Friday, June 26, 2020

'கொரோனா'மருந்துகள் வினியோகம்: 5 மாநிலங்களுக்கு வரப்பிரசாதம்


'கொரோனா'மருந்துகள் வினியோகம்: 5 மாநிலங்களுக்கு வரப்பிரசாதம்

Updated : ஜூன் 26, 2020 00:14 | Added : ஜூன் 25, 2020 21:35 |

புதுடில்லி : 'கொரோனா' வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள, 'ரெம்டெசிவிர்' என்ற மருந்தை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'ஹெடர்ரோ' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

முதல்கட்டமாக, 20 ஆயிரம் குப்பிகள், தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகெங்கும் மிகத் தீவிரமாக உள்ளது. நம் நாட்டில், வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 4.73 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், 14 ஆயிரத்து, 894 பேர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிரா, டில்லி, குஜராத், தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் மட்டும், மொத்த பாதிப்பில், 80 சதவீதம் பதிவாகியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'கிலீட் சயின்ஸ் இன்கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் தயாரிக்கும், ரெம்டெசிவிர் என்ற மருந்து பலன் அளிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு, அவசர காலத்தில் பயன்படுத்துவதால், நல்ல பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

'லைசென்ஸ்'

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானில், கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க, ஐதராபாதைச் சேர்ந்த, ஹெடர்ரோ என்ற நிறுவனமும், 'சிப்லா' என்ற நிறுவனமும், 'லைசென்ஸ்' பெற்றுள்ளன.'கோவிபோர்' என்ற பெயரிலான இந்த மருந்து, தற்போது சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், டாக்டர்களின் கண்காணிப்பில் நோயாளிகளுக்கு அளிப்பதற்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி, ஹெடர்ரோ நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள தன் ஆலையில், இந்த மருந்தை தயாரித்து உள்ளது. முதல்கட்டமாக, 20 ஆயிரம் குப்பிகள், தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி, குஜராத் மற்றும் தெலுங்கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில், ஒரு லட்சம் குப்பிகள் தயாரிக்க, இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

யாருக்கு அளிக்கலாம்?

வைரஸ் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த மருந்து தரப்படும். நரம்புகள் வழியாக, ஊசி மூலம் இந்த மருந்து செலுத்தப்படும்.தற்போதைக்கு, 100 மில்லி கிராம் மருந்துள்ள குப்பியின் விலை, 5,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு, முதல் நாளில், 200 மி.கி., ஒரு முறை செலுத்தப்படும். அதற்கடுத்த ஐந்து நாட்களில், நாௌான்றுக்கு, 100 மி.கி., மருந்து செலுத்தப்படும்.இந்த மருந்து அடுத்தக்கட்டமாக, கோல்கட்டா, இந்துார், போபால், லக்னோ, பாட்னா, புவனேஸ்வர், ராஞ்சி, விஜயவாடா, கொச்சி, திருவனந்தபுரம், கோவாவுக்கு அனுப்ப, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'இந்த மருந்து, மருத்துவ மனைகள் மற்றும் அரசின் மூலமாக மட்டுமே கிடைக்கும். கடைகளில் விற்பனை செய்யப்படாது' என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.'கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட

குழந்தைகளுக்கு, இந்த மருந்து செலுத்தக்கூடாது' என, நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.இந்த மருந்தை தயாரிக்க, லைசென்ஸ் பெற்றுள்ள சிப்லா நிறுவனம், விரைவில் சந்தைப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. 'ஒரு குப்பியின் விலை, 5,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்' என, அந்தநிறுவனம் கூறியுள்ளது.

ரத்தம் பெற, 'மொபைல் ஆப்'

கொரோனா வைரஸ் அச்சம் இல்லாமல், பாதுகாப்பான ரத்தத்தை பெறுவதற்காக, புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சர், ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:சிலருக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருக்கலாம்.
மேலும், அவசர காலத்தில், சிலருக்கு ரத்தம் தேவைப்படலாம். தற்போது கொரோனா பரவல் உள்ளதால், பாதுகாப்பான முறையில் ரத்தம் கிடைக்குமா என்ற அச்சம் மக்களுக்கு உள்ளது. அதை நிவர்த்தி செய்யவே, இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மூலம், நாடு முழுதும் உள்ள அதன் ரத்த வங்கிகளில் இருந்து ரத்தத்தை பெறலாம். இந்த, 'ஆப்'பில், பதிவு செய்தால், ரத்தம் எங்கு கிடைக்கும் என்ற தகவல் அனுப்பப்படும். அதுபோல், தன்னார்வலர்களும், ரத்த தானம் செய்வதற்கு இந்த, 'ஆப்'பில் பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024