Wednesday, December 30, 2020

தனித்த முடிவு எடுப்பதில் நீ தலைவன்; உன் உயிர் முக்கியம்: ரஜினி குறித்து பாரதிராஜா உருக்கம்

தனித்த முடிவு எடுப்பதில் நீ தலைவன்; உன் உயிர் முக்கியம்: ரஜினி குறித்து பாரதிராஜா உருக்கம்

சென்னை  the Hindu tamil 

ரஜினியின் அரசியல் முடிவு தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 31-ம் தேதி தனது கட்சியின் தொடக்க நாளை அறிவிப்பதாக இருந்தார் ரஜினி. ஆனால், 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் பல்வேறு விஷயங்களை அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார் ரஜினி. இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

ரஜினியின் இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் முடிவு குறித்து ரஜினியின் நெருங்கிய நண்பரான இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று பூகம்பமான ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார், அப்போது வருவார், எப்போது வேண்டுமானாலும் வருவார் என்றெல்லாம் வதந்திகள் வெளியானபோது, கட்சியை அறிவிக்க இருந்தார்.

எனக்கு அரசியலில் நுழைவதில் உடன்பாடில்லை என்று நண்பனான ரஜினியுடன் சண்டையிட்டுள்ளேன். என் நண்பன் ரஜினிக்கு இனிமேலும் உச்சமா? இமயமலை உச்சிக்கு மேல் உச்சி இல்லை. பணம், பொருள், புகழ் அத்தனையும் வந்துவிட்டது. அதற்கு மேல் சிகரம் எதுவுமில்லை. இனிமேலும் குதித்தாலும் வேஸ்ட்தான்.

"நீ புல்லில் நடந்தாய், பூக்களின் வாசனை முகர்ந்து நடந்தாய், உன் பாதங்கள் புனித நீரிலேயே நனைந்து வந்தன. புழுதியில் உன் கால் பதிய வேண்டுமா" என்று கேட்டேன். அது அவனுக்குத் தெரியும். இதெல்லாம் காலச்சக்கரங்களில் ஓடிவிட்டது. அரசியல் சூதாட்டக் களம் என்பது வேறு. கலைஞர்களின் களம் என்பது வேறு.

என்னால் அரசியல் சூதாட்டத்தில் காய் நகர்த்த முடியாது. ஏனென்றால், மென்மையான மக்களையும், மனிதர்களையும், பூக்களையும், நதிகளையும், மேகங்களையும் ரசித்தவன். நான் உள்ளே நுழைய வேண்டுமென்றால் என் கை கறைபடிய வேண்டும். கட்சி நடத்த வேண்டுமென்றால் என் கை கறைபடிய வேண்டும். நான் அந்த மாதிரி ஆளில்லை. மரணத்தின் போதும் என் கதை, என் உழைப்பால் நான் வாழ்ந்தேன். என் உழைப்பால் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் உழைப்பில் உள்ள ஊதியத்தில் இவர்கள் என்னைப் புதைக்கப் போகிறார்கள். இதுதான் நான். இதை நான் அவனிடம் பேசினேன்.

ஹைதராபாத் படப்பிடிப்புக்குச் சென்றபோது, அங்கு 6 பேருக்குக் கரோனா. அதற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதித்தது பெரிய விஷயமல்ல. நான் எஸ்பிபியை மருத்துவமனையில் பார்த்தேன். அந்த வலி எனக்குதான் தெரியும். என் நண்பனை இழந்த வலி. கூட இருப்பவர்கள் ஆயிரம் சொல்லலாம் அது வேறு. உன் வலி, உன் வேதனை உன் உடம்புக்கு மட்டும்தான் தெரியும். உன் மனதுக்கு மட்டும்தான் தெரியும். மருத்துவமனையில் இருக்கும்போது பேசினேன்.

எப்போதுமே அவனைத் தலைவா என்று கூப்பிடுவேன். "தலைவா.. நீ எட்டாத உயரமில்லை. இனியும் உனக்கு இந்த அரசியல் தேவையா. மனநிம்மதிதான் தேவை. ஒரு பிறப்புதான். இன்னொரு பிறப்பில்லை. நீ பெரிய ஆன்மிகவாதி. கடவுள் உனக்கு அனைத்து அனுக்கிரகங்களையும் கொடுத்திருக்கிறான். இதற்கு மேல் நீ எங்கு போக முடியும். ப்ளீஸ் அரசியலுக்கு வருவது குறித்து யோசி" என்று சொன்னேன்.

அப்போது நான் அழுதேன். நீ அரசியல்வாதியாகி பெரிய ஆளாகி எல்லாம் ஒன்றுமில்லை. என் ரஜினி என் நண்பனாகக் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்று சொன்னேன். கண்ணீருடன் சொன்னேன். அவனுக்கும் அதே உணர்வு இருந்தது. என்ன முடிவெடுப்பார் என்பது தெரியாமல் இருந்தேன்.

இப்போது ஒரு முடிவெடுத்திருக்கிறான். சரியான முடிவு. அவன் யோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டான். முன்பு எல்லாம் ஆரம்பிக்கப் போவது குறித்துச் சொன்னான். என்னதான் இருந்தாலும் மனிதனுக்குச் சில குழப்பங்கள் வரும். அல்டிமேட்டாக யோசிக்கும்போது முடிவு வரும். ரஜினி எடுத்த முடிவு சரியான முடிவு. எங்கு நான் பெருமைப்பட்டேன் என்றால், ரஜினி ரசிகர்கள் உங்களை நம்பி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம். அரசியல் பயணம் வரும் என்று எதிர்பார்த்தோம்.

திடீரென்று கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கொதித்துவிடுவார்களோ என நினைத்தேன். ஏனென்றால் அவன் வெறிபிடித்த ரசிகன். அனைவருடைய பேச்சையும் பார்த்தேன். எந்தவொரு எதிர்பார்ப்புமே இல்லாமல் பயணப்பட்டு இருக்கிறான். ரஜினி என்ன சொல்கிறாரோ அதுதான். எங்களுக்கு அவருடைய உயிர் முக்கியம், உடல் முக்கியம் என்றான். அவருடைய ரசிகர்களுக்குப் பாராட்டுகள். அப்படிப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருப்பது பெரிய விஷயம்.

ஆன்மிகத்தின் உச்சத்தில் நீ ஜெயித்துள்ளாய். நல்ல முடிவு எடுத்திருக்கிறாய் ரஜினி. ஐ லவ் யூ. நீ எந்த மொழிக்கும் சொந்தக்காரன் அல்ல. தமிழக மக்கள் உன்னை விரும்பினார்கள். நீ மராட்டியன் அல்ல, நீ கன்னடன் அல்ல, நீ தமிழன். அதை இப்போது ஒப்புக்கொள்வேன். நான் முதல்வராக வரமாட்டேன் என்று சொன்னாய், தமிழன்தான் வருவான் என்று சொன்னதற்கு கை தட்டினேன். உனக்காக வேண்டிக் கொள்கிறேன்.

3 நாளுக்கு முன்னால் உனக்காகக் கோயிலுக்குச் சென்று வேண்டினேன். போன் பண்ணினேன். அழுதுகொண்டே பேசினேன். ஏனென்றால் நீ எனக்கொரு நல்ல நண்பன். இது ஒரு சாக்கடை. நீ இங்கிருந்தே மக்களுக்கு நல்லது செய்யலாம். யாருடைய சொல்லையும் கேட்காமல், தனித்த முடிவு எடுப்பதில் நீ தலைவன். கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். அந்த முரட்டுத்தனத்தில் எடுத்த முடிவை வரவேற்கிறேன். யார் என்ன சொன்னாலும் கேட்க வேண்டாம். நீ முக்கியம், உன் உயிர் முக்கியம், உன் உணர்வு முக்கியம். இந்த ரசிகர்களுக்கு நீ முக்கியம்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கல்லுாரி முதல்வர் தாய்க்கு ரூ. 22 லட்சம்


கல்லுாரி முதல்வர் தாய்க்கு ரூ. 22 லட்சம்

Added : டிச 29, 2020 23:26

சென்னை: நாமக்கல் மாவட்டம், ஆதனுாரைச் சேர்ந்தவர், ஜெயசூர்யநாதன், 27; தனியார் கல்லுாரி முதல்வர். இவர், பைக்கில், 2018 டிசம்பரில், நாமக்கல் மாவட்டம், வெண்ணாந்துார் பகுதியில் சென்றபோது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி, உயிரிழந்தார்.

மகன் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஜெயசூர்யநாதனின் தாய் பழனியம்மாள், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்தார். விசாரணை, நீதிபதி பி.சரோஜினிதேவி முன் நடந்தது.'மனுதாரருக்கு இழப்பீடாக, 21.83 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.

ரஜினி முடிவால் யாருக்கு லாபம்? கட்சிகள் போடும் புது கணக்கு!


ரஜினி முடிவால் யாருக்கு லாபம்? கட்சிகள் போடும் புது கணக்கு!

Added : டிச 29, 2020 23:42

ரஜினி, தன் உடல் நலம் கருதி, கட்சி துவக்கப் போவதில்லை என, அறிவித்தார். அவரது முடிவால், யாருக்கு லாபம், நஷ்டம் என, அரசியல் கட்சிகள் கணக்கு போடத் துவங்கி உள்ளன

.ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், ஆறாவது முறை ஆட்சி அமைப்பது கடினம் என, தி.மு.க., அச்சப்பட்டுக் கொண்டிருந்தது. ரஜினியின் மன மாற்றம், அக்கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ரஜினியை நோக்கி செல்ல இருந்த பெண்கள் ஓட்டுகள், ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுக்கள், இனி தங்களுக்கு கிடைக்கும் என, தி.மு.க., கருதுகிறது. இதனால், ஆட்சிக்கு வருவது சுலபம் என கருதுகிற தி.மு.க.,வுக்கு இது லாபம்.

இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறுகையில், ''ரஜினி, கட்சி ஆரம்பிப்பது, ஆரம்பிக்காதது, அவரது உரிமை. அவருக்கு உடல்நிலை முக்கியம்,'' என்றார். அ.தி.மு.க.,வில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், ரஜினி கட்சி துவக்கினால், அங்கு, ஓட்டம் பிடிப்பர் என்ற பயம், அ.தி.மு.க., மேலிடத்திற்கு இருந்தது. எம்.ஜி.ஆர்., பக்தர்களான, முன்னாள் மேயர், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் சிலர், ரஜினி அபிமானியாக இருந்ததால், ரஜினி கட்சிக்கு சென்று விடுவர் என்ற நிலையும் இருந்தது. இனி, அதற்கு வாய்ப்பு இல்லை.

வரும் சட்டசபை தேர்தல் வாயிலாக, முதல்வர் இ.பி.எஸ்., தன்னை தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள, ரஜினியின் அறிவிப்பு, பெரிய அளவில் உதவ இருப்பதால், அ.தி.மு.க.,வுக்கு லாபமாகவே கருதுப்படுகிறது.

இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா கூறுகையில், ''இப்போது, ஆட்சி மாற்றம் இல்லை என்பதை, ரஜினி ஒப்புக் கொண்டதால், கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டு உள்ளார்,'' என்றார்.

ரஜினி கட்சி துவங்கி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காமல் போனால், பா.ஜ.,வுக்கு கிடைக்க வேண்டிய தேசிய சிந்தனை உள்ளோரின் ஓட்டுக்கள், ஆன்மிக அரசியலை விரும்புவோரின் ஓட்டுக்கள் சிதறி, ஓட்டு வங்கியை இழக்கும் நிலை ஏற்படலாம் என, தமிழக பா.ஜ., தரப்பிலும் கணக்கு போடப்பட்டது. அதற்கு, இப்போது வேலை இல்லாமல் போய் விட்டது.அ.தி.மு.க., கூட்டணியில் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்க வைத்துள்ளதால், பா.ஜ.,வுக்கும் இது ஓரளவுக்கு சாதகமே.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''நடிகர் ரஜினி, ஆன்மிக அரசியலை ஆதரித்ததால், அதற்கு வலு சேர்த்தது. அதேநேரத்தில், அவர் கட்சி ஆரம்பிக்காத காரணத்தினால், ஆன்மிக அரசியல் தோற்றுவிடும் என்று எதிர்பார்ப்பது, அறிவுடைமை அல்ல,'' என்றார்.

ரஜினி கட்சி துவக்கியிருந்தால், இளைஞர்கள் ஓட்டுக்கள், நாம் தமிழர் கட்சிக்கு செல்லாமல், ரஜினிக்கு பெரும்பான்மையாக கிடைக்கவிருந்தது, தற்போது தடுக்கப்பட்டுள்ளது. அதனால், அக்கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளது. அதுபற்றி, அக்கட்சி தலைவர் சீமான் அளித்த பேட்டியில், ''இந்திய திரையுலகின் சிறந்த கலைஞர் ரஜினி, தன் உடல்நலன் கருதி எடுத்துள்ள முடிவை, முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல் நலம் பெற்று, கலையுலகப் பயணத்தை தொடர வாழ்த்துகள்,'' என கூறியுள்ளார்.

களத்தில் ரஜினியுடன் கூட்டு சேரலாம்; ஆட்சி கட்டிலை பிடிக்கலாம் என எதிர்பார்த்திருந்த, நடிகர் கமலுக்கு, ரஜினியின் முடிவால் நஷ்டமே அதிகம். அதனால் தான், ''ரஜினியின் முடிவு, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததுபோல், எனக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது,'' என கூறியிருக்கிறார். மேலும், பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளால், கூட்டணியில் பேரம் பேச முடியாத சூழலை, ரஜினி முடிவு ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., கொடுக்கிற தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிளுக்கு நஷ்டம் தான்.

தி.மு.க., கடைசி நேரத்தில் கழற்றி விடுமானால், ரஜினி பக்கம் போகும் வாய்ப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருந்தது. அந்த வழி மூடப்பட்டு விட்டதால், தி.மு.க.,வே கதி என்ற நிலைமை, வி.சி.,க்கு வந்துள்ளது. அதனால், ரஜினி முடிவை வரவேற்றுள்ளார், திருமாவளவன்.

அவர் கூறுகையில், ''ரஜினி முடிவை வரவேற்கிறேன். அவரது உடல் நலம் மிகவும் முக்கியம். தன் ரசிகர்களையும், உடன் பயணிப்பவர்களையும், ஏமாற்ற விரும்பவில்லை என்று, வெளிப்படையாக பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. வறட்டு கவுரவம் பார்க்காமல், துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்,'' என பாராட்டியுள்ளார்.

ரஜினியின் முடிவு, அ.ம.மு.க.,வுக்கும் நஷ்டத்தை உருவாக்கி உள்ளது. அதாவது, ரஜினி கட்சியால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அது தினகரனுக்கு லாபமாக இருக்கும் என, அ.ம.மு.க.,வினர் எதிர்பார்த்தனர்.

அழகிரி முடிவு மாறுமா?

வரும், 3ம் தேதி, மதுரையில், தன் ஆதரவாளர்களை அழைத்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆலோசனை நடத்துகிறார். ரஜினி முடிவு, அழகிரியை தனிக் கட்சி துவங்க வைக்குமா அல்லது பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வைக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.ரஜினி அறிக்கையின் கடைசி பத்தியில், 'தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தன்னால், தமிழக மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ, அதை தொடர்ந்து செய்வேன்' என, குறிப்பிட்டு உள்ளார். இதனால், தேர்தல் நேரத்தில், ரஜினி, 'வாய்ஸ்' கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நல்லவர்களைஆதரிக்க வேண்டும்!

