ஊர் சுற்றுவோர் அதிகரிப்பால் போலீசார் சோதனை தீவிரம்
Added : மே 14, 2021 02:02
சென்னை:ஊரடங்கு உத்தரவை மீறி வெட்டியாய் ஊர் சுற்றுபவர்கள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 'பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வெட்டியாய் ஊர் சுற்றுபவர்களின் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாம். வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது. அப்படி பறிமுதல் செய்ய நேரிட்டால் சில மணி நேரங்களில் விடுவித்து விட வேண்டும்' என சுற்றறிக்கை வாயிலாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.
இதனால் போலீசாரின் கைகள் கட்டப்பட்டு வெட்டியாய் ஊர் சுற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநிலம் முழுதும் வாகன சோதனையை நேற்று மாலையில் இருந்து போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில் 200 இடங்களில் சட்டம் -- ஒழுங்கு போலீசாரும் 118 இடங்களில் போக்குவரத்து போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
மாநிலம் முழுதும் 'ட்ரோன்' வாயிலாகவும் கண்காணிப்பு நடக்கிறது.போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் 'கொரோனா தொற்று பரவல் அசுர வேகத்தில் இருப்பதை பொதுமக்கள் உணரும் வகையில் வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்' என்றனர்.
No comments:
Post a Comment