Published : 24 Nov 2018 11:29 IST
ஒவ்வொரு உயிர்ப் பொறியும் வெப்பத்தைச் சுயமாக உருவாக்கிக்கொண்டும் வெளியேற்றிக்கொண்டும் இருக்கிறது. அதேபோல உடல், நீர்ச் சமநிலையையும் எப்போதும் தக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.
எனவே, உடலுக்கு எப்போது நீர் வேண்டும் என்பதை அறிவால் புறத்தில் இருந்து தீர்மானிக்க முடியாது. எப்போது தீர்மானிப்பது?. உடலுக்கு நீர்த் தேவை ஏற்படும்போது தாகமெடுக்கும். அப்போது நீர் அருந்த வேண்டும். லிட்டர் கணக்கில் அளவு வைத்தோ, இலக்கு வைத்தோ அல்ல!
நீர் அருந்துவதற்கும் மல வெளியேற்றத்துக்கும் முக்கியமான தொடர்பு உண்டு என்பதால், இப்போது நாம் அது பற்றிப் பேச வேண்டியுள்ளது. குறிப்பாக, குழந்தையின் நீர்த் தேவையைப் புறக்கணிக்கிறோம் என்பதால் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.
குழந்தை எதற்காக அழுகிறது?
குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் சுமார் எழுபது சதவீதம் நீர் உண்டு என்றாலும், பாலில் உள்ள நீர், செரிமானத்துக்குத் துணை செய்யும். ஆனால், செரிமானத்தின் கூடுதல் தேவைக்கும், உடலின் வெப்ப - நீர்ச் சமநிலையைப் பேணவும் வளர்ச்சிதை மாற்றச் செயல்பாட்டுக்கும் உடலுக்குத் தனியாக நீர் அவசியம்.
அவசியமான போதெல்லாம் குழந்தைக்கு நீர் புகட்டினால்தான் மல வெளியேற்றம் எளிதாக இருக்கும். பெரும்பாலான தாய்மார்களிடம் தம் குழந்தைக்குப் பாலைத் தவிர தனியாக நீர் புகட்டும் பழக்கம் இல்லை. டயபர் உபயோகம் ஒருவகையில் வெப்பத்தை உள்நோக்கித் திருப்புகிறது என்றால், இன்னொரு வகையில் குழந்தை உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போதும் உள்வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
குழந்தையின் அழுகைக்கான காரணங்களைப் பெற்றவர்கள் நுட்பமாகக் கவனித்தால் மட்டுமே அவதானிக்க முடியும். குழந்தை தன் அனைத்துத் தேவைகளையும் அழுகையின் வழியாக மட்டுமே அறிவிக்க முடியும். அதன் தேவைகள் அனைத்தையும் பாலுக்கான அழுகை என்றே தட்டையாகப் புரிந்துகொள்கிறோம்.
பசியெடுக்கிறபோது பாலுக்காக அழும். குழந்தைக்குத் தாகம் எடுக்கிறபோது நீருக்காக அழும். பாலுக்கு அழுகிறதா நீருக்கு அழுகிறதா என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? நம்முடைய உணர்வு நுட்பமாயிருந்தால் அழுகை பாலுக்கானதா நீருக்கானதா என்பதை அறிய முடியும்.
அப்படிப் பிரித்தறிய முடியாத பெற்றோரைப் பெற்ற குழந்தையின் நிலை? இதில் ஒரு சிக்கலும் இல்லை. குழந்தை அழத் தொடங்கியதும் லேசாகச் சூடேற்றிய (காய்ச்சி ஆற வைத்து அல்ல) வெந்நீரை ஃபீடிங் பாட்டிலில் ஊற்றிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் தேவை நீரெனில் நீரைக் குடிக்கும். குடித்துவிட்டு ஒரு இனிய புன்னகையை மலர்த்தி நன்றி தெரிவிக்கும்.
அப்போது நீர் தேவைப்படவில்லை, பால்தான் வேண்டும் என்றால் இரண்டு வாய் நீரை உறிஞ்சி ‘புளிச்’சென்று துப்பிவிட்டு, மறுபடியும் முன்னிலும் தீவிரமாக அழத் தொடங்கும். அப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டும், குழந்தை பாலுக்கு அழுகிறதென்று.
ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டாம்!
பச்சிளங் குழந்தைப் பருவத்திலேயே குறைந்தபட்ச தாக – பசி உணர்வு முறைப்படுத்தப்படும் போதுதான், அது தன் இதர உணர்வுகளையும் முழுமையாக அடைவது சாத்தியமாகும்.
தனது தண்ணீர்த் தேவையை அறிவிக்கத் தெரியும்வரை முதலில் நீரைக் கொடுத்துவிட்டு அதனை மறுக்கிறபோது உணவைக் கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதுவே மலச் சிக்கலைத் தவிர்ப்பதற்கான முதன்மை நிலை.
அடுத்து, மிக அரிதான கட்டங்களைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் டயபர் பொருத்துவதைத் தவிர்க்க வேண்டும். டயபரால் குழந்தையின் மென்மையான உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து பிறகு பார்ப்போம். குழந்தைப் பருவத்தில் மலச் சிக்கல் தோன்றுவதற்கும் ஆசன வாயில் மென்னுணர்வு மரத்துப் போவதற்கும் டயபர் ஒரு காரணி என்பதை அழுத்தமாக நினைவுறுத்திக் கொள்வோம்.
