ஊரடங்கு உத்தரவால் பெருகும் குடும்ப வன்முறை
Updated : ஏப் 01, 2020 02:59 | Added : ஏப் 01, 2020 02:56
புதுடில்லி : நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குடும்ப வன்முறை புகார்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24 நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதுமுதல் அனைத்து நிறுவனங்கள் வணிக வளாகங்கள் தொழிற்சாலைகள் திரையரங்குகள் உள்ளிட்டஅனைத்தும் மூடிக்கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏராளமானோர் வேலையிழப்பு ஊதியக் குறைவு போன்ற அச்சம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இத்துடன் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கணவன் மனைவி மற்றும் குடும்பத்தினருடனான மோதல் அதிகரித்து வன்முறையில் முடிகிறது.
இது குறித்து தேசியமகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது: மார்ச் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய மகளிர் ஆணையத்திற்கு 58 புகார்கள் வந்துள்ளன. அனைத்தும் மின்னஞ்சல் புகார்கள். பெரும்பாலும் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் இருந்து அதிக புகார்கள் பதிவாகி உள்ளன.வீட்டில் மன உளைச்சலுடன் உள்ள ஆண்கள் அதை பெண்கள் மீது வெளிப்படுத்தும் போது மோதல் ஏற்படுகிறது. இது தவிர குறைந்த வருவாய் பிரிவு பெண்கள் அஞ்சல் கடிதம் மூலம் அனுப்பிய புகார்களையும் சேர்த்தால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
ஊரடங்கால் அஞ்சல் புகார்கள் குறைவாக உள்ளன. நாடு தற்போதுள்ள சூழலில் எங்களை அணுக முடியாது என பல பெண்கள் நினைக்கின்றனர். அது தவறு. அவர்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கலாம். அல்லது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கூறலாம்.இவ்வாறு அவர் கூறினார். இந்தாண்டு ஜனவரியில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 270 புகார்கள் வந்தன. இது பிப்ரவரியில் 302 ஆக உயர்ந்தது. மார்ச்சில் 30ம் தேதி வரை 291 புகார்கள் வந்துள்ளன.
No comments:
Post a Comment