Tuesday, January 21, 2020

'நிர்பயா' குற்றவாளியின் கடைசி மனுவும், 'டிஸ்மிஸ்'

Updated : ஜன 20, 2020 23:57 | Added : ஜன 20, 2020 22:51

புதுடில்லி: மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி தாக்கல் செய்த கடைசி மனுவையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 2012 டிசம்பரில் ஆறு பேர் அடங்கி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டில்லியில் வரலாறு காணாத போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் 'மைனர்' என்பதால் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டார். மூன்று ஆண்டு தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்டார்.

ராம்சிங் முகேஷ் குமார் 32, வினய் சர்மா 26, அக் ஷய் குமார் 31, பவன் குப்தா 25 ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் ராம்சிங் டில்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள நான்கு பேரும் துாக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு 2018ல் தள்ளுபடி செய்யப்பட்டது. நான்கு பேருக்கும் இம்மாதம் 22ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற திகார் சிறையில் ஏற்பாடு நடந்து வந்தது.இதையடுத்து வினய் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.அடுத்ததாக துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக பிறப்பித்த 'வாரன்ட்'டை எதிர்த்து டில்லி உயர் நிதிமன்றத்தில் முகேஷ் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும் தண்டனையை நிறைவேற்றுவதை இழுத்தடிக்கும் வகையில் துாக்கு தண்டனையை ரத்து செய்யும்படி முகேஷ் குமார் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தார்.இதனால் ஏற்கனவே அறிவித்தபடி 22ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது. இதற்கிடையே முகேஷ் குமாரின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதன்பின் நான்கு பேருக்கும் பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தண்டனை நிறைவேற்றுவதை மேலும் சில நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்கத்துடன் குற்றவாளி பவன் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் 'குற்றம் நடந்தபோது நான் 18 வயதுக்கு உட்பட்ட மைனர். ஆனால் வழக்கு விசாரணையின் போது டில்லி உயர் நீதிமன்றம் நான் மைனர் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது' என கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.பவன் குப்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதாடியதாவது:பவன் குப்தாவின் பள்ளி சான்றிதழில் அவர் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதை கணக்கிட்டு பார்த்தால் குற்றம் நடந்தபோது அவர் மைனர் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உள்ளிட்டவை இந்த விஷயத்தை பரிசீலிக்கவில்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.டில்லி போலீஸ் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடியதாவது:பவன் குப்தாவின் கோரிக்கையை வழக்கு விசாரணை நடந்த அனைத்து நீதிமன்றங்களும் பரிசீலித்துள்ளன. திரும்ப திரும்ப அந்த கோரிக்கையை எழுப்புவது நீதிமன்றத்தை பரிகசிப்பதாக்கி விடும்.குற்றம் நடந்தபோது பவன் குப்தாவுக்கு 19 வயது என்பது அவரது பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது; இது அனைத்து நீதிமன்றங்களிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார்.நீதிபதிகள் உத்தரவு:பவன் குப்தாவின் கோரிக்கையை விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே பரிசீலித்து நிராகரித்துள்ளன. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றாவளியின் கடைசி மனுவும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை டில்லி திகார் சிறை நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது.

No comments:

Post a Comment

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...