வரிசையாக ஆயிரம் அடுப்பு, விடியும்வரை கிடாவெட்டு... நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல் திருவிழா!
அருண் சின்னதுரைவேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று சென்றிருப்பவர்கள், தங்கள் வீட்டு விழாவிற்கு வரவில்லை என்றாலும், வருடத்துக்கு ஒருமுறை சொந்த ஊரில் நடக்கும் செவ்வாய்ப் பொங்கலுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்
.
நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல்
பொங்கல் விழா, தமிழர்களின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் மகத்தான விழா. தமிழகத்திலேயே ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாதிரியான கலாசாரத்தை பொங்கல் விழா வெளிப்படுத்துகிறது. அப்படி தனித்துவமான கொண்டாட்டமாகத் திகழ்கிறது, சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கிராமத்தினர் கொண்டாடும் செவ்வாய்ப் பொங்கல்.
நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் அன்று (இந்த ஆண்டு நாளை 21.1.2020), செவ்வாய்ப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. செட்டிநாடு பகுதியில் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டுவந்த இந்த செவ்வாய்ப் பொங்கல் அருகிப் போனாலும், நாட்டரசன்கோட்டையில் உள்ள நகரத்தார் மக்கள் தங்கள் பாரம்பர்யத்தைக் கைவிடாது, தற்போதும் வெகு விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர். குடும்பத் தலைக்கட்டை ’ஒரு புள்ளி' எனக் கணக்கிட்டு, ஒவ்வொரு புள்ளிக்கான பெயரையும் துண்டுச் சீட்டில் எழுதி, வெள்ளிப் பானையில் போட்டு குலுக்கி, ஒரு சீட்டைத் தேர்வுசெய்கிறார்கள்.
அப்படித் தேர்க்செய்யப்படுபவர், முதல் அடுப்பில் பொங்கல் வைக்கிறார். கிட்டத்தட்ட ஆயிரம் அடுப்புகள் போடப்பட்டிருக்க, மற்றவர்கள் தத்தம் குடும்பத்துக்கான அடுப்புகளில் பொங்கல் வைக்கிறார்கள். கோயில் வாசல் எங்கும் அடுப்புகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருப்பதும், அதில் வெண்கலப் பானையில் ஒன்றுபோல பொங்கல் வைக்கப்படுவதும் காண்பதற்கு அவ்வளவு அழகான காட்சி.
உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!
வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று சென்றிருப்பவர்கள், தங்கள் வீட்டு விழாவிற்கு வரவில்லை என்றாலும், வருடத்துக்கு ஒருமுறை சொந்த ஊரில் நடக்கும் இந்த செவ்வாய்ப் பொங்கலுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவேளை செவ்வாய்ப் பொங்கலுக்கு ஊருக்கு வர இயலவில்லை என்றால், அதை கெளரவக் குறைச்சலாகவும் சாமி குத்தமாகவும் நினைக்கின்றனர். தங்கள் குடும்பம் பொங்கல்வைக்க ஒதுக்கப்படும் இடத்தை வெறுமையாக விட இவர்கள் விரும்புவதில்லை.
நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல்
ஊரின் நடுவில் வீற்றிருக்கும், 'கண்ணாத்தாள்'என்று பக்தர்களால் பரவசத்துடன் அழைக்கப்படும் ஶ்ரீ கண்ணுடையநாயகி அம்மனுக்குத்தான் இந்தப் பொங்கல் வைபவம் நடத்தப்படுகிறது. விழாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, ஊர்ப் பெரியவர்களிடம் பேசினோம். தற்போது, சுமார் 980 புள்ளிகள் பொங்கல் வைக்கிறார்கள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு 400 புள்ளிகள் என்ற கணக்கில்தான் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். தற்போது, கணிசமாகப் புள்ளிகள் அதிகரித்திருக்கின்றன. செவ்வாய்ப் பொங்கலில் நகரத்தார் மட்டுமன்றி, பிற சமூகத்தினரும் தனி வரிசையாக அம்மனுக்கு வேண்டுதல் வைத்துப் பொங்கல் வைக்கின்றனர். செவ்வாய்ப் பொங்கலில் கலந்துகொண்டாலே சிறப்புதான். இந்த செவ்வாய்ப் பொங்கலுக்கு, எங்கள் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் வந்துவிடுவார்கள். வரமுடியாதபட்சத்தில், அவர்களது உறவினர்களாவது அவர்களுக்கான அடுப்பில் பொங்கல் வைத்துவிடுவார்கள்.
ஆயில் கருப்பையா என்பவரிடம் பேசியபோது, "செவ்வாய்ப் பொங்கல் வைக்கும் வரிசை எண்ணை துண்டுச்சீட்டுகளில் எழுதிப்போட்டு, குலுக்கல் முறையில் தேர்வுசெய்வோம். குடும்பத்தில் ஆண் வாரிசுக்குத் திருமணம் நடந்தவுடன், அவர் தனிப் புள்ளியாகக் கணக்கிடப்படுவார். ஒவ்வொரு நபருக்கும் அவருக்கு குலுக்கலில் கிடைக்கும் எண்ணின் அடிப்படையில் அடுப்பின் வரிசை ஒதுக்கப்படுகிறது. முதல் நபராகத் தேர்வு செய்யப்படும் குடும்பத்தினர், மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும். அந்த நபர் தனியாகக் கிடாய் வாங்கி வெட்ட வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் அதிர்ஷ்டசாலியாகவும் பாக்கியசாலியாகவும் கருதப்படுவார்.
