Monday, April 17, 2017

தலையங்கம்...... நடத்தமுடியாத 2 தேர்தல்கள்

ஏப்ரல் 17, 03:00 AM

பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் நடத்தவேண்டிய பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. கடந்த 12–ந் தேதி ஜம்மு–காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியிலும், சென்னையில் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியிலும் தேர்தல் நடத்த முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனை முடிந்து இறுதிவேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரமெல்லாம் முடிந்து, தேர்தல் நடத்தப்போகும் சூழ்நிலையில், அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் மே 25–ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், மாநில அரசும், அங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரியும், தற்போது நிலவும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையால் அங்கு நேர்மையான பாரபட்சமில்லாத தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லையென்று தெரிவித்துள்ளதுதான். ஏற்கனவே கடந்த 9–ந் தேதி ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. யாருமே ஓட்டுப்போட வரமுடியாத நிலையில், ஆங்காங்கு கல்வீச்சுக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின. இந்த தேர்தலில் 7.14 சதவீதம்தான் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. 38 வாக்குச்சாவடிகளுக்கு நடந்த மறுவாக்குப்பதிவில், 2 சதவீத ஓட்டுகளே பதிவாகியுள்ளன.

வடக்கே இந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதென்றால், தெற்கே சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தமிழ்நாட்டை மிகவும் தலைகுனியவைத்துள்ளது. தேர்தலை ரத்து செய்வதற்கான காரணங்களை 29 பக்கங்கள் கொண்ட ஒரு உத்தரவில் தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டுள்ளது. அதில், இதுவரையில் இல்லாத அளவு ஆர்.கே.நகர் தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படி எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிறகும், இந்த தொகுதியில் பணப்பரிமாற்றம், பரிசுப்பொருட்கள் வழங்குதல் போன்ற முறைகேடுகள் தாராளமாக நடந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தினர். இதில், ரொக்கப்பணம் உள்பட ரூ.89 கோடி அளவில் வாக்காளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்ற காரணத்தை கூறி, இதுபோல வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வினியோகிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த இரு தொகுதிகளின் தேர்தல்களை நடத்த முடியவில்லையென்றால், வடக்கே ராணுவமும், போலீஸ்படையும், ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் அதிரடியாக பணியாற்றவேண்டிய பாடத்தை புகட்டியுள்ளது. ஸ்ரீநகரில் இளைஞர்கள் பாகிஸ்தான் தேசியகொடிகளுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோ‌ஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாக போவதை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, அங்கு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இவ்வளவு பாதுகாப்பையும் மீறி பணமும், பரிசுப்பொருட்களும் மழைபோல பொழிந்தது என்றால், தேர்தல் கமி‌ஷன் குடை, ஓட்டை குடை. அதனால்தான், இவ்வாறு பணமழையை தடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆக, பணம் வாங்குவது சுயகவுரவத்திற்கு இழுக்கு, ஒவ்வொருவரும் விலைபோவது போன்ற உணர்வுதான் அது என்ற விழிப்புணர்வை ஒருபக்கம் மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். மற்றொருபக்கம் இதுபோல பணப்பரிமாற்றம், பொருட்கள் வினியோகிப்பதை முற்றிலுமாக தடுக்க தற்போது நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் பலன் இல்லை. எனவே இதில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, பணமழை தூறலாகக்கூட பெய்யாத வகையில் கடும் நடவடிக்கைகளை ஆர்.கே.நகர் உள்பட அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் கமி‌ஷன் எடுக்கவேண்டும்.

Sunday, April 16, 2017


உங்கள் மனைவி சண்டைக்கோழியா... சமாளிக்க 10 மேஜிக் டிப்ஸ்!

ஶ்ரீதேவி.கே
AVAL VIKATAN




கணவன் மனைவி... இந்த உறவுக்குள் நடக்காத கெமிஸ்ட்ரியா? தேடி அலசிப் பார்த்தால் அத்தனை மனைவிகளும்... கணவர்களிடம் பெரும்பாலும் தனது சண்டைக்கோழி முகத்தையே காட்டுகின்றனர். சண்டைக் கோழிகளை கட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் ஆண்களுக்காக கவலைப்பட யாரும் இல்லை. பெண்ணின் கோபம் எல்லை கடந்து விட்டால் வீடு வீடாகவே இருக்காது. போர்க்களம் போல் மாறிவிடும்.

போர்க்களத்தில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாதே. பெண் சந்தோஷமாக இருந்தால்தான் அனைவரும் மகிழ்வை உணர முடியும். வீட்டில் சந்தோஷ மனநிலை உள்ளவர்களால்தான் அலுவலகத்திலும் திறம்பட செயல்பட முடியும். மனைவியைச் சமாளிக்க சிரமப்படும் ஆண்களுக்கு இது தற்காப்பாகவும் அமையும். எவ்வளவு பெரிய சண்டைக் கோழியாக இருந்தாலும் அன்பிற்கு இசையாத பெண்ணும் உண்டோ?!

* உங்கள் மனைவிக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பதில் தெளிவாக இருங்கள். அவர்களுக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்களை, அவர்கள் கண்பட செய்ய வேண்டாம். உங்களுக்கு உங்கள் தங்கை மீது அதிகபட்ச பாசம் இருக்கலாம். ஆனால் அதை மனைவியின் கண் எதிரில் வெளிப்படுத்தி அவர்களை கடுப்பேற்றுவதாக நினைத்து, மனைவிக்கும் உங்களுக்குமான அன்பின் பாலத்தை சிதைத்து விடாதீர்கள். மனைவிகளைப் பொறுத்தவரை உங்கள் அன்பு முழுவதும் அவர்களுக்கானது என்ற பொசசிவ்னெஸ் இருக்கும்... புரிந்து செயல்படுங்கள். ‘‘இந்த உலகத்தில் என் அன்பு மொத்தமும் உனக்கே என்று உணர வைக்கலாம்.



* உங்கள் மனைவியின் நிறை குறைகள் உங்களுக்கு புரிந்திருக்கும். பலர் இருக்கும் போது அவரின் பிளஸ் பாயிண்டுகளைச் சொல்லி பாராட்ட தயங்க வேண்டாம். ‘‘நீங்கள் பெரிய ஓவியராமே’’ உங்கள் கணவர் அடிக்கடி சொல்வார் என்று உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து கமெண்ட் வந்தால் சந்தோஷ மழையில் நனையப்போவது நீங்களும் தான். உங்கள் மனைவி பற்றிய பாசிட்டிவ் எண்ணங்களை எங்கும் விதையுங்கள்..அத்தனையும் அன்பாய் திரும்பக் கிடைக்கும்.

* எப்பொழுதும் உங்களுக்குள்ளான சண்டை எங்கிருந்து துவங்குகிறது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த எல்லைக்கு முன்பாகவே விவாதத்தை நிறுத்தி விடுங்கள். பல வீடுகளில் மனைவியிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் விஷயம் விவாதமாக மாறி பிறகு, மிகப்பெரிய புயலாய் உருவெடுத்து சண்டையில் முடியும். உங்கள் அறிவை நிரூபிக்கும் இடம் அது இல்லை. விவாதத்தை நிறுத்தி விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவி சொல்லும் கருத்துகளை மனம் திறந்து கேளுங்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதும் புரிதலை மேம்படுத்தும்.

* எதிர்பாராத சந்தர்ப்பத்தில் உங்கள் மனைவி ஏதோ ஒரு விஷயத்தில் கோபமாகி, சண்டை துவங்கிவிட்டது எனில், நீங்கள் வெள்ளைக் கொடி வேந்தராக மாறிவிடுங்கள். பெண்களால் தனியாக சண்டை போட முடியாது. அவர்கள் கோபத்தின் உச்சத்தில் கத்தினாலும் உங்கள் மெளனம் அவர்களை விரைவில் அமைதிப்படுத்திவிடும்.

