நாளை கொரோனா நிவாரண வினியோகம் துவக்கம்: சென்னைக்கு ரூ.134 கோடி; கோவைக்கு ரூ.93கோடி
Added : மார் 31, 2020 21:03
சென்னை :கொரோனா பரவல் தடுப்புக்கால பாதிப்புக்காக, அரசு அறிவித்த, 1,000 ரூபாய் நிவாரண தொகை, கூட்டுறவு ரேஷன் கடைகள் வாயிலாக, நாளை முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக, சென்னைக்கு,134 கோடி ரூபாய்; கோவைக்கு, 93 கோடி ரூபாய் தரப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுதும்,ஏப்., 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால், தமிழக அரசு, அரிசி ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரணத்தை அறிவித்து உள்ளது. நிவாரணம், ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், 35 ஆயிரத்து, 244 ரேஷன் கடைகள் உள்ளன. அதில், 1,455 கடைகளை, உணவு துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிப கழகமும்; மற்ற கடைகள் எல்லாம்,கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களும் நடத்துகின்றன.
கூட்டுறவு ரேஷன் கடைகளில், 1.88 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கும்; வாணிப கழக கடைகளில், 13 லட்சம் கார்டுதாரர்களுக்கும், நிவாரணமாக, 1,000 ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. கூட்டுறவு கடைகளில் வழங்க வேண்டிய, 1,882 கோடி ரூபாயில், முதல் கட்டமாக, 941 கோடி ரூபாயை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மின்னணு பரிவர்த்தனை வாயிலாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில், நேற்று வரவு வைத்தது. மீதி தொகை, நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கி கணக்கில், அந்த தொகை பெறப்பட்டதும், ரேஷன் கடைகளை நடத்தும் சங்கங்கள் வாயிலாக, ரேஷன் கடைகளுக்கு தரப்பட்டு, கார்டுதாரர்களிடம் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment