Monday, June 8, 2020

வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்: வியாபாரிகளுக்கு டாக்டர் இன்ப அதிர்ச்சி


வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்: வியாபாரிகளுக்கு டாக்டர் இன்ப அதிர்ச்சி

Updated : ஜூன் 08, 2020 09:24

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், 91 வயதாகும் டாக்டர் ஒருவர், தனக்கு சொந்தமான கட்டடத்தில், கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளிடம், மூன்று மாத வாடகை பணம், 4.20 லட்சம் ரூபாய் வேண்டாம் என்று கூறி, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளார்.

தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் கனகரத்தினம், 91. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷாவும் டாக்டராக உள்ளனர். கனகரத்தினம், தனக்கு சொந்தமான இடத்தில், ஆறு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. வியாபாரம் இல்லாத நிலையில், ஆறு கடைகளுக்கும் மாதம், 1.40 லட்சம் ரூபாய் வீதம், மார்ச், ஏப்ரல், மே ஆகிய, மூன்று மாதங்களுக்கான, ௪.20 லட்சம் ரூபாய் வாடகையை தர வேண்டாம் என தெரிவித்து, வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.இந்த மனிதநேய செயலை, அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

டாக்டர் கனகரத்தினம் கூறுகையில், ''கொரோனா நிவாரண நிதியாக, முதல்வர் நிவாரண நிதிக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்கினேன். ''வியாபாரிகள் கஷ்டப்படும் போது, அதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவி செய்வோம் என்று, மூன்று மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம்,'' என்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இன்று வரை, 10 ரூபாய் மட்டுமே பீஸ் வாங்குகிறார். சிகிச்சை வருபவர்களை உறவாக நினைப்பவர். அதேவழியில் மகனும், மருமகளும், 50 ரூபாய் தான் பீஸ் வாங்குகின்றனர். இதுவரை அவர், 65 ஆயிரம் பிரசவம் பார்த்துள்ளார். இந்தியா, சீனா போர் நடந்த போது, போர் தளவாடங்கள் வாங்குவதற்காக, தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த, 83 சவரன் தங்க நகையை, மத்திய அரசிடம் கொடுத்தவர். நாட்டையும், மக்களையும் நேசிக்கக் கூடியவர். அப்படிப்பட்டவர் எங்களுக்கு உதவியது, பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024