வெளிநாடுகளில் வெறும் கூலிகளாக பரிதவிக்கும் தமிழக தொழிலாளர்கள்
Added : ஜன 21, 2020 01:50
சிவகங்கை:தமிழகத்தில் இருக்கும் ஏஜன்ட்கள் சிலர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் தொழிலாளிகளிடம் கூலிப்படை மூலம் பணம் பறிக்கின்றனர்.
கூலிப்படையிடம் சிக்கிய சிவகங்கை வாலிபர், கலெக்டரின் முயற்சியால் மீட்கப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், பெரிய உஞ்சனையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 35.பணிக்காக, 2016ல் மலேஷியா சென்றவர், கூலிப்படையினரால் கடத்தப்பட்டு, சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் மீட்கப்பட்டார்.நேற்று கலெக்டரை சந்தித்த அவர் கூறியதாவது:மதுரை ஏஜன்ட் ஒருவரிடம், 1.30 லட்சம் ரூபாய் கொடுத்து, மலேஷியா சென்றேன். ஏற்கனவே, 10 ஆண்டு பணி அனுபவம் இருந்ததால், நல்ல சம்பளம் கிடைத்தது.ஆனால், பாஸ்போர்ட்டை ஏஜன்ட் வாங்கி வைத்து, கூலிப்படை மூலம் மிரட்டி, மாதந்தோறும் பணம் வசூலிக்க துவங்கினார். மூன்று ஆண்டுகளில், 11 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்தேன். பணம் தர மறுத்த போது, கூலிப்படை மூலம் கடத்தி உணவு, தண்ணீர் கொடுக்காமல், ஆறு நாட்கள் அடைத்து வைத்தனர். என் தாய்க்கு போன் செய்து, '5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் உயிரோடு விடுவோம்' என மிரட்டினர்.என் தாய், கலெக்டரிடம், கடந்த நவம்பரில் புகார் கொடுத்தார். இந்திய துாதரகத்துக்கு, கலெக்டர் கடிதம் அனுப்பியதால், என்னை விடுவித்தனர். மீண்டும் வேலைக்கு சேர்ந்த என்னிடம், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், துாதரகத்தில் தஞ்சம் அடைந்து, சொந்த ஊர் வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதுபோன்ற புகார் வரும் போது, தமிழக போலீசாரை ஏஜன்ட்கள் சரிக்கட்டி விடுவதாகவும், அதனால், 'இது வெளிநாட்டில் நடந்தது' என, போலீசார் தட்டிக் கழித்து விடுவதாகவும், தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
No comments:
Post a Comment