'மக்கள் நலம் கருதி நல்லவர்களுக்கு, நடிகர் ரஜினி ஆதரவு கொடுக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ரஜினி, நல்ல உடல் நலத்துடன் நீடுழி வாழ வேண்டும். அவர், அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக, அதிகார்பூர்வமாக, அறிவித்திருந்தார். அதற்கு தமிழகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. தன் உடல் நலத்தை காரணம் காட்டி கட்சி துவக்கவில்லை. உடல் நலத்தில் அக்கறை எடுத்திருப்பது ஏற்புடையது.

அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இருக்கிறது. பத்து ஆண்டு காலமாக, அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ரஜினி போன்றவர்கள், மக்கள் நலம் கருதி, நல்லவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

பூனைக்கு 'வளைகாப்பு'

பூனைக்கு 'வளைகாப்பு'

Added : டிச 30, 2020 05:25 

திருவேற்காட்டை சேர்ந்த ஜோதி குமார் என்பவர், தன் வீட்டில் நாய் மற்றும் பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார். இவர், வளர்த்த வந்த பூனை கர்ப்பமடைந்தது.

பூனைக்கு வளைகாப்பு செய்ய ஜோதிகுமார் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, பூனையை அலங்காரம் செய்து நெற்றியில் பொட்டு வைத்து, நாற்காலியில் அமர வைத்தனர். பழங்கள், ஏழு விதமான உணவுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.

பூனையின் இரு கால்களிலும் வரிசையாக வந்து, உறவினர்கள் வளையல்கள் அணிவித்தனர். உறவினர்கள், வீட்டின் மற்ற செல்ல பிராணிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதன் படங்கள் வலைதளவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சிறப்பு விமானத்தில் காசிக்கு பறக்கலாம்

சிறப்பு விமானத்தில் காசிக்கு பறக்கலாம்

Added : டிச 30, 2020 02:15

கோவை:கோவையில் இருந்து காசி, அலகாபாத், அயோத்திக்கு சிறப்பு விமானத்தில் பயணிக்க ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) ரயிலில் மட்டுமின்றி, விமானத்திலும் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2021 மார்ச், 10ம் தேதி கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு விமான பயணத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், சாரநாத் ஆலயம், அலகாபாத் திரிவேணி சங்கமம் மற்றும் அயோத்தி ராம ஜென்ம பூமியை தரிசிக்கலாம்.

ஐந்து நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு நபருக்கு, 26 ஆயிரத்து, 695 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 90031 40655, 82879 31965 ஆகிய எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி.,இணை பொது மேலாளர்(சுற்றுலா) ரதீஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு


10 ஆயிரம் பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு

Added : டிச 30, 2020 02:17

திருப்பூர்:தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக, 'செல்வமகள்' சேமிப்பு கணக்கு துவங்க, திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் திட்டமிட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்புக்காக, செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம். ஓராண்டுக்கு குறைந்தபட்சம், 250 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.ஆண்டுக்கு, 7.6 சதவீத வட்டி உண்டு. 21 வயதில் கணக்கு முடிக்கும் போது, மூன்று மடங்கு தொகை கிடைப்பதால், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் சார்பில், 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கணக்கு துவங்கப்பட உள்ளது. ரோட்டரி கிளப் தலைவர் ரகுபதி கூறுகையில், ''அந்தந்த பகுதியில் உள்ள பயனாளர்கள், தபால் அலுவலகங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

ஒவ்வொருவரின் பெயரிலும், 250 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கப்படும். மத்திய அமைச்சர்கள் முன்னிலையில், இதற்கான பாஸ்புத்தகம் வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம். பயன்பெற விரும்புவோர், 98435 12288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தங்கும் அறைகள் திறப்பு


மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தங்கும் அறைகள் திறப்பு

Added : டிச 30, 2020 01:48

மதுரை:மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நவீன தங்கும் அறைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கால் இந்த அறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. பயணிகள் நலன் கருதி தற்போதைய தளர்வுகளையடுத்து இந்த அறைகள் திறக்கப்பட்டன. பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தங்கும் அறைகள் காலியாக இருந்தால் பயணிகள் நேரடியாகவும் உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

NEWS TODAY 2.5.2024