திசைமாறும் சிறார்கள்
நம் நாட்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெ.கண்ணப்பன் Updated on: 18 டிசம்பர் 2025, 2:56 am
புதுதில்லியில் அமைந்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள கள ஆய்வு அறிக்கையில், நம் நாட்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக 10 மாநிலங்களில் நகர், புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு, தனியார் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுக்காக விவரங்கள் திரட்டப்பட்டவர்களில் 53% பேர் மாணவர்கள்; 47% பேர் மாணவிகள். இவர்கள் 11 முதல் 15 வயதுடையவர்கள். ஓராண்டு காலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பள்ளி செல்லும் மாணவர்களில் 16.3% பேரும், மாணவிகளில் 13.8% பேரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும், கடந்த ஓராண்டுக்குள் போதைப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் 10% என்பதும் தெரியவந்தது.
போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறார்களில் 95% பேர் போதைப் பொருள்களின் பயன்பாடு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதைத் தெரிந்தே பயன்படுத்துகின்றனர் என்றும், 40% சிறார்களின் குடும்பத்தில் மது அருந்தும் பழக்கமுடைய உறுப்பினர் உள்ளனர் என்றும், 8% பேர் குடும்பத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கமுடைய உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகையிலையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் போதையூட்டும் பொருள்கள், மதுபானங்கள், கஞ்சா, ஓபியம், ஹெராயின், மருத்துவப் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் போதை ஏற்படுத்தும் மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக பள்ளிச் சிறார்கள் ஆய்வின்போது தெரிவித்துள்ளனர். போதைப் பொருள்கள் தங்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன எனவும் ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பள்ளிச் சிறார்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 10 முதல் 17 வயதுடைய 1.48 கோடி சிறார்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவிக்கிறது. இந்திய சிறார்கள் 11-12 வயதில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்கின்றனர் என புதுதில்லியில் அமைந்துள்ள தேசிய போதைப் பொருள் சிகிச்சை மையத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது.
சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில், சீருடை அணிந்த மாணவிகள் சிலர் வகுப்பறையில் ஒன்றுகூடி மது அருந்தும் காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது தவறான செயல் அல்ல என்ற உணர்வு சமுதாயத்தில் பரவிவருவதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
கல்வி கற்க பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்த பழகிக் கொள்வதால், கல்வி கற்பதில் நாட்டம் அவர்களிடம் குறையத் தொடங்குகிறது. ஒழுக்கக்கேடான செயல்கள் அவர்களிடம் வெளிப்படுகிறது. மேலும், குற்றவியல் சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபடுகிற சூழலும் ஏற்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களை கூர்நோக்கு இல்லங்களில் விசாரணை முடியும்வரை தங்க வைக்கப்படுகின்ற நடைமுறை நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்தியப் பெருநகர் ஒன்றில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களில் 86% பேர் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்ட சிறார்கள் பெரும்பாலும் குற்றம் புரியும்போது போதைப் பொருள்களைப் பயன்படுத்தி இருந்ததாகவும் தெரியவருகிறது.
கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களில் சிலர் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்டு, கூர்நோக்கு இல்லங்களில் தங்கிச் சென்றவர்கள் என்பதும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிற சிறார்களில் பலர் மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும் கள ஆய்வில் தெரியவருகிறது.
போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற சிறார்களில் ஒரு சிலர் மட்டுமே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான சிறார்கள் தங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான போதைப் பொருள்களை வாங்க பணம் இல்லாதவர்கள். அவர்களில் சிலர் போதை பொருள்கள் விற்பனை செய்யும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான போதைப் பொருள்களை வாங்குகிற சிறார்களும் உண்டு.
கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களில் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிறார்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களை போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைத்து, நல்வழிப்படுத்தும் முயற்சியை சிறார் நீதிக் குழுமம் மேற்கொள்கிறது.
கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்படும் போதைப் பழக்கம் உடைய சிறார்கள் அனைவரையும் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்து, போதைப் பொருள்கள் பயன்படுத்துவதில் இருந்து மீட்கப்படுவதும், மீண்டும் போதைப் பொருள்களை நாடி அவர்கள் செல்லாமல் கண்காணிப்பதும் முக்கியத்துவம் பெறாத நிலை நம் நாட்டில் நிலவுகிறது.
சிறார் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதும், இந்திய பெருநகரங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறார் குற்றங்கள் நிகழும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளதும் திசைமாறிச் செல்லும் சிறார்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் முன்னுரிமை பெறப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
சிறார்களிடம் சமூக ஊடகத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகின்ற தற்போதைய சூழலில், நண்பர்கள் ஏற்படுத்தும் அழுத்தம், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், தனிமை மற்றும் தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுதல், உடைந்த குடும்பம், பெற்றோர்களின் குறைவான கண்காணிப்பு, மலிவாகவும், எளிதாகவும் சிறார்களுக்கு போதைப் பொருள்கள் கிடைக்கிற சூழல் போன்ற சமூக காரணங்களால் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை சிறார்கள் எளிதில் கற்றுக் கொள்கின்றனர்.
சிறார்களிடையே போதைப் பொருள் பழக்கம் தொற்றிக்கொள்ளாமல் தடுப்பதில் குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம் மற்றும் காவல் துறை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. பெற்றோர்-குழந்தைகள் இடையே மனம் திறந்த உரையாடல், குழந்தைகளின் நட்பு வட்டம், இணையப் பயன்பாடு போன்றவற்றைப் பெற்றோர் கண்காணித்தல், மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே மையமாகக் கொண்ட கல்விக்குப் பதிலாக வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் கல்வியை ஊக்கப்படுத்துதல், சிறார்களை இலக்காகக் கொண்டு செயல்படும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுத்தல் போன்றவை போதைப் பொருள்கள் மீதான சிறார்களின் ஆர்வத்தைத் தடுக்க துணைபுரியும்.
சிறார் குற்றங்களும், சிறார்களின் போதைப் பொருள் பழக்கமும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் முக்கியமான சமூகப் பிரச்னையாக கடந்த காலத்தில் உருவெடுத்தன. இதை எதிர்கொள்ள சிறார் நீதி அமைப்பும், சிறார் நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன.
தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத்தையே குறிக்கோளாகக் கொண்டு அவை செயல்பட்டன. பள்ளிக்கூடங்களில் போதைப் பொருள்கள் பழக்கம் உள்ள சிறார்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நம் நாட்டிலும் சிறார் நீதிச் சட்டம், சிறார் நீதிக் குழுக்கள், சிறார் சிறப்பு இல்லங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சிறார் குற்றங்களும், போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டத்துக்கு முரணாகச் செயல்படும் சிறார்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை இது உணர்த்துகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் ஆய்வும், உரிய தொடர் நடவடிக்கையும் சிறார்களின் நலனை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர்:
காவல் உயர் அதிகாரி (ஓய்வு).
No comments:
Post a Comment