* நீங்கள் சமாதான வார்த்தை கூறியும் உங்கள் மனைவி கோபத்தை விட்டு வெளியில் வராமல் நெருப்பு வார்த்தைகளைக் கொட்டினால் அந்த இடத்தை விட்டு வெளியில் சென்று விடுங்கள். நீங்கள் எதிர்த்துப் பேசாவிட்டால் உங்கள் மனைவியால் சண்டையைத் தொடர இயலாது.

* உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் அன்று ஏதோ ஒரு விஷயம் முரண்பாடாக மாறியிருக்கலாம். இன்னும் சிறிது நேரத்தில் சண்டை வரப் போகிறது என்றால் உடனடியாக அவர்களை வேறு விஷயத்தில் டைவர்ட் செய்யுங்கள். அவர்களுக்கு பிடித்த விஷயம் குறித்து பேசத் தொடங்குங்கள்..அப்போதைக்கு அவர்கள் மனதில் கோப நெருப்பு அணைந்து விடும்.

* உங்கள் மனைவி கோபத்தில் இருப்பது தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் குழந்தைகள் பற்றியும், அவர்களது எதிர்காலம் அல்லது உங்கள் இருவரின் அடுத்த இலக்கு என்பது பற்றியும் பேசத் தொடங்குங்கள். தன் கோபம் எவ்வளவு அர்த்தமற்றது என்று புரிந்து கொண்டு உங்கள் மனைவி வேறு முக்கிய விஷயங்களில் மனதைத் திருப்புவார்.

* வீட்டில் இருந்தால் தானே சண்டை வரும். மனைவியை உடனடியாக சினிமா, ஹோட்டல், பார்க் என்று உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடத்திற்கு அழைத்து செல்லுங்கள். அவர்களது விருப்பத்தைக் கேட்டு நிறைவேற்றுங்கள் மூட் மாறிவிடும். உங்களது வாழ்வின் முக்கிய தருணங்களில் ஆச்சர்ய பரிசுகளால் அசத்த மறந்து விட வேண்டாம். உங்களுக்குள்அன்பின் பிணைப்பு அதிகரிக்கும்.

* அன்றைய காலை கோபத்தில் துவங்கியிருந்தாலும் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் உங்கள் மனைவி குறித்த நேரத்துக்கு சாப்பிட்டாரா என்பது போன்ற அக்கரையுள்ள கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் நினைப்பதை பேச வாய்ப்பளித்து அவர் இடத்தில் இருந்து...குடும்ப சூழல் அடிப்படையில் எது நடைமுறையில் சாத்தியம் என்பதை புரிய வையுங்கள். கோபம் குறைந்து அன்பின் மழையால் உங்களை நனைப்பாள் மனைவி.

* உங்கள் மனைவியின் வேலைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கான தனிமை நேரத்தில் அன்பில் மிச்சமின்றி மூழ்கடித்து விடுங்கள். அவ்ளோ தான் உங்கள் தேவதையின் அன்பு மொத்தமும் உங்களுக்கு மட்டுமே. வாழ்வை ஒவ்வொரு நொடியும் கொண்டாடுங்கள் கணவர்களே!
தனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசுப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்!

VEMBAIYAN D



லட்சங்களைக் கொட்டி கொடுத்து, எல்.கே.ஜி அட்மிஷன் பெறுவதற்காக, தனியார் பள்ளிகளின் வாசலில் இரவே துண்டுப் போட்டு படுத்திருக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக, போட்டி போட்ட அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?



நூற்றுக்கணக்கான பிள்ளைகளுடன் அந்த அரசுப் பள்ளியில் பெற்றோர்கள் குவிய, ''மன்னிச்சுக்கங்க... 75 பிள்ளைகளுக்குத்தான் இடம் இருக்கு. மத்தவங்க கோவிச்சுக்காம வேற பள்ளியில் முயற்சி செய்து பாருங்க'' எனச் சொல்லிக்கொண்டிருந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர். பள்ளியில் இடம் கிடைக்காதவர்கள் வருத்தமான முகத்துடன் கிளம்ப, அட்மிஷன் முடிந்த 75 குழந்தைகளோடும் பல்சுவை நிகழ்ச்சிகளோடும் உற்சாகமான தொடக்க விழா நடந்தது. அந்தப் பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விழாவைத் தொடங்கி வைக்க, 75 மாணவர்களுக்கும் வண்ண வண்ண பலூன்கள், ஆளுக்கொரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் விழாவில் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்தான் இத்தனை அதிசயங்களும்.



"நாங்கள் இந்தப் பள்ளியில் வேலைப் பார்த்தபோது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையே பத்து பேருதான். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன வித்தைகளையோ செய்துப்பார்த்தோம். இந்தப் பள்ளி கரூர் நகரில் இருந்து மூன்று கிலோமீட்டரில் துரத்திலேயே இருப்பதால், எல்லோருமே நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்குத்தான் சென்றார்கள். இந்தப் பள்ளியையே 'சிங்கிள் டிஜிட் பள்ளி' என்றுதான் அழைப்பார்கள். சேர்க்கை குறைவாக இருக்கிறது எனச் சொல்லி அதிகாரிகளும் பள்ளியை மூடிவிட இருந்தார்கள். ஆனால், இன்று மொத்தமாக 300 பிள்ளைகளைப் பார்க்கும்போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது. தனியார் பள்ளி மாயையை கிழித்தெறிந்திருக்கும் நாள் இது'' என்று மகிழ்ந்தார்கள் முன்னாள் ஆசிரியர்கள்.



கூட்டத்தில் பேசிய சில பெற்றோர்கள், "பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்தப் பள்ளியை கடந்துசெல்லும்போதுகூட நிமிர்ந்து பார்த்ததில்லை. ஆனால், பள்ளியில் நடந்த மாற்றங்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகள், கற்பிக்கும் முறைகள் பற்றி மெல்ல மெல்ல கேள்விப்பட்டு எங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆரம்பித்தோம். எங்கள் பிள்ளைகள் அழகாக ஆங்கிலம் பேசுவதையும், தெளிவாகத் தமிழ் எழுதுவதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கம்ப்யூட்டர், யோகா, இசை, விளையாட்டு, நடனம் என எல்லா வகையிலும் எங்கள் பிள்ளைகளின் திறமைகளை வளர்த்தெடுக்கிறார்கள். எங்களுக்கு ஒரு ரூபாய் செலவில்லை'' என்று நெகிழ்ந்தார்கள்.

அரசுப் பள்ளியின் மீது 200 சதவிகித நம்பிக்கையைச் சாத்தியமாக்கிய இந்த மாயம் நிகழ்ந்தது எப்படி?

பள்ளியின் தலைமை ஆசிரியையான விஜயலலிதா, ''அர்ப்பணிப்பும் சக ஆசிரியர்களின் கூட்டு முயற்சியும்தான் காரணம். ஒவ்வொரு ஆண்டும் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசுவோம். அவர்களுக்குப் பள்ளியின் மீது நம்பிக்கை வருவதற்காக, அரசு மற்றும் தனியார் ஆர்வலர்களின் நிதியுதவியில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினோம். குழந்தைகளைக் கவரும் வகையில் வகுப்பறைகளிலும் ஓவியங்கள் வரைந்தோம். ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையையும் ஊக்கப்படுத்தி, நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கினோம். இவையெல்லாம் சேர்ந்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியது. இப்போது, ஆண்டுதோறும் பெற்றோர்களே பள்ளிக்கு சீர் வரிசை எனச் சொல்லி விழா நடத்தி உதவி வழங்கும் அளவுக்கு மாற்றி இருக்கிறோம். இந்தப் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையையும் எங்கள் குழந்தையாக நினைத்து அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுகிறோம்'' என்கிறார் புன்னகையுடன்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியும் இதுபோன்ற முயற்சியில் இறங்கினால், ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.

- துரை.வேம்பையன்

சீமைக் கருவேலமரம்... அத்தனை ஆபத்தானதா?

வாக்குமூலம்முனைவர் வெங்கடாசலம் - படங்கள்: தி.விஜய்- எல்.ராஜேந்திரன் - தே.அசோக்குமார்

அய்யா நியாயன்மாரே....

சமீபகாலமாகத் தமிழகத்தில் சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் ஆகியவற்றில், என்னைப் பற்றித்தான் அதிக செய்திகள் பரவி வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சாலையோர தேநீர் கடை வரை என் பேச்சுதான். எல்லாவற்றுக்கும் காரணம், என்னை அழிக்கச்சொல்லி நீதிமன்றம் போட்ட உத்தரவுதான். இதற்கு மேல், பீடிகை தேவையில்லை. எல்லோருக்கும் புரிந்திருக்கும், நான் யாரென்று. ஆம். நான், சீமைக் கருவேல மரமேதான்.



எந்தத் தவறையுமே செய்யாத எனக்கு இங்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்கவில்லை. என் தரப்பில் யாரும் வாதிடவும் இல்லை. அதற்கு அவகாசமும் இல்லை. என் எதிரிகளான சில சூழல் ஆர்வலர்கள், என்மேல் அளித்த புகாரில், நான் செய்ததாகச் சொல்லப்பட்ட குற்றங்களை விசாரிக்காமல், அதற்கான அறிவியல் ஆதாரங்களைத் தேடாமல் எனக்கு மரண தண்டனையை வழங்கிவிட்டனர். என் சந்ததிகளே இல்லாமல் போகும்படி என் பரம்பரையையே முற்றாக அழிக்கும் வகையிலான கொடூரமான தண்டனை எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

‘வரலாற்றிலேயே முதல் முறையாக’ என்றுகூட இதைச் சொல்லலாம். இதுவரை, மனிதர்களை மட்டுமே தண்டித்து வந்த நீதிமன்றம் முதல்முறையாக ஒரு மரத்துக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை உத்தரவு, தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை வேதவாக்காகக் கொண்டு, பல்வேறு தன்னார்வக் குழுக்கள் என் இனத்தை முற்றாக அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் எனக்கெதிரான பரப்புரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பாமர மக்கள்கூட எங்கள் இனத்தை அழித்தொழிக்க அரிவாளோடு புறப்பட்டுவிட்டனர். அந்தளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டுவிட்டது போல.



அனைவரும் வெறுக்கும் அளவுக்கு என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமானவையா... அவை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையா? என யாருமே கேட்கவில்லை. தாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் அடிக்கும் கொட்டங்களையே தட்டிக் கேட்காதவர்கள், சாதாரண மரமான எனக்காகவா கேள்வி கேட்கப்போகிறார்கள். என்னைப் பற்றியும என்னுடைய பயன்பாடு பற்றியும் எனக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும் வருங்காலத்தில் மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் என் வாக்குமூலத்தை இங்குப் பதிவிடுகிறேன்.

சீமைக்கருவேலம் ஆகிய நான், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட முள்செடி. ஆங்கிலத்தில் என் பெயர் ‘புரொசோபிஸ் ஜுலிஃப்ளோரா’ (Prosopis Juliflora). என் சொந்த நாடு தென்னமெரிக்காவில் உள்ள பிரேஸில் என்றாலும் மனிதர்கள் உலகமயமாக்கல் கொள்கையைக் கொண்டு வருவதற்கு முன்பே நான் உலகம் முழுவதும் என் இருப்பை உணர்த்தியவன். இந்தியாவில் 1911-ம் ஆண்டிலிருந்து வளர்ந்து வருகின்றேன். இங்கு நானாக வரவில்லை. எரிபொருள் தேவைக்காகவும் உயிர்வேலிக்காகவும் விரும்பித்தான் என்னைக் கொண்டு வந்தார்கள். தொடக்கக் காலங்களில் என்னைச் சீராட்டிப் பாராட்டி பரவலாக வளர்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை அறிந்து நானும் என்னால் முடிந்த அளவு வேகமாகவும் பரவலாகவும் வளர்ந்தேன். விவசாய நிலங்களுக்கு வேலியாக அமைந்ததனால் வேலிகாத்தான் என அழைக்கப்பட்டேன்.

அந்தச் சமயங்களில், என் விதைகளை வாங்க உழவர்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர். என் உயிர்வேலியைப் பார்க்க ஆராய்ச்சி நிலையங்களுக்குப் படையெடுத்தார்கள். காடு மேடுகளில், தண்ணீரே இல்லாத இடங்களில், கற்களும் பாறைகளும் உள்ள நிலங்களிலும்கூட நான் வளர்ந்தேன். கொஞ்சம் காலம்தான் என் விதைகளைப் போட்டு வளர்த்தார்கள். அதன்பிறகு, நானாகவே வளர ஆரம்பித்தேன். என் மரத்தின் காய்களை ஆடு, மாடுகள் விரும்பிச் சாப்பிட்டன. ஜீரணிக்கப்படாத என் விதைகள் அவற்றின் சாணத்துடன் வந்து திறத்துடன் வளர்ந்தன.

வறட்சியைத் தாங்கும் என் குணத்தை எல்லோரும் பாராட்டினர். அப்போதெல்லாம் இந்த சமையல் எரிவாயுவும் இல்லை, மின் அடுப்புகளும் இல்லை. எல்லோரும் என்னைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்தினர். மதிய உணவு வழங்கும் சத்துணவு மையங்களில்கூட நான்தான் விறகாக எரிந்தேன். மக்கள் காடுகளுக்குச் சென்று, விறகு எடுப்பதை முற்றாக ஒழித்தேன். என்னால் வனங்கள் காப்பாற்றப்பட்டன எனப் பலர் எழுதினார்கள். மரங்களாய், புதர்களாய், செடிகளாய் எனப் பல வடிவங்களிலும் நான் உற்பத்தியைப் பெருக்கினேன். என்னை உயிர் வேலியாகவும், அதில் அதிகம் வளரும்போது விறகாகவும் பயன்படுத்தினர்.

என் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்ட சிலர் எரிகரியாக மாற்றினர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வேளாண்மை செய்ய முடியாத, எந்தப்பயிர்களும் வளராத நிலங்களில்... நான் செழுமையாக வளர்ந்தேன். என்னை மனிதர்களும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஆம், என்னை எரிகரியாக மாற்றித் தமிழகம் அல்லாது மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பினர். இன்றும் பல குடும்பங்களுக்கு நான்தான் வாழ்வாதாரமாக உள்ளேன். எந்த முதலீடும் இன்றி ஒரு ஏக்கரில் ஆண்டுக்குப் பத்தாயிரம் ரூபாயை நான் சம்பாதித்துக் கொடுக்கிறேன்.





தங்களின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப் பிறரை பலி கொடுப்பது மனிதர்களின் பொதுவான பழக்கம். அதே அடிப்படையில், இங்கு மனிதர்களின் செயல்களுக்கு நான் பலியாக்கப்பட்டுள்ளேன். மனிதர்கள், இயற்கையின் மீது நடத்தி வரும் அத்தனை தாக்குதல்களையும் மறைத்து, ‘இதனால்தான் இயற்கைக்கு அழிவு’ என்று ஒரு சாதாரண மரமான என் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இப்படிப் பொய்யான விஷயத்தைப் பரப்பி இளைஞர்களைத் திசைதிருப்பி விட்டுள்ளனர்.

மற்ற எல்லா தாவரங்களைப் போலதான் நானும் சுவாசிக்கிறேன். எந்த அளவுக்கு நீரை உறிஞ்சுகிறேனோ அதே அளவுக்கு ஹைட்ரஜனைச் சேர்ப்பேன் என்பதை இவர்கள் வசதியாக மறந்து, இல்லையில்லை மறைத்துவிட்டனர். இன்று, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கக்கூடாது எனப் போராடும் இவர்களுக்குச் சாதகமானவன்தான் நான். ஆம், எந்தவித மாசும் இன்றி நான், ஹைட்ரோகார்பனை உற்பத்தி செய்து கொடுக்கிறேன். இதுகூடவா இவர்களுக்குத் தெரியாது? நான் காற்றில் உள்ள கார்பனை அதாவது கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு உயிர்வளி என்ற ஆக்ஸிஜனை வெளியிடுவதும், நீரில் உள்ள ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் எடுத்து, அதை கார்பனோடு சேர்த்து ஹைட்ரோகார்பனை உருவாக்குகின்றேன் என்பது இவர்களுக்குத் தெரியவில்லையா... அல்லது தெரியாததுபோல நடிக்கிறார்களா?

எல்லா பெட்ரோலியப் பொருள்களுக்கும் அடிப்படை, இந்த ஹைட்ரோகார்பன்தான். நிலத்தின் அடியில் பல லட்சம் ஆண்டுகள் புதையுண்டதால் அவை அடர்த்தியாக உள்ளன. நான் அடர்த்தி இன்றி உள்ளதால் என் வெப்பத்திறன் அதைவிட குறைவாக உள்ளது.

ஆனால், நான் அவர்களைப்போல கரியமிலவாயுவை வெளியிட்டு வளியை மாசுபடுத்துவதில்லை. நான் வெளியிடும் கரியமிலவாயுவை என் தொடர் வளர்ச்சிக்கு நானே எடுத்துக்கொண்டு, வாயு அளவைச் சமன் செய்து விடுகின்றேன்.
நீர்நிலைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டடங்களைக் கட்டி ஆக்கிரமிப்புச் செய்துள்ளது யார்? நிலத்தையெல்லாம் கான்கிரீட் காடாக மாற்றிவிட்டு தாவர அழிவுக்கு நீதான் காரணம் என்று என்னை நோக்கிக் கூறுவது எந்த வகையில் நியாயம்? என்னை முறைப்படுத்தி வளர்த்துப் பயன்படுத்தாதது எப்படி என் குற்றமாகும். உங்களின் தேவைக்கு ஏற்பத்தானே மற்ற பயிர்களையும் வளர்க்கிறீர்கள், அதேபோல என்னையும் வளர்க்கலாம் அல்லவா.

நான் அபரிமிதமாக வளர ஊக்குவித்தது நீங்கள்தானே. என் விதைகளை ஆகாயத்தில் இருந்து காற்றின் மூலம் பரவவிட்டது நீங்கள்தானே. எனக்குத் தெரிந்து இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கால்வாசி சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் எரிபொருள் தேவைக்கு நான்தான் விறகாக பயன்பட்டு வருகிறேன்.

மண் அரிப்பு தடுத்தல், ஆற்றல் காடுகள்.... என இன்னும் நான் சொல்ல வேண்டிய தகவல்கள் ஏராளமாக உள்ளன.

இப்படிக்கு,

சீமைக்கருவேல மரம்.


கடந்த சில நாள்களாக சீமைக் கருவேல மரத்தின் வாக்குமூலம் என்ற ஒரு தகவல் வாட்ஸ்அப் மூலம் பரவிவந்தது. இதை பரவவிட்ட முனைவர் ப.வெங்கடாசலம், கூடுதல் தகவல்களைச் சேர்த்து இங்கே பகிர்ந்து கொள்கிறார். இவர் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உயிர் ஆற்றல் துறை, முன்னாள் பேராசிரியர்.

சீமைக் கருவேல மர வாக்குமூலத்தின் தொடர்ச்சி... மற்றும் சீமைக்கருவேல மர எதிர்ப்பாளர்களின் பதில்கள் அடுத்த இதழில்...

கரும்பைவிட அதிக வருவாய்



“சீமைக்கருவேல மரத்தின் கட்டைக்கரி ஒரு டன் 16,000 ரூபாய் விலை போகிறது. ஒரு டன் கரும்பின் விலை 2,400 ரூபாய்தான். பைசா செலவு இல்லாத சீமைக்கருவேலம், கரும்பு விவசாயத்தைவிட லாபகரமானது. இந்தக் கரிக்கட்டைகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தால் நெய்வேலியில் நிலக்கரி தோண்டத் தேவையில்லை. காவிரித் தண்ணீருக்கு கையேந்தவும் தேவையில்லை” என்கிறார், முன்னோடி விவசாயியும் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவருமான சி.வையாபுரி.

சீமைக்கருவேலம் மூலம் மின்சாரம்

கோயம்புத்தூர் மாவட்டம், ஓடத்துறை; திருப்பூர் மாவட்டம் செம்மிபாளையம் போன்ற கிராம பஞ்சாயத்துகள், சீமைக்கருவேலம் விறகைப் பயன்படுத்திச் சிறிய அளவில் மின்சாரம் தயாரித்துத் தங்கள் கிராமத்தின் மின்தேவையின் ஒரு பங்கைப் பூர்த்திச் செய்து வருகின்றன.

தேனீக்களின் நண்பன்!

அன்றும் இன்றும் என்றும் சாதாரண மக்களின் எரிபொருள் இந்தச் சீமைக்கருவேலம். விளைநிலங்களில் உயிர்வேலியாகப் பயன்படும் மரங்களில் முதன்மையானதும் சீமைக்கருவேலம்தான். 1952-ம் ஆண்டு, கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில், உயிர்வேலிக்கான செயல்விளக்கம் நடத்தப்பட்டதை அன்று ‘மேழிச்செல்வம்’ எனும் பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. ‘இந்தச் சாலை செடிகளை எந்தவித பூச்சிகளோ, நோய்களோ தாக்குவதில்லை.

ஆடு மாடுகள் இச்செடிகளின் நுனியைக் கடித்தாலும் அவை உடனே வளர்ந்து விடுகின்றன. இதன் காய்களை வெள்ளாடுகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. குன்னிக்கண்ணன் என்ற உழவர், இந்தச் செடி தேனீ வளர்ப்புக்கு வேண்டிய மகரந்தத்தை ஆண்டு முழுவதும் கொடுக்கிறது எனக் கூறுகிறார். ஹவாய் தீவுகளில் இதைப் பயன்படுத்தித் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன’ என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று...



10.09.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், ‘சீமைக்கருவேல்... வரமா... சாபமா?’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் துறை சார்ந்த வல்லுநர்கள் பலரின் கருத்துகள் இடம் பெற்றிருந்தன. அக்கட்டுரையில், சீமைக் கருவேலம் அழிக்க வேண்டிய அளவு பாதகமான மரம் இல்லை. அதேசமயத்தில், மிக அத்தியாவசியமான மரமும் இல்லை என்று வல்லுநர்கள் சொல்லியிருந்தார்கள்.

முத்தான வருமானம் கொடுக்கும் முருங்கை!
1 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 3 லட்சம் லாபம்!த.ஜெயகுமார், படங்கள்: க.தனசேகரன்



திருமணம், கோவில் விழாக்கள், வீட்டு விசேஷங்கள்... என எந்த விழாவாக இருந்தாலும் சமையலுக்கான காய்கறிப் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும் காய்கறிகளில் முருங்கைக்காயும் ஒன்று. அந்தளவுக்குத் தேவை இருப்பதால், பல விவசாயிகள் முருங்கைச் சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு.

பாப்பிரெட்டிப்பட்டிக்கு அடுத்துள்ள மோளையானூர் கிராமத்தில்தான் சாமிக்கண்ணுவின் முருங்கைத்தோப்பு உள்ளது. சேர்வராயன் மலையிலிருந்து குளிர்காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு இதமான சூழ்நிலையில் அவரது தோட்டத்துக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“எனக்குப் பூர்விகம் இந்த ஊருதான். தபால்துறையில பகுதிநேர ஊழியரா இருக்கேன். எங்கப்பா காலத்துல சாமை, தினைனு மானாவாரி பயிர்கள் அதிகம் பயிர் செஞ்சோம். அதுக்குப் பிறகு நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி, காய்கறிகள்னு பயிர் பண்ண ஆரம்பிச்சோம். நண்பர்களோட தொடர்புகளால கே.வி.கே., வேளாண் பல்கலைக்கழகம் நடத்துற பயிற்சிகள்ல கலந்துக்குற வாய்ப்புகள் கிடைச்சது. பயிற்சிகள்ல கத்துக்கிறதோட, வேளாண் விஞ்ஞானிகள்கிட்டயும் அப்பப்போ கலந்துரையாடுவேன். அப்படிக் கிடைத்த பயிற்சிகள், வேளாண் விஞ்ஞானிகள் தொடர்பாலதான் இன்னிக்கு நான் முருங்கை சாகுபடியில முன்னணியில இருக்கேன்.

அப்படி ஒரு பயிற்சியிலதான் துல்லியப் பண்ணை முறையைத் தெரிஞ்சுகிட்டு, 2003-ம் வருஷம் துல்லியப் பண்ணை முறையில தக்காளியையும், மரவள்ளியையும் பயிர் செஞ்சேன். அப்போ, 1 ஏக்கர்ல 58 ஆயிரம் கிலோ தக்காளி மகசூல் எடுத்தேன். வழக்கமாக ஒரு ஏக்கர்ல 10 ஆயிரம் கிலோ வரைதான் மகசூல் கிடைக்கும். துல்லியப் பண்ணை முறையில தெரிஞ்சுகிட்ட விஷயங்களை சரியா கடைப்பிடிச்சதாலதான் அதிக நாட்கள் காய் காய்ச்சு கூடுதல் மகசூல் கிடைச்சது. அதே முறையைத்தான் முருங்கைக்கும் பயன்படுத்திட்டிருக்கேன்” என்ற சாமிக்கண்ணு, நெல் வயலில் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரை மடை மாற்றிவிட்டு வந்து தொடர்ந்தார்.

“முருங்கைச் சாகுபடி யோசனையும் கே.வி.கே மூலமாதான் கிடைச்சது. அவங்க பரிந்துரை செஞ்ச பி.கே.எம்-1 செடிமுருங்கை ரகத்தைத்தான் ஆரம்பத்துல போட்டேன். ‘இந்த ரகத்துல 3 வருஷம் வரை மகசூல் எடுக்கலாம். நல்ல லாபம் கிடைக்கும்’னு விஞ்ஞானிகள் சொன்னாங்க. ஆனா நான், 6 வருஷம் வரை மகசூல் எடுத்தேன். அடுத்து ஏற்றுமதிக்கான வாய்ப்பு உள்ள பெரிய திரட்சியான காய் கிடைக்கிற ரகம் குறித்துத் தேட ஆரம்பிச்சேன். அப்போ, திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி அழகர்சாமி உருவாக்குன பி.ஏ.வி.எம் மரமுருங்கை ரகத்தைப் பரிந்துரை பண்ணாங்க. அதையும் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.

மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண் கலந்த சரளை மண். வாணியாறு நீர்த்தேக்கத்துல இருந்து வர்ற தண்ணிதான் நீர் ஆதாரம். 1 ஏக்கர் நிலத்துல நெல், 1 ஏக்கர் நிலத்துல பி.ஏ.வி.எம் ரக முருங்கை, 1 ஏக்கர் நிலத்துல பி.கே.எம்-1 ரக முருங்கை இருக்கு. மீதி நிலத்தை உழவு ஓட்டி வெச்சிருக்கேன். அதோட பாலுக்காக 2 மாடுகள் வெச்சிருக்கேன். பி.ஏ.வி.எம் ரகத்துல அஞ்சாவது வருஷமா மகசூல் எடுத்திட்டிருக்கேன். இது மர முருங்கை ரகம். சொட்டுநீர்ப் பாசன முறையிலதான் தண்ணீர் பாய்ச்சுறேன். பொதுவா ஏப்ரல் மாசத்துல இருந்து ஆகஸ்டு மாசம் வரைக்கும்தான் முருங்கை அறுவடை இருக்கும். ஆனா, நான் செப்டம்பர் மாசம் முடியுற இந்த நேரத்துலயும் காய் கிடைக்கிது. காய் முடிஞ்சதும் கவாத்து பண்ணி இடுபொருட்களைக் கொடுத்துடுவேன்.

பி.கே.எம்-1 ரக முருங்கை இப்போ காய்ப்பு முடியுற தறுவாய்ல இருக்கு. அந்தக் காய்களை லோக்கல் மார்கெட்லதான் விற்பனை செய்ய முடியுது. ஆனா, பி.ஏ.வி.எம் ரக முருங்கை ஏற்றுமதித் தரத்துல இருக்குறதால விற்பனை வாய்ப்பு அதிகமா இருக்கு. காய் நல்ல நிறத்தோட, தரமா, திரட்சியா இருக்குறதால நல்ல விலையும் கிடைக்கிது. தோட்டத்துக்கே வந்து காய் வாங்கிக்கிறாங்க. தரமான பொருளை உற்பத்தி செஞ்சா கிராக்கி அதிகமா இருக்குங்கிறதை நான் நேரடியா உணர்ந்திருக்கேன்” என்ற சாமிக்கண்ணு நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.

“ஏப்ரல் மாசத்துல இருந்து செப்டம்பர் மாசம் வரை முருங்கைக்காய் காய்க்கும். ஜூன், ஜூலை மாசங்கள்ல வரத்து அதிகமா இருக்கிறதால விலை குறைஞ்சிடும். ஆகஸ்ட் மாசத்துக்கு மேல விலை உயர ஆரம்பிக்கும். செப்டம்பர் மாசத்துக்கு மேல காய் கிடைச்சா நல்ல விலை கிடைக்கும்.

1 ஏக்கர் நிலத்துல போட்டிருக்கிற பி.ஏ.வி.எம் ரகத்துல 6 வருஷமா மகசூல் கிடைச்சிட்டிருக்கு. வழக்கமா ஒரு ஏக்கர்ல 10 டன் முதல் 12 டன் வரைதான் முருங்கைக்காய் கிடைக்கும். நான் அதிகபட்சமா வருஷத்துக்கு 18 டன் எடுத்திருக்கேன். பொதுவா 15 டன்னுக்கு மேலதான் மகசூல் கிடைக்கிது.

