பழநி 55 ஆண்டுகள்: வியர்வையின் வாசனை வீசிய காவியம்!
படத்தில் நாயகி உண்டு. ஆனால், நாயகனுக்கு அவர் ஜோடி அல்ல. இரண்டு டூயட் பாடல்கள் உண்டு. ஆனால், அவை நாயகனுக்குக் கிடையாது. படத்தில் ஒரு சண்டைக் காட்சி உண்டு.
ஆனால், அது நாயகனுக்குக் கிடையாது என்ற ஆச்சரியம் ஒரு புறம். தமிழகத்தின் உயிர்நாடியான விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வுசார்ந்த பிரச்சினைகளையும் நுனிப்புல் மேய்தல் என்ற வகையில் தமிழ்ப் படங்கள் மேம்போக்காகப் பேசிய காலம் அது, அப்போது பெரும்பான்மையான உழவர்கள் காணி நிலம் கூட இல்லாமல் கைகட்டி, வாய்பொத்தி, நிலப்பிரபுத்துவ குத்தகை முதலைகளிடம் கொத்தடிமைகளாக வாழும் அவலத்தை, துளியும் பிரச்சாரத் தொனியின்றி நேர்மையாகக் காட்சிப்படுத்திய கதை, திரைக்கதை என்னும் ஆச்சரியம் மற்றொரு புறம். இந்த இரண்டு ஆச்சரியங்களும் ஒரு புள்ளியில் சேர்ந்தபோது உருவாகிய திரைக் காவியமே ‘பழநி’. உழவுத் தொழிலாளியின் வியர்வை வாசனையை மண் வாசனையுடன் கலந்து, 55 ஆண்டுகளுக்கு முன் உழவர் தினத்தில் வெளியான படம்.
நடிகர் திலகம் 101
நியாய விலைக்கடைகளின் செயல்பாடின்மையால் விளையும் குறைபாடுகள், உணவு தானியங்களின் பற்றாக்குறை, அவை பதுக்கப்பட்டுக் கறுப்புச் சந்தை வாயிலாக விலை போன அன்றைய சமூகச் சூழல் ஆகியவற்றை அரசியல் கலப்பின்றிக் கதையின் சூழலோடு நெருடலில்லாமல் பொருத்திய வகையில் இயக்குநர் பீம்சிங் ‘மக்களின் இயக்குந’ராக பளிச்சிட்டார்.
தமிழ் சினிமாவில் கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பங்களிலிருந்து வேறுபட்டு, கதையின் நாயகனாக நடிகர் திலகம் தன்னை வெளிப்படுத்திய படம். எளிய கிராமியச் சாமானியனாக, படத்தில் அவர் ஏற்ற பழநி கதாபாத்திரம், அவரது தன்னிகரற்ற நடிப்பாற்றலால் இன்றும் பேசுபொருளாக இருக்கிறது. 100 படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகும் நல்ல கதைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் அவரது தொழில் பக்தி, அவரின் இந்த 101-ம் படத்தைச் சிறப்புறத் தாங்கி நிற்கிறது.
அப்பாவி மனிதன்
இது போன்ற அப்பாவி மனிதன் கதாபாத்திரங்களை நடிகர் திலகம் ஏற்பது ஒன்றும் புதிதல்ல. ‘படிக்காத மேதை’, ‘பழநி’, ‘காளிதாஸ்’, ‘ராமன் எத்தனை ராமனடி’ என்று நீளும் அந்தப் பட்டியலில் பழநி கிராமிய வாழ்வியலின் அழகுடன் வியர்வையின் வாசனையும் வீசச் செய்த உழவுத் தொழிலாளியின் உன்னதம் பேசியது. பழநி அப்பாவி, மனம் முழுவதும் நன்மை நிறைந்த மனிதன். தனக்கு இழைக்கப்பட்ட தீங்குகளைக்கூடப் பெரிதுபடுத்தாதவன். பழநிக்கு விவசாயம் ஒரு கண், தன் தம்பிமார்கள் மற்றொரு கண்.
அள்ளி முடிந்த தலைமுடி, கசங்கிய வேட்டி, சட்டை என்ற ஒரே உடையில் படம் முழுக்க வரும் சிவாஜி, பண்ணையார் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்திருப்பார். அதைப் பார்வையாளர்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வைத்திருப்பதில்தான் அவர் திறமை அடங்கியிருக்கிறது. நிலத்தை உழும்போது கிடைத்த புதையலை ‘அது உங்க நிலம் எனவே அது உங்களுக்குத்தான் சொந்தம்’ என்று கொண்டுபோய்க் கொடுப்பார். தானமாகத் தருகிறேன் என்று சொல்லி, பாறை நிலத்தைப் பண்ணையார் தரும்போது கோபப்படும் தம்பிகளை அடக்கி, ‘இந்த நிலத்தையும் நம்மால் விளை நிலமாக மாற்ற முடியும் என்றுதான் பண்ணையார் இதைக் கொடுத்திருக்கிறார்’என்று கூறும்போது ‘அட அப்பாவியே!’ என்று பார்வையாளர்களை பரிதாபப்பட வைத்திருப்பார்.
நிலவுடமைச் சமூகத்தின் கண்ணாடி
வெற்றுக் காகிதத்தில் கைநாட்டு வாங்கிக்கொண்டு, வெறும் இரண்டாயிரம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு அறுவடை நேரத்தில் அதைப் பன்னிரண்டாயிரமாக மாற்றி எழுதி நிலத்தை ஜப்தி செய்யும் பண்ணையாரிடம் ‘நான் பன்னிரண்டாயிரமா வாங்கினேன்?’ என்று கேட்டுக் கதறி அழும்போது அந்த அப்பாவிக்காக நாமும் கண் கலங்குவோம். அந்தக் காட்சி அன்றைய நிலவுடமைச் சமூகத்தின் கண்ணாடியாக இன்றைய தலைமுறைக்கு கிடைக்கும் ஆவணம்.
பக்கத்துக் குடிசையில் வசிக்கும் தம்பிக்கும் அவன் மனைவிக்கும் பொங்கலுக்குத் துணி வாங்கிக் கொடுத்துவிட்டு, அங்கே இலைக்கு முன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கும் தம்பிக்கு கேட்கும்படியாக, ‘நல்ல நாளன்னிக்கு அழக் கூடாது சாப்பிடு’ என்று சத்தமாகச் சொல்லும்போது, சிவாஜியின் முகம் காட்டும் உணர்வுகள், பாசாங்கில்லாத அண்ணன் தம்பி பாசத்தை உணர்த்தும்.
தன் அக்காள் மகளை, தம்பி மனைவியே தவறாகப் பேசுவதைக் கேட்டுவிட்டு கோவத்தில் கண் துடிக்க ‘காவேரி..’ என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வருவார் சிவாஜி. கள்ளங்கபடமில்லாத வெள்ளைச் சிரிப்புடன் ‘என்ன மாமா?’ என்று கேட்டபடியே வரும் அக்காளின் மகளைப் பார்த்தவுடன் கண்ணீர் கட்டி நிற்கும் பார்வையுடன் ‘ஒண்ணுமில்லமா..’ என்று முகமசைப்பாரே! அந்த உயர்ந்த நடிப்பாற்றல் சிவாஜிக்கு மட்டுமே சாத்தியம்.
உயிர்ப்புமிக்க காவியம்
தம்பிகள் பட்டணத்தில் மோசம் போய்விட்டார்கள் என்றவுடன் மனம் உடைந்து, ‘மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா’ என்றும், ‘பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள்தானடா’ என்ற கவியரசரின் காவிய வரிகளுக்கு சிவாஜி வாயசைப்பால் உயிரூட்டும்போதும் இன்றும் அவை உண்மை என்பதாகவே ரசிகர்கள் உணர்வார்கள்.
விவசாயத்தை நேசிக்கும் எந்த விவசாயியும் அதை விட்டு விட்டு செல்ல மாட்டான் என்பதை, ‘நம்முடைய உணவு தானியம் பட்டணம் போகலாமே தவிர நாம போகக் கூடாது’ என்ற ஒரு வரி வசனத்தில் உணர்த்திவிடுவார். சிவாஜி படத்தின் முகமும் தலையும் என்றால், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், பாலையா, நாகேஷ், எம்.ஆர்.ராதா, தேவிகா, புஷ்பலதா ராம், சிவகாமி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் கச்சிதமான பங்களிப்பு படத்துக்கு முதுகெலும்பு.
முதல் காட்சியில் ‘ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்’ என்ற அற்புதமான பாடலில் தொடங்கி இறுதிக் காட்சி வரை ஒரு இடத்தில்கூட சிவாஜி கணேசன் எனத் தெரியாமல் மதுரை மாவட்டம் புளியரை கிராமத்துக் குடியானவன் பழநி மட்டுமே கண்ணுக்குத் தெரியும் அற்புதம்தான், படம் வெளியான இந்த 55-ம் உழவர் திருநாளிலும் ‘பழநி’ திரைப்படத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
- முரளி சீனிவாஸ், t.murali.t@gmail.com | படங்கள் உதவி: ஞானம்
No comments:
Post a Comment