப்படி, ஆவணங்களை புதுப்பிக்க வேண்டிய நடைமுறைகள் தளர்த்தப்படுகின்றன.தற்போது, ஊரடங்கின் காரணமாக, வட்டார போக்குவரத்து அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், எப்.சி., என்ற, வாகன தகுதி சான்றிதழ், 'பெர்மிட்' என்ற வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்களுக்கான பதிவு உள்ளிட்ட, வாகனம் சார்ந்த அனைத்து நடைமுறைகளுக்கான விதிகளும் தளர்த்தப்படுகின்றன.

அதன்படி, பிப்., முதல் புதுப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கு, ஜூன், 30 வரை அவகாசம் வழங்க வேண்டும். இதை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பின்பற்றி, இந்த இக்கட்டான சூழலில், அவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களின், புதுப்பிக்காத ஆவணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024