இந்த முறை 16 ஆயிரத்து 800 கிலோ (16.8 டன்) மகசூல் கிடைச்சிருக்கு. பொதுவா ஒரு கிலோ 8 ரூபாய்ல இருந்து 35 ரூபாய் வரை விற்பனையாகும். சில நாட்கள்ல மட்டும் அதிக விலை கிடைக்கும். நான் அதிகபட்சமா கிலோ 80 ரூபாய்னு கொடுத்திருக்கேன். 16 ஆயிரத்து 800 கிலோ காய் விற்பனை செய்தது மூலமா 4 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுல ஒன்றரை லட்ச ரூபாய் செலவு போக, 3 லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய் லாபம். வருஷத்துக்கு வருஷம் காய்ப்பு மாறுங்கிறதால வருமானமும் கூடிக் குறையும். எப்படிப்பார்த்தாலும் ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய் கண்டிப்பா லாபம் கிடைச்சுடும்” என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சாமிக்கண்ணு, செல்போன்: 97883 18950.

செடிமுருங்கை நாற்று உற்பத்தி!



“பிகேஎம்-1 செடிமுருங்கை விதை வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள்ல கிடைக்கும். அத வாங்கி நாத்தாக உற்பத்தி செய்துதான் நடவு செய்றேன். 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் எரு, 2 கிராம் சூடோமோனஸோடு 500 கிராம் வளமான மண்ணைக் கலந்து பாலித்தீன் பையில் இட்டு முருங்கை விதையை ஊன்ற வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் தெளித்து வந்தால், 7-ம் நாளுக்கு மேல் முளைத்து வரும். 40-ம் நாளுக்கு மேல் நடவு செய்யலாம்”.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி குறித்து சாமிக்கண்ணு சொன்ன தகவல்கள் இங்கே...

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 5 கலப்பை கொண்டு 2 சால் உழவு செய்ய வேண்டும். அடுத்து கொக்கிக் கலப்பை கொண்டு 1 சால் உழவு செய்ய வேண்டும். அடுத்து 10 டன் எருவைக் கொட்டிக் கலைத்து... ரோட்டவேட்டர் மூலம் உழுது வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச்செடி 8 அடி என்ற இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 500 குழிகளுக்கு மேல் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் தலா 20 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, 5 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து இட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். பிறகு சொட்டுநீர்க் குழாய்களைப் பதித்து, வாரம் ஒருமுறை தண்ணீர்விட்டு வர வேண்டும்.



நடவு செய்த 5, 10 மற்றும் 15-ம் நாட்களில் நீரில் கரையும் உரத்தை பாசன நீருடன் கரைத்துவிட வேண்டும். தலா 150 மில்லி ட்ரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் ஸ்பைரில்லம், வேம் ஆகியவற்றைக் கலந்து வாரம் ஒருமுறை பாசனநீருடன் கொடுக்க வேண்டும். மூன்று மாதங்கள் இப்படிக் கொடுத்துவிட்டு அதன் பிறகு மாதம் ஒருமுறை கொடுத்து வர வேண்டும்.

15-ம் நாளில் ஜிங்க் சத்தை அதிகரிக்கத் தேவையான உரத்தை 1 செடிக்கு 10 கிராம் என்ற அளவில் இட வேண்டும். தொடர்ந்து தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து அடங்கிய நீரில் கரையும் உரத்தை பாசன நீரில் கரைத்து கலந்துவிட வேண்டும். செடிகள் ஒரு அடி உயரம் வளர்ந்த பிறகு, நுனியைக் கிள்ளிவிட்டு, 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் சூடோமோனஸ் என்ற அளவில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். இது, பூஞ்சணத்தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.

செடிகளில் பூவெடுக்கும் நேரத்தில் 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் நுண்ணூட்டக் கலவை என்ற விகிதத்தில் கலந்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். இதே கரைசலை காய்க்கும் பருவத்தில் 15 இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

அவ்வப்போது உயிர் பூச்சிவிரட்டியை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளித்து வந்தால் பூச்சிகள் கட்டுப்படும். அவ்வப்போது மண்ணில் உள்ள சத்துக்களைச் சரிபார்த்து... தேவைப்படின் போரான், மெக்னீசியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை அறுவடை முடிந்த பிறகும், ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தை இட்டு ரோட்டவேட்டர் மூலம் உழ வேண்டும். முதல் ஆண்டில் மகசூல் குறைவாகத்தான் இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் அதிகரிக்கும்.

பயிற்சிகள் இலவசம்!

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் தான் சாமிக்கண்ணுவுக்கு முருங்கை சாகு படிக்கான தொழில் நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளனர். அம்மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் சண்முகத்திடம் பேசியபோது, “எங்கள் மையத்தில் அனைத்துவிதமான பயிர்களுக்கும் ரசாயனம் மற்றும் இயற்கை முறை சாகுபடி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். மாதம் ஒரு பயிற்சி அளித்து வருகிறோம். உயிர் உரங்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்” என்றார்.

தொடர்புக்கு: வேளாண்மை அறிவியல் மையம், பாப்பாரப்பட்டி. தொலைபேசி: 04342 248040

பிசின்... கவனம்!

“மரங்களைக் கவாத்து செய்யும் சமயங்கள்ல வெட்டிய இடங்கள்ல உடனடியாக... 1 லிட்டர் தண்ணிக்கு 10 கிராம் சூடோமோனஸ் கலந்து தெளிச்சி விடணும். இல்லைன்னா, பிசின் உருவாகி மரம் சேதமாகிவிடும்”.

நான் கற்ற பாடம்!

“ஆரம்பத்துல ரசாயன உரங்களைத்தான் அதிகம் பயன்படுத்தினேன். அதுல படிப்படியா மகசூல் குறைய ஆரம்பிச்சது. அப்பறம், ஜிப்சம், அசோஸ் ஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, தொழுவுரம் எல்லாத்தையும் ரசாயன உரங்களோட சேர்த்துப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். அதுல மகசூல் அதிகரிக்க ஆரம்பிச்சது.

இப்போ இயற்கை இடுபொருட்களைத்தான் அதிகமா கொடுத்திட்டு இருக்கேன். அதனால நல்ல விளைச்சல் கிடைச்சிட்டிருக்கு. முன்னாடி பஞ்சகவ்யாவை நானே தயாரிச்சேன். ஆனா, இப்போ நேரம் இல்லாததால உயிர் உரங்களை மட்டும் பயன்படுத்திட்டிருக்கேன். ஆக, முக்கால் பங்கு இயற்கை, கால் பங்கு செயற்கைன்னு விவசாயம் செய்றேன். கூடிய சீக்கிரமே முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்” என்கிறார், சாமிக்கண்ணு.



ஜூன் மாசம் ஏற்ற பருவம்!

“முருங்கைக்கு ஜூன் பட்டம் ஏற்றது. அடுத்து அக்டோபர்-நவம்பர் பட்டத்தில் நடவு செய்யலாம். நாமே நாற்று உற்பத்தி செய்வது நல்லது. செம்மண், செம்மண் சரளை நிலங்களில் செழிப்பாக வளரும்”.

கைகொடுக்கும் சொட்டுநீர்ப் பாசனம்!

“சொட்டுநீர்ப் பாசனம் செய்யும்போது தண்ணீர் நிறையவே மிச்சமாகுது. ஒரு ஏக்கர் முருங்கைத் தோட்டத்துக்கு 2 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சினால் போதும். ஒருமுறை பாசனம் பண்ணும்போது சராசரியா 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர்தான் செலவாகுது” என்கிறார், சாமிக்கண்ணு.

விதை, இலையிலும் வருமானம்!

