Thursday, February 22, 2018

எதைத் தொலைத்தோம்?

Published : 08 Feb 2018 19:49 IST



சமீபத்தில் தி.நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு சென்றிருந்தேன். வளாகத்தில் மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டம் ஜேஜே என்றிருக்கும். காரணம் மளிகை பொருட்களுக்கு அவர்கள் கொடுக்கும் தள்ளுபடிதான். கூட்டத்தை வேடிக்கைப் பார்த்தபடி சில பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

டூ வீலர் பார்க்கிங்கில் இருந்து எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அப்போது மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் ஓடி வந்தனர். “அக்கா.. அக்கா.. குழந்தைங்க படிக்கற ஏபிசிடி புத்தகம் வாங்கிக்கங்க அக்கா..” என்று நீட்டினர். “என் வீட்ல சின்னப்பிள்ளை இல்லையேப்பா.. இதை வாங்கிட்டு போய் நான் என்ன செய்ய?” என்றேன்.

அந்த குழந்தைகள் முகத்தில் ஏமாற்றம் சட்டென்று பரவியது. உடனே சிறுமி “அக்கா.. இந்த பொம்மை ஸ்டிக்கர்களை வாங்கிக்கங்க..உங்க பையனுக்கு பிடிக்கும்.. 20 ரூபாய் தான்க்கா, எங்களுக்கும் வியாபாரம் ஆகும்” என்று கெஞ்சினாள். எனக்கும் பாவமாகத்தான் இருந்தது. எவ்வளவோ செலவு செய்கிறோம்; வாங்கினால் என்ன என்று தோன்றினாலும் இதை வைத்து என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து, “ஸ்டிக்கரை நீயே வெச்சுக்கோ.. இந்தா 20 ரூபாய்” என்று பர்சிலிருந்து காசை எடுத்துக் கொடுத்தேன்.

நால்வரும் வேண்டாம் என தலையாட்டினார்கள். சும்மா பணம் வாங்கக்கூடாது என்று நான்கு பேரும் மறுத்தது எனக்கு உள்ளூர அவமான உணர்ச்சியை தூண்டிவிட்டது. “சரி இந்தாங்க.. பிஸ்கெட் பாக்கெட், சிப்ஸ் பாக்கெட் நாலு பேரும் பிரிச்சு எடுத்துக்கங்க..” என்று கொடுத்தேன். தயக்கத்துடன் வாங்கிக் கொண்டார்கள். எனக்கும் ஒரு திருப்தி. மகிழ்ச்சியுடன் ஆக்டிவாவை ஸ்டார்ட் செய்தேன். மீண்டும் நான்கு பேரும் ஓடி வந்தார்கள்.

“அக்கா.. எங்களுக்கு இது வேண்டாம், நீங்க எதாவது வாங்கினா போதும்” என்று கூறினார்கள். என்னடா மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதே என்று யோசித்துக் கொண்டே அந்த சிறுமியிடம் “பாப்பா, அந்த ஸ்டிக்கரை கொடு” என்று 20 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டேன். நான்கு பேருக்குமே அதில் மகிழ்ச்சி.

பின்னர் அவர்களிடம் செல்லமாக மிரட்டி, பிஸ்கெட் பாக்கெட்டையும், சிப்ஸையும் கொடுத்துவிட்டு புறப்படத் தயார் ஆனேன். அப்போது ஓர் இளம் தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் குறுக்கே நின்றனர். அவர்களிடம் நான்கு குழந்தைகளும் ஓடிச்சென்று புத்தகத்தை நீட்டினர். பார்த்தாலே வசதியானவர்கள் போல் தோன்றிய அவர்கள் குழந்தைகளிடம் எரிந்து விழுந்தனர்.

நால்வரும் அவர்களிடம் புத்தகத்தை விற்கும் முயற்சியில் இருந்தனர். “20 ரூபாய் தான் அக்கா.. வாங்கிக்கங்க, அண்ணே.. அக்காகிட்ட சொல்லுங்க” என்று கூறிக்கொண்டிருந்தனர். எனக்கும் அதைப்பார்க்கும் போது சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்த தம்பதிகள் செய்த காரியம் என்னை திடுக்கிட வைத்தது. ’ஒரு புக் கொடு’ என்று கேட்டார். ஒரு சிறுவன் சந்தோஷமாக புத்தகத்தை அவரிடம் கொடுத்தான். நானும் ஆச்சர்யப்பட்டேன். ஆனால் சந்தோஷத்தை ஒரு நிமிடம் கூட அந்த தம்பதிகள் நீடிக்கவிடவில்லை. அப்போது அந்த தம்பதிகள் செய்த செயல் என்னை தூக்கி வாரிப்போட்டது.

அந்தப் பெண் புத்தகத்தை வாங்க வேண்டாம் என்று சைகை செய்தார். கணவர் கையில் இருக்கும் புத்தகத்தைப் பிரித்துப் பார்க்க, அந்தப் பெண் ”இவங்க இப்படி எதாவது பேசி வாங்க வெச்சிருவாங்க ” என்று கோபப்பட, கணவர் ‘நான் டீல் பண்ணிக்கறேன்’ என்றார்.

பின்னர், தனது பர்சிலிருந்து கிரெடிட் கார்டை எடுத்து குழந்தைகளிடம் நீட்டினார். பணம் தருவார் என்று எதிர்ப்பார்த்த சிறுவன் ஏமாற்றத்துடன் “என்ன அண்ணே இது?” என்று கேட்டான். “இதுதாண்டா கார்டு.. உன்கிட்ட ஸ்வைப் மெஷின் இல்லையா?” என்று சிரிக்க, நான்கு குழந்தைகளும் ஏமாற்றத்துடன் அந்த தம்பதியை பார்த்தனர்.

குழந்தைகள் முகம் வாடியதைப் பார்த்து எனக்கு மனதில் எதையோ இழந்தது போலிருந்தது. “மெஷின் இல்லையா.. அப்ப இந்தா புத்தகத்தை பிடி” என்று குழந்தைகளிடம் புத்தகத்தை திருப்பி கொடுத்த கணவன், மனைவியை பார்த்து 'எப்படி சமாளிச்சேன் பார்' என்று பெருமிதமாக சிரிக்க, அதை ஆமோதிக்கும் வகையில் அந்த இளம் பெண்ணின் சிரிப்பும் இருந்தது.

பெரிய ரெஸ்டாரண்ட் சென்று கவுரவத்துக்காக “கீப் இட்” என்று அனாவசியமாக 100 ரூபாயை டிப்ஸாக கொடுக்கும் இடத்தில் உள்ள இவர்களால் பிஞ்சுக் குழந்தைகளின் தன்மானத்தை மதிக்கத்தெரியவில்லையே என்று நொந்தபடி வீடு திரும்பினேன்.

கதவைத் திறந்த எனது மகன் “என்னம்மா முகம் ஒரு மாதிரி இருக்கு.. எதையாவது தொலைச்சிட்டயா”என்று கேட்டான். 'ஆமாடா.. மனிதாபிமானம் காணாம போச்சு.. அதைத்தான் தேடி கிடைக்காம, கடுப்பாகி வந்திருக்கேன்' என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

கையில் இருந்த புத்தகத்தின் அட்டையில் ஒரு கார்ட்டூன் சிறுவன் கையில் ஆப்பிளுடன் வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டிருந்தான் .

- சஃபியா பீ

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...