டயபர் போலவே ஆசனவாய் வழியாக வெப்பம் உள்நோக்கித் திரும்புவதற்கு இன்னொரு முக்கியக் காரணி, நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமல் அமர்ந்திருத்தல். மழலைப் பள்ளியில் குழந்தையை ‘ஆடாமல் அசையாமல் உட்கார்’ என்று சொல்வதே பெரிய வன்முறை. ஆடாமல் அசையாமல் இருக்க முடியாதது மட்டுமல்ல, அதற்குரிய மன நெருக்கடியும்கூட மலச் சிக்கலை உருவாக்கும்.
பல நேரம் மன நெருக்கடியே மலத்தை இறுகச் செய்துவிடும். குழந்தைப் பருவத்தில் எதன் பொருட்டும் அவர்களை மிரட்டிப் பணிய வைப்பது, உடல் வளர்ச்சியைக் குன்றச் செய்யும்.
சீக்கிரமாகத் தூங்குவது நல்லது
இரவு தாமதமாகப் படுப்பதும் மலச்சிக்கலுக்குக் காரணியாக இருக்கும். இரவில் விழித்திருக்கும் நேரத்தில் உடல் கூடுதலான வெப்பத்தை உருவாக்க நேரிடும். இருட்டத் தொடங்கிய பிறகு இயற்கையை மீறி பின்னிரவில் விழித்திருப்பதைச் சிலர் சாதனையாகவும், சிலர் கொண்டாட்டமாகவும், பலர் தியாகம் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றனர். அதன் முதல் கேடு, மலச் சிக்கல் அல்லது முழுமையாகச் செரிமானம் ஆகாமல் உணவு மலமாகிவிடுதல்.
பல வீடுகளில் ‘எங்க இந்த வாண்டுங்க ஆட்டம் அடங்கவே பன்னிரண்டு மணி ஆகுது. நாம எங்க சீக்கிரமா தூங்குறது’ என்று சலித்துக்கொள்வதுபோல், தமது குழந்தைகளின் துறுதுறுப்பில் பெருமிதம் கொள்கின்றனர்.
இரவு பத்து மணிக்காவது படுக்கைக்குச் சென்று விளக்கணைப்பதும், காலையில் காற்றின் தூய்மை முழு வீச்சில் இருக்கும் ஐந்தரை மணிக்கு விழிப்பதும் உடல் நலனுக்கு ஏற்ற பழக்கம் என்பதைப் பெரியவர்கள் உணரும்போதுதான் சிறு வயதினரும் அதைப் பழக்கமாக்கிக்கொள்ள முடியும்.
பகலில் எவ்வளவு நீண்ட தூக்கமும் இரவு நேரத்து ஆழ்ந்த, குறைவான தூக்கம் தரும் உடல் நலனைத் தர முடியாது. குறிப்பாக, செரிமானம், மலப்போக்கில் இரவுத் தூக்கக் குறைவு கண்டிப்பாகக் கெடுதல்களைத் தரும்.
வேண்டும் சுதந்திர உணர்வு
பல லட்சங்களைக் கொட்டி பிரபலமான பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இடம் பிடிக்கும் பெற்றோர், அதன் கழிவறைப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. எத்தனை பெரிய பள்ளிகளிலும் கழிவறைப் பராமரிப்பு படு மோசமாக இருப்பதைக் காண முடியும். விதி விலக்காக ஒன்றிரண்டு நல்லவை இருக்கலாம்.
வீட்டில் கழிப்பதைப் போன்ற சுதந்திரமான மன உணர்வு கிடைக்கப் பெறாத இடங்களில் குழந்தைகள் மலம், சிறுநீர் கழிக்க முடிவதில்லை. இந்தக் கழிப்பு அம்சங்களை அவர்கள் வெளிப்படையாகப் பேசவும் நாம் அனுமதிப்பதில்லை. அதுபோக வகுப்பு வேளையில் இயற்கையின் அழைப்பை வேடிக்கைப் பொருளாக்கிய கலாச்சாரம் நமது சமூகத்தில் நிலவுகிறது.
விளைவு சிறுநீரையும் மலத்தையும் பள்ளிகளில் கழிக்க விருப்பமில்லாமல் அடக்கி அடக்கி, ஏழெட்டு வயது பள்ளிப் பருவத்திலேயே மலச்சிக்கல் பிரச்சினையும் சிறுநீரகக் கல் பிரச்சினையும் தற்காலத்தில் பரவலாகி வருகிறது.
பள்ளிக் கழிப்பறையைத் தவிர்க்க, குழந்தைகளின் இயற்கை அழைப்பு தொடர்பான மன நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே தீர்வு, இரவில் பத்து மணிக்கேணும் படுப்பது. இரவில் சீக்கிரமாகத் தூங்கினால்தான் காலையில் அரக்கப்பறக்க இல்லாமல் காலைக்கடன்களைக் கழிக்க ஏதுவாக இருக்கும்.
போதிய மன அவகாசத்துடன் கழிப்பதுதான் உடலுக்கு முழுமையான நலம் பயக்கும். தற்காலப் பதற்றக் கலாச்சாரமே மலச் சிக்கல் தொடங்கி பலவிதமான நோய்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. தனது வனத்தில் சுதந்திரமாகப் பாம்பு ஊர்ந்து செல்வதுபோல, மலம் லாவகமாக ஊர்ந்து செல்ல வேண்டும். நம்மில் எத்தனை பேர் அத்தகைய போக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறோம்?
(தொடரும்)