“காய்க்கு விலை குறைவாகக் கிடைக்கும் சமயங்கள்ல பறிக்காம மரத்திலேயே முற்றவிட்டு விதை எடுக்கலாம். அதைக் காயவைத்து பத்திரப்படுத்தி விற்பனை செய்ய முடியும். எண்ணெய் உட்படப் பல தேவைகளுக்காக முருங்கை விதைகளை வாங்குறாங்க. ஒரு கிலோ விதை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகுது. அதேபோல, கவாத்துச் செய்யும்போது கிடைக்கும் இலைகளையும் காய வைத்து விற்பனை செய்ய முடியும். பி.கே.எம்-1 ரகத்துல அதிக இலைகள் கிடைக்கும். பி.ஏ.வி.எம் ரகத்தில் இலை குறைவாகத்தான் கிடைக்கும்” என்கிறார் சாமிக்கண்ணு.
சீமைக் கருவேல வேர் 150 அடி ஆழம் பரவுமா? உண்மை என்ன!?

துரை.நாகராஜன்

PASUMAI VIKATYAN




"சீமைக்கருவேல மரங்களை வேரோடு ஒழிப்போம்" என்ற வாசகம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தீவிரமாகப் பேசப்பட்டு வரும் ஒன்று. நீதிமன்றமும் சீமைக்கருவேல மரங்களுக்குத் தண்டனை கொடுத்து வேருடன் அழிக்கச் சொன்னது. காரணம், அதன் வேர்கள் பூமிக்குள் 80 அடி ஆழம் முதல் 150 அடி ஆழம் வரை பாயும். இதனால் நிலத்தடி நீரின் ஆழம் குறைகிறது. என்ற காரணத்தால் நீதிமன்றமும் இதனைத் தடை செய்தது. இதனால் சீமைக்கருவேல எதிர்ப்பாளர்களும் களத்தில் இறங்கி சீமைக்கருவேல மரங்களை வெட்டி வீழ்த்த ஆரம்பித்துள்ளனர். அவ்வளவு ஆபத்தானதா சீமைக்கருவேல மரங்கள்... சீமைக் கருவேலமரம் 12 அடிகளுக்கும் மேல் வளரக்கூடியது. சீமைக்கருவேல மரத்தின் ஆணிவேர் 150 அடி ஆழத்திற்குச் செல்கிறது என்பதை இந்தியாவில் இதுவரை யாருமே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதற்கான தரவுகள் மட்டுமே உள்ளன. குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்களும், வேரின் ஆழத்தைப்பற்றி அறிவியல் பூர்வமான கருத்தை முன் வைக்கவில்லை. சீமைக் கருவேலமரம் வறட்சியில் செழித்து வளரும். வறட்சியில் செழித்து வளரும் என்ற காரணத்துக்காகவே சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்படுகின்றன என்று சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் சீமைக்கருவேல மரங்களுக்கு ஆதரவாகக் கருத்துக்கள் பரவி வருகிறது. சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடிநீரை உறிஞ்சுகிறது என்றால், கடந்த 50 ஆண்டுகளில் நிலத்தடிநீரே இல்லாமல் போயிருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. ஓர் இடத்தின் நிலத்தடிநீர் குறைவதற்கு மணல் அள்ளுதல், நிலத்தடிநீரை உறிஞ்சி ஆலை உபயோகத்துக்குப் பயன்படுத்துதல் எனப் பல காரணங்கள் இருக்கலாமே...



சீமைக்கருவேல மரங்கள் 1950-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகமாக வேர்விட்டது. ஆரம்பக் காலத்தில் விறகுகளுக்காகவும், நிலத்தில் வேலிகளுக்காகவும் சீமைக்கருவேல மரங்கள் பயன்பட்டன. தென் மாவட்டங்களில் விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றளவும் விறகுகளை வெட்டி பெரிய ஆலைகளுக்கு எரிபொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். இதுதவிர, இன்றளவும் கிராமங்களில் வீட்டு எரிபொருட்களின் உபயோகத்தில் சீமைக் கருவேல மரங்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. வறட்சியில் விளையும் சீமைக்கருவேல மரங்கள் இல்லாவிடில் தென்மாவட்ட மானாவாரிப் பகுதிகளில் விவசாயம் செழித்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான். தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களில் இருந்து கரியை எடுத்து இரும்பு ஆலைகளுக்கும் அனுப்பி, இம்மரங்களைத் தனியே விவசாயம்கூடச் செய்து வருகின்றனர். இதுதவிர, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 1000 லோடு சீமைக்கருவேல மரங்கள் விறகுக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.



வறட்சிக் காலங்களில் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் உணவாக இந்தச் சீமைக்கருவேல மரத்தின் காய்கள் கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் இதன் இலையையும் கால்நடைகள் உண்பதுண்டு. சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்கு, கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்று மற்றொரு காரணமும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் காரணமும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை. மேலும், வறட்சி காரணமாக நிலங்களில் இருந்து அகற்றிவிட்டால் அந்தந்த மாவட்டங்களுக்கு அவர்களின் மாற்று வழி என்ன என்பதும் இங்கே கேள்விக்குறிதான். கிராமங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் சீமைக்கருவேல மரங்கள் இல்லாமல் போனால், மக்கள் மற்ற மரங்களை வெட்டும் செயல் நடக்க ஆரம்பிக்கும். ஆனால், மக்கள் வெட்டும் மற்ற மரங்கள் வளர அதிகத் தண்ணீரும், அதிக நாட்களும் எடுத்துக் கொள்ளும். இதனால் கிராமங்களில் மண்ணெண்ணையும், எரிவாயு சிலிண்டர் பயன்பாடும் அதிகரிக்கும். வறட்சிக்குக் காரணம் இம்மரங்கள் எனச் சொல்லப்பட்டால், இதை அழிப்பதற்குப் பின்னால் ஆயில் நிறுவனங்கள் இருக்கின்றதோ என்ற சந்தேகம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஒரு மரம் வறட்சியை விதைத்து, வேகமாக வளர்கிறது என்பதற்காக அம்மரங்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது நியாயம் என வைத்துக் கொண்டால் இங்கு அதிக அளவில் நிலத்தடிநீரை எடுக்கும் நிறுவனங்களுக்கும் தடை விதிப்பதுதானே நியாயம். சீமைக்கருவேல மரங்களை அழிக்க உத்தரவு போட்டுள்ள நீதிமன்றத்திடமும் போதுமான அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை. "முக்கியமாக இந்தச் சீமைக்கருவேல மரங்களை உற்பத்தி செய்ய எந்த விதமான செலவும் இல்லை. கரும்பில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலையை விட, சீமைக்கருவேல மரத்தின் கரி வியாபாரத்தால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை அதிகம்" என்று விவசாயிகள் தரப்பிலும் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள். பொதுவாக இதன் குணமே, வறட்சியான இடங்கள், தரிசு நிலங்கள் எனக் குறிப்பிட்ட நிலங்களில்தான் சீமைக்கருவேல மரங்கள் வளர்கின்றன.



சீமைக்கருவேல மரங்களால்தான் நிலத்தடிநீர் முழுமையும் உறிஞ்சப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரமும் இல்லை. இதனை அழிப்பதற்காக முன்வரும் சமூக ஆர்வலர்களுக்குத் தொழிற்சாலைகளால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவது தெரியாதா?.. சீமைக்கருவேல மரங்களின் அழிப்புக்காக போராடும் சமூக ஆர்வலர்கள், நிலத்தடிநீரை முழுமையாக உறிஞ்சும் தொழிற்சாலைகளை அகற்றுவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். ஏனெனில், சீமைக்கருவேல மரங்களை விட ஆபத்தானவை, நிலத்தடிநீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள்...
கொஞ்சம் அரிசி, தண்ணீர் கொடுத்தால் கல்யாணம்! - சோமாலியாவின் சோகக் கதைகள்

PASUMAI VIKATAN
இரா.கலைச் செல்வன்


" இதச் செய்றதுக்கு நான் செத்திடுறேன். அதோ... அந்தக் காட்டோட புதருக்குள் போய் சிங்கங்களுக்கு இரையாகிடுறேன்..."