முதல் பொங்கல் வைக்கும் குடும்பத்தினரின் பொங்கல் பானை சிறப்பானதாகக் கருதப்படும். அவர்கள் பொங்கல் வைக்க ஆரம்பித்த பின்னரே மற்றவர்கள் பொங்கல் வைக்க வேண்டும். இவர்கள் மட்டும் மண்பானையில் பொங்கல் வைக்க, மற்றவர்கள் வெள்ளிப்பானை, வெண்கலப் பானை எனத் தங்கள் விருப்பம்போல பொங்கல் வைப்பார்கள்.
அண்ணன், தம்பி, பங்காளி ஒற்றுமை தொடர வேண்டும் என குடும்ப வாரியாகத்தான் புள்ளிகள் வரிசை பிரிக்கப்படும். மேலும், இப்படி உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடும் விழாவாக இது இருப்பதால், திருமணத்துக்குப் பெண், மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பங்கள், தங்களுக்கான பெண், பையனைத் தேர்ந்தெடுக்கும், முடிவுசெய்யும் நிகழ்ச்சியாகவும் இந்தப் பொங்கல் விழா அமைந்துவிடுவது இதன் கூடுதல் சுவாரஸ்யம்” என்றார்.
மனோன்மணி ஆச்சி, "கண்ணாத்தாள் குடிகொண்டுள்ள இந்த நாட்டரசன்கோட்டையில் பிறந்து, இதே ஊரில் திருமணம் செய்துகொண்டதை பாக்கியமாகக் கருதுகிறேன். ஆன்மிகத்தில் அதிக விருப்பமுள்ள எனக்கு, செவ்வாய்ப் பொங்கல் விருப்பமான ஒன்று. செவ்வாய்ப் பொங்கலில் சீட்டு விழுந்தவர்களுக்கு மட்டுமல்ல, கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பை அள்ளித்தருவாள் கண்ணாத்தாள்.
மாட்டுப் பொங்கல் முடிந்து, வரும் முதல் செவ்வாய் அன்று, இந்தப் பாரம்பர்ய செட்டிநாட்டு செவ்வாய்ப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உறவினர்கள், உலகில் எங்கு இருந்தாலும் அனைவரும் செவ்வாய்ப் பொங்கலுக்கு வந்தே தீருவார்கள். என் மகன் அமெரிக்காவில் பணிசெய்கிறான். அவனும் ஒரு புள்ளி கணக்குத்தான். அதனால், அங்கிருந்து செவ்வாய்ப் பொங்கலுக்கு வந்துவிடுவான். வரமுடியாதபோது, அவனுக்குத் தனியாக நான் ஒரு பொங்கல்பானை வைத்து பொங்கல் வைத்துவிடுவேன்.
முதல் பொங்கல்பானை குடும்பத்தினர் பொங்கல் வைக்க ஆரம்பித்த பின், கோயிலை பூஜை செய்து சுற்றிவருவார்கள். அப்போது, மற்ற அனைவரும் பொங்கல் வைக்க தடபுடலாகத் தயாராகிவிடுவார்கள். மாலை சுமார் 5 மணிக்கு இந்தப் பொங்கல் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன், கிட்டத்தட்ட ஆயிரம் அடுப்புகளும் நெருப்பு மூட்டப்பட்டு, பொங்கல் பானைகள் வைக்கப்பட, கண்ணாத்தாள் கோயிலைச் சுற்றி மேகக்கூட்டம் சூழ்ந்ததுபோல சூழ்ந்துவிடும் அடுப்பின் புகை. பொங்கல் வைத்து, இரவு பூஜைகள் முடிந்த பின்னர்தான் பொங்கல் பானையை வீட்டுக்கு எடுத்துச்செல்வோம். பொங்கல் வைப்பு, கிடா வெட்டு என்று பல பூஜைகள் முடிவதற்குள் இருட்டிவிடும்.
நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல்
நேர்த்திக்கடன் கிடாய்களும் வெட்டுவார்கள். அப்படி சிலநேரம் அதிக எண்ணிக்கையிலான கிடாய்கள் வெட்டும்போது விடிந்தேவிடும். ஒவ்வொரு பொங்கல் பானைக்கும் முன்பு போட்டிருக்கும் கோலத்தையும், வைக்கும் பொங்கலையும் கண்ணாத்தாள் ரசிப்பாள் என்பது ஐதிகம். செவ்வாய்ப் பொங்கலில், வெண்பொங்கல் மட்டுமே வைக்கப்படும். ஆனால், மனதில் இனிப்பு நிறைந்திருக்கும். செவ்வாய்ப் பொங்கலில் அனைத்து உறவினர்களையும் சந்திப்பது பெருமகிழ்ச்சி” என்றார்.
செவ்வாய்ப் பொங்கலைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செவ்வாய்ப் பொங்கல் நாளை (21.01.2020) நடைபெறுகிறது.