Thursday, February 22, 2018

பாவ புண்ணியத்தைவிட நியாய தர்மத்தில் நம்பிக்கை தொண்டர்களின் சரமாரி கேள்விக்கு கமலின் விறுவிறு பதில்

Added : பிப் 22, 2018 01:24



  மதுரை:மதுரையில் நடந்த மக்கள் நீதி மய்யம் துவக்க விழாவில், கமலிடம் மக்கள் கேள்வி கேட்பதற்காக பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் தொண்டர்கள் கேள்விகளை எழுதி போட்டனர். அவற்றில் இருந்து சில கேள்விகளுக்கு மேடையிலேயே கமல் அளித்த விறு விறு பதில்கள்:

1. இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள்...

உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனிமேல் உங்கள் இல்லங்களில் இருப்பேன். இனி என்னை உங்கள் வீட்டு விளக்காக பாருங்கள். ஊழல் காற்றில் இந்த விளக்கை அணையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


2. உங்களை பிடிக்கும். உங்கள் சினிமா பிடிக்கும். உங்கள் கருத்து பிடிக்கும். நம்பி வரலாமா? எத்தனை நாட்கள் தாக்குப்பிடிப்பீர்கள்?

என் மூச்சு உள்ள வரை இருப்பேன். முடியாவிட்டால் அடுத்தவர்களிடம் ஒப்படைத்து வளர்க்க வேண்டும். இங்கே யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள்.

3. உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்ததால் தான் விஸ்வரூபம் எடுத்தீர்களா?
நான் விஸ்வரூபம் 2ம் பாகம் எடுத்துவிட்டேன். கோபம் வருகிறது. இனிமேல் தான் மக்களுடன் சேர்ந்து விஸ்வரூபம் எடுக்க வேண்டும்.
4. உங்கள் வழிகாட்டி காந்தியா, நேருவா, அம்பேத்கரா, பெரியாரா?

என்னை பகுத்தறிவாளி என கேலி செய்கின்றனர். அது உண்மைதான். உங்களுக்கு முருகன், சிவன் என எத்தனையோ நம்பிக்கை இருக்கலாம். எனக்கு இருக்க கூடாதா. எனக்கு அம்பேத்கர், காந்தி, நேரு, கேரள முதல்வர் பிரணாயி விஜயன், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், ஓபமாவை கூட பிடிக்கும்.

5. ஊழலை ஒழிக்க வேண்டும் என எல்லோரும் சொல்லி விட்டனர். நீங்க எப்படி ஒழிப்பீர்கள்?

ஊழலுக்கு துணை போய்விட்டீர்கள். ஊழலை தனியாக ஒழிக்க வேண்டும் என என்னிடம் கூறுகிறீர்கள். என் ஒருவனால் மட்டும் முடியாது. எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒழிக்க போராடுவோம். இதற்கு தனிப்பட்ட தியாகம் வேண்டும். முதலில் உங்கள் அளவில் ஊழல் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும்.

6உங்களுக்கு ஓட்டளித்து ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், ஆண்களுக்கு இலவச குவாட்டரும், பெண்களுக்கு ஸ்கூட்டரும் கிடைக்குமா?

நீங்கள் மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிதரும் வகையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பத்தாயிரம் வள்ளல்கள் இருந்தால், நாட்டில் ஏழைக்கே ஏழ்மை இல்லாமல் போகும்.
7. தாய்க்குலத்திற்கு எதிராக நடக்கும் கொடுமைக்கு முடிவு கட்ட என்ன வழி?

வெறும் காதல், வீரம் மட்டும் பேசினால் போதாது. அக்கா, அம்மா, திருமண வயது தங்கை, மகனை பற்றி நினைத்து மனம் உருகினால், பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்காது. காதலியும் வேணும். ஆனால், அவளுக்கு சமமான இடமும் கொடுக்க வேண்டும்.

8.ஹாட்வேர்டு பல்கலையில் தமிழ் இருக்கை உருவாக நன்கொடை அளித்துள்ளீர்கள் பாராட்டு. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறேதே என்ன செய்ய உள்ளீர்கள்?

சந்தோஷமாக தமிழ் பேசுங்கள். உரைநடை, பேச்சு வழக்கில் தமிழ் இருந்து கொண்டே இருந்தால், தமிழ் வாழும். பேச வெட்கப்பட்டால் தமிழ் உடனே சாகும். தமிழ் கல்வி அவசியம். அதற்காக அனைத்து மொழிகளையும் நேசிப்போம்.

9. உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்.

எனக்கு 6 மொழி தெரியும், அதில் 4ல் தற்குறி. எழுத படிக்க தெரியாது.

10. எதற்கு ராமேஸ்வரம், கலாம் வீடு?

கலாம் வீடு இருக்கும் இடம் ராமேஸ்வரம். எனக்கு பாவ புண்ணியத்தை விட நியாய தர்மத்தில் நம்பிக்கை அதிகம். அது இங்கு இருக்கிறது. இதுவே என் புண்ணிய பூமி.

11. தலைவா, கால் வலி எப்படி இருக்கிறது?

தமிழன் முன்னேறாமல் துவண்டு கிடப்பதை பார்க்கும் போது, மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தும் வரை நான் துாங்கமாட்டேன். தேவையான உதவிகளை செய்தால், என் வலி மட்டுமல்ல உங்கள் வலியும் போகும்.

12. உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு வருவார்களா?

என் பிள்ளைகள் அரசியலுக்கு வந்து விட்டனர். இங்கு கூட்டத்திற்கு வந்துள்ள உங்களை தான் சொல்கிறேன். என் சொந்த பெண்கள் அரசியலுக்கு வருவது பற்றி அவர்களே முடிவு எடுப்பார்கள். வற்புறுத்த முடியாது.

13. கொஞ்சநாள் தலைப்பு செய்தியாக மட்டுமே இருந்து மறைந்து விடுவார், மரபணு மாற்று விதை, போன்சாய் மரம் என்கின்றார்களே?

இது போன்று தேவையற்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா. இல்லை வேலையை பார்க்கணுமா. என்னை பற்றி பலர் பேசிக்கொண்டே இருக்கட்டும். நாம் வேலையை பார்க்கலாம். தைரியமாக பேசிவிட்டால் தர்மம், நியாயம் உங்களிடம் இருக்கிறது என நம்பிவிடுவோமா. நீங்கள் நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருந்திருந்தால், நான் வந்திருக்க தேவையில்லை. அந்த தேவையை உருவாக்கியவர்கள் நீங்கள், மக்கள் நீதி மய்யத்தை உருவாக்கியவர் நீங்கள் தான். இவ்வாறு பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...