" போ... நாங்க மட்டும் என்ன ஆகப் போறோம். நீ போயிட்டன்னா, கொஞ்ச நேரத்திலேயே நாங்களும் தான் போய் சேரப் போறோம். பாரு... உன்னோட ரெண்டு தங்கச்சிங்கள. அதுங்களும் கருகி, உருகி சாகத்தான் போகுது. வெறும் எலும்புகளா இந்த மண்ணுக்குள்ள போகப்போறோம்..."

கருப்பை தோலின் நிறமாகக் கொண்ட ஒரு தாய், மகளின் உரையாடல் இது. நமக்கு அந்த மொழி புரியாது.



சுடு மண்ணில் உட்கார்ந்து தாரைதாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள் அந்த 14 வயதுப் பெண். அவள் ஒரு 40 வயது ஆணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவள் தாயின் கோரிக்கை. அதற்குத் தான் அவள் செத்து போகிறேன் என்று கதறுகிறாள். ஆனால், வேறு வழியில்லை. எவ்வளவு அழுதாலும், புரண்டாலும் அவள் அதை செய்யத் தான் போகிறாள். தன் குடும்பத்திற்காக, பஞ்சத்தில் பரதேசியாய் பரிதவித்துக் கொண்டிருக்கும் தன் குடும்பத்திற்காக... தான் திருமணம் செய்யப்போவதால் அவர்களுக்குக் கிடைக்கும் கொஞ்சம் தண்ணீருக்காகவும், சொற்ப பணத்திற்காகவும் அவள் அதை செய்யத் தான் போகிறாள்.

இந்த மனிதர்களின் வலியை உணர நாம் முதலில் வெப்பம், சூடு, தாகம், பசி, பட்டினி, பஞ்சம், மரணம் போன்ற விஷயங்களை என்னவென்று உணர வேண்டும்... உலகளவில் பஞ்சத்திற்கு பெயர் பெற்ற சோமாலியாவின் இன்றையக் கதைகளைத் தான் மேலே பார்த்தோம், இனி பார்க்கப் போகிறோம். நீங்கள் இதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். தோல்... எலும்புகளோடு ஒட்டிய குழந்தைகள், எலும்புக் கூடுகளாய் கிடக்கும் விலங்குகள், காய்ந்துப் போய் கருகும் நிலையிலிருக்கும் மரங்கள் என சோமாலியாவின் பஞ்சத்தைப் பறைசாற்றும் புகைப்படங்களை எங்கேயாவது ஒரு தடவையாவது பார்த்திருப்போம்.



"அடப் போங்கப்பா... சும்மா ஆப்ரிக்கா, பசி, பட்டினி, பஞ்சம்.... வேறெதுவுமே இல்லையா ?" என்று சலித்துக் கொள்ளும் அன்பர்களுக்கு இதைப் புரிந்துக் கொள்வது கொஞ்சம் கடினம் தான். கருப்பினத் தென்னிந்தியர்களோடு பழகி இந்திய தேசத்தின் சமத்துவத்தைப் பறைசாற்றும் மேன்குடி மக்களுக்கு, ஆப்ரிக்க கருப்பர்களின் வலி கடந்து போகும் செய்தியாகத் தான் இருக்கும். இருந்தும் அது பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தைக் கொண்டுள்ளது.

சோமாலியாவின் முக்கிய முதுகெலும்பு கால்நடை வளர்ப்பு தான். ஆனால், பலரும் வளர்த்த கால்நடைகள் இன்று வெறும் எலும்புகளாய் மிஞ்சிக்கிடக்கின்றன. சோமாலியாவில், இன்றைய நிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடுமையான பசிப் பட்டினியில் சிக்குண்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. சோமாலியாவைச் சேர்ந்த உணவு மற்றும் விவசாய அமைப்பு, பல கால்நடை மருத்துவர்களை உலகம் முழுக்க இருந்து வரவழைத்து கால்நடைகளைக் காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சோமாலிய மக்களுக்கான தண்ணீரையும், உணவையும் வழங்கப் போராடிக் கொண்டிருக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் மட்டும் 2 லட்சம் மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். தாகத்தை நீண்ட நேரம் வரைத் தாக்குப்பிடிக்கும் ஒட்டகங்கள் கூட, ஆங்காங்கே மரணித்து விழுகின்றன. சந்தைகளில் 950 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒட்டகங்கள் இன்று 200 டாலர்களுக்கு கம்மியாகவே வாங்கப்படுகிறது.



குடும்பத்தைக் காப்பாற்ற சொற்ப காசிற்காகவும், கிடைக்கும் கொஞ்சம் உணவு மற்றும் தண்ணீருக்காகவும் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை விற்கும் அவலம் நடந்தேறி வருகிறது. கிட்டத்தட்ட 4 லட்சம் குழந்தைகள் புரதச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு எலும்பும், தோலுமாய் காட்சியளிக்கிறார்கள். ஒரு கைப்பிடி அளவிலான சோற்றை 10 பேர் பகிர்ந்து உண்ணுகிறார்கள். வாழும் வழி தெரியாதவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஆப்பிரிக்க கண்டத்தின் மற்றொரு நாடான கென்யாவிலும், கடுமையான வறட்சியால் மிருகங்களும், மனிதர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.



ஆப்ரிக்க நாடுகளின் வறட்சியைப் போக்க ஐ.நாவுக்கு அமெரிக்கா வழக்கமாகக் கொடுக்கும் தொகையைத் தற்போது தர இயலாது என சமீபத்தில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இது மிக மோசமான நடவடிக்கை என்று சொல்லியிருக்கிறார் ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஜெனரல் செக்ரெட்டரி, ஸ்டீபன் ஓ பிரையன். அவர் மேலும் கூறுகையில்,

" உலக வரலாற்றின் மிக மோசமான காலகட்டத்தில் நிற்கிறோம். ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இது போன்ற மிக மோசமான ஒரு நிலையைக் கண்டதில்லை. கொஞ்சம் தவறினாலும், இரண்டாம் உலகப் போரில் அழிந்த, அழிக்கப்பட்ட உயிர்களைவிட ஆப்ரிக்காவில் நாம் இழக்க நேரிடும்..." எனும் மிகப் பெரிய அபாயத்தைக் கூறியுள்ளார்.



பூமியின் இயற்கை ஆதாரமாய் திகழ்ந்த ஆப்ரிக்காவில் மக்களும், யானைகளும், மான்களும், சிங்கங்களும், ஒட்டகங்களும், மாடுகளும், ஆடுகளும், குதிரைகளும், முயல்களும், பாம்புகளும், இன்னும்... இன்னும்... உயிரினங்களும் தாகத்தில் தவித்து, பசியில் பரிதவித்து மரணித்து வருகின்றனர்.

சொந்த நாட்டு விவசாயிகளை அம்மணமாக்கிப் பார்த்து ரசிக்கும் மோடிகளோ, சிரியாவில் அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அந்த நாட்டிற்கு ஏவுகணை விட்டு மனிதத்தைக் காக்க முயற்சித்து, ஆப்ரிக்காவின் மனிதர்களைக் காக்க ஒதுக்கிய பணத்தைக் கூட தர மறுக்கும் டொனால்ட் ட்ரம்ப்களோ அல்ல ஆப்ரிக்க மக்களுக்குத் தேவை. தங்கள் வலிகளைக் கேட்க முனையும் சில இதயங்கள் தான்... வலிகளைக் கேட்கும் இதயங்கள் தான், ஒரு கட்டத்தில் அந்த வலிகளைப் போக்கும் மருந்தாகவும் மாறும்.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...