சமச்சீரற்ற பாலின விகிதாசாரம்
By இ. முருகராஜ் | Published on : 23rd February 2018 01:17 AM |
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என பழமொழிகள் சொல்லப்படுவதுண்டு. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் முடித்து வைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
குறிப்பாக, படித்த இளைஞர்களைவிட, படிக்காத இளைஞர்களுக்கும், படித்துவிட்டு குறைவாக ஊதியம் பெறும் வேலைகளில் உள்ள இளைஞர்களுக்கும் பெண் கிடைப்பதென்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது.
தாங்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ள இளைஞர் எவ்வளவு சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும், என்ன வேலையில் இருக்க வேண்டும், என்ன படித்திருக்க வேண்டும், அவருடைய தனிப்பட்ட விருப்பங்கள் என அனைத்தையும் தெரிந்துகொண்ட பின்னரே திருமணத்துக்குச் சம்மதிக்கும் எண்ணம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
ஆனால் இதையெல்லாம் கேள்விப்படும்போது, பெண்களின் நிலை நமது சமூகத்தில் மிகவும் மாறிவிட்டதோ என்று தோன்றக் கூடும். அதுதான் இல்லை. பெண்களின் 'மவுசு' கூடியிருக்கிறது என்பதெல்லாம் ஏதோ ஒருசில இடங்களில்தான். மற்றபடி, பெண்களின் சமூக அந்தஸ்தும், மக்கள்தொகை எண்ணிக்கையில் ஆண்களை ஒப்பிடுகையில் விகிதாசாரமும் சமச்சீரற்ற நிலையில்தான் உள்ளன.
இந்தியாவில் பெரும்பாலும் ஆண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவே பெற்றோர் அதிகம் விரும்புவதாகவும், உலகின் மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் ஆண் - பெண் விகிதாசாரம் சமனற்று இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா போன்ற நாடுகளில் 100 பெண்களுக்கு 101 ஆண்கள் என்ற அளவில் பாலின விகிதாசாரம் உள்ளது. ஆனால், இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின சம நிலை உள்ளது. இந்த விகிதமானது வரும் 2021-ஆம் ஆண்டில் 904 எனவும், 2031-ஆம் ஆண்டில் 898-ஆகவும் சரிவைச் சந்திக்கும் என உலக வங்கி கணிப்பின்படி தெரியவந்துள்ளது.
இதேபோல, தமிழகத்திலும் ஆண் - பெண் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறதாம். தமிழகத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வரும் கணக்கெடுக்கப்பின்படி, கணிசமாக குறைந்து வருகிறது.
மாநில சுகாதார மேலாண்மை அமைப்பின் தகவல்படி, 2011 - 2012ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 923 பெண்கள், என இருந்த பாலின விகிதாசாரம் 2015 - 16ஆம் ஆண்டில் 912ஆக குறைந்துள்ளது. 2016 - 17ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான கணக்கெடுப்பின்படி, 911-ஆக குறைந்துள்ளது.
திருவண்ணாமலை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிக அளவில் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் துயர சம்பவங்களும் தொடர்கின்றன.
திருவண்ணாமலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய சுகாதாரக் குழுவினர் நடத்திய ஆய்வின்போது, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவித்ததாக ஒரு மருத்துவமனைக்கும், 3 ஸ்கேன் பரிசோதனை மையங்களுக்கும் அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியிடக் கூடாது என்பதை சட்ட விரோதமாக்கி எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. இருந்தும், பல பெற்றோர்கள் உள்நோக்கத்துடன் அந்த விவரத்தைக் கேட்பதும் ஒரு சில ஸ்கேனிங் மையங்கள் அந்த விவரத்தை சட்ட விரோதமாக வெளியிடுவதும் வெளியிட்டு வருவது வேதனைக்குரியது.
எத்தனை சட்டங்களும் விதிமுறைகளும் இருந்தாலும் சிசு காலம் முதலே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்கிறதே? பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வரும் சூழலிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான எண்ணம் தொடர்கிறது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் வருமானம் ஈட்டி, பொருளாதார நிலையில் உயர்ந்து வரும் சூழலிலும் பெற்றோர் ஆண் குழந்தைகளை அதிகம் விரும்புவதற்கு காரணம் இந்திய கலாசாரமே. சொத்துரிமை போன்றவற்றில் சமத்துவம் கொண்டு வர சட்டங்கள் இருந்தாலும் வேறு பல மரபுகள் ஆண்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இறுதிச் சடங்கு செய்வதற்கு ஆண் குழந்தைகள் தேவை என்ற மரபு முதல் பல்வேறு விஷயங்களில் ஆண்களுக்கு இன்னும் முக்கியத்துவம் தொடர்கிறது. பெற்றோர் இறந்தால் ஆண்கள்தான் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி பெண்களும் செய்யலாம் என்ற நிலை வர வேண்டும். இதற்கு சமுதாயத் தலைவர்கள் ஒருங்கிணைந்து சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும்.
பாலின சமத்துவம் என்பது சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என பல்வேறு விவகாரங்களையும் உள்ளடக்கியது. எனவே, பாலின விகிதாசாரத்தை பேணிக் காக்க வேண்டிய அரசின் பிரதான கடைமையாகிறது.
சமூகத்தின் சமச்சீரான மேம்பாட்டுக்கு ஜாதிவாரியான இட ஒதுக்கீடு மட்டும் போதாது. பாலின சமச்சீர் நிலை ஏற்பட வேண்டுமானால், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டையும், தேர்தல்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த வேண்டும்.