Saturday, July 8, 2017

10 பள்ளி மாணவர்களுடன் வாரம் ஒருநாள் விருந்து!” - ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முயற்சி! 

ஷோபனா எம்.ஆர்



“ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, துணை ஆணையர் பங்களாவில் இரவு விருந்து அளிக்கப்படும். அதற்கு முன்பு, துணை ஆணையர் அலுவலகத்தில் நடக்கும் பணிகளை அந்த மாணவர்கள் கவனிப்பார்கள். அவர்களின் மாவட்டத்தைப் பற்றி துறை ரீதியாக அறிந்துகொள்வார்கள். இது, அவர்களின் மாவட்டத்துக்கு நன்மை செய்யும் திட்டத்தை, கனவுகளை அவர்களுக்குள் விதைக்கும் என்று நம்புகிறேன்” - இப்படி ஒரு அறிக்கையுடன் வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ளார், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தமெங்லாங் (Tamenglong) மாவட்டத்தின் துணை ஆணையர் ஆம்ஸ்ட்ராங் பாமே. அட சுவாரஸ்யமா இருக்கே... என்றபடியே அவரை தொலைபேசியில் பிடித்தோம்.

“நான் இங்கே துணை ஆணையராகப் பதவியேற்று ஒரு மாதமாகிறது. இதுதான் என் சொந்த மண். சொந்த மாவட்டத்திலேயே துணை ஆணையராகச் சேர்ந்தது சந்தோஷமாக இருக்கிறது. என் சிறு வயதில், துணை ஆணையர் அலுவலகத்தைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். இந்த அலுவலகம் எப்படி இயங்குகிறது? யாரெல்லாம் இருப்பார்கள்? அவர்களுக்கு என்ன மாதிரி வேலை இருக்கும் எனப் பல கேள்விகள் எனக்குள் எழும். ஆச்சர்யமாக துணை ஆணையர் அலுவலகத்தை பார்த்தபடியே நகர்வேன். அந்த ஆர்வம்தான் என்னை ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கவைத்தது. 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றேன். ஆனால், நான் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்குக் காரணமாக இருந்த என் அப்பா அப்போது உயிரோடு இல்லை. அவர் ஒரு பள்ளி ஆசிரியர். அவருக்குள் நிறையக் கனவுகள் இருந்தன. நிலவில் முதன்முதலில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்கை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் நினைவாக எனக்கு இந்தப் பெயரைச் சூட்டினார். சகோதர, சகோதரிகளுடன் சேர்த்து நாங்கள் ஏழு பேர்.

என் குடும்பம் ஏழ்மையான சூழலில் இருந்தாலும், எங்கள் படிப்புக்குச் செலவுசெய்ய அப்பா யோசித்ததே இல்லை. அரும்பாடுபட்டுப் படிக்கவைத்தார். நாங்கள் ஜிமா (zema) என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் இனத்திலிருந்து வரும் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி நான்தான். என் மக்களுக்குத் தொடர்ந்து பல நன்மைகள் செய்ய நினைக்கிறேன்'' என்று உற்சாகமாகப் பேசிய ஆம்ஸ்ட்ராங் பாமே, மாணவர்களுக்கான விருந்து விஷயம் பற்றி சொல்லும்போது மேலும் உற்சாகமாகிறார்.

''குழந்தைகளிடம் தலைமைப் பண்புகள் வளர வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தத் துணை ஆணையர் அலுவலகச் சந்திப்பும் விருந்தும். என் நண்பர்கள் பலரும் மருந்துவர்களாகவும் பல துறையின் வல்லுநர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ஸ்கைப்’ மூலம் மாணவர்களிடம் பேசவைக்கப் போகிறேன். இதன்மூலம், மாணவர்களுக்கு உலகில் கொட்டிக்கிடக்கும் கல்வி வாய்ப்புகளை அறிவார்கள். அவர்களின் கனவுகள் விரிவடையும். அவர்களுக்கான தொழில்நுட்பத்தையும் இதன்மூலம் அறிமுகப்படுத்துவேன்” என்கிறார் உற்சாகம் குறையாமல்.

இதுபோன்ற வித்தியாசமான திட்டங்களை செய்வது இவருக்குப் புதிதல்ல. 2012-ம் ஆண்டு, அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலத்தின் சாலைகளை மணிப்பூருடன் இணைக்கும் வகையில், ஒரு முயற்சியில் இறங்கினார். தன்னார்வலர்களின் உதவியுடன் நிதி திரட்டி 100 கிலோமீட்டர் தூரத்துக்குச் சாலையை அமைத்தார். இந்தப் பணிக்காக தனது சொந்தப் பணத்திலிருந்து ஐந்து லட்சத்தை ஒதுக்கினார். மேலும், இவர் மனைவி அவிடோலி (Avitoli) மற்றும் சகோதரர் ஜெரிமியாவும் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தனர்.

''எந்த ஒரு நல்ல விஷயத்தையும் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அது... ஊர், மாநிலம், நாடு என விரியும்போது நம் கனவுகள் ஜெயிக்கும்'' என்கிறார் ஆம்ஸ்ட்ராங் பாமே.
 
அன்று ஊருக்குச் சாலை அமைத்தவர், இன்று குழந்தைகளுக்கு புது வாசலைத் திறந்திருக்கிறார். இவரின் முயற்சிக்கு ஒரு ராயல் சல்யூட்!
ராஜ சாப்பாடு வழங்கி ஜி.எஸ்.டி வரியும் செலுத்தும் 'ஆச்சர்ய' கேன்டீன்! 

எம்.குமரேசன்

கோவை மாநகர் சிங்காநல்லூரில் சாந்தி பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. கோவை - உதகை சாலையில் உள்ள துடியலூர் மற்றொரு புறநகர் பகுதி. துடியலூரில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள சிங்காநல்லூர் சாந்தி பங்கிற்கு வந்து பெட்ரோல் நிரப்பிச் செல்லும் வாகன ஓட்டிகளை கோவையில் பார்க்க முடியும். கோவை மக்களிடையே 'சாந்தி' என்கிற பெயருக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு நற்பெயர். புகழ்பெற்ற சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் இது. இதன் அருகிலேயே செயல்படுகிறது சாந்தி கேன்டீன்.



'அம்மா ' உணவகத்துக்கு முன், கோவைவாசிகளுக்கு கிடைத்த 'அட்சய பாத்திரம்' என்றே இந்தக் கேன்டீனை சொல்லலாம். காலையில் இட்லி, சப்பாத்தி, வடை மலிவு விலையில் கிடைக்கும். மதியம் கூட்டு , பொறியல், வடை, அப்பளம், பழம் என 13 வகை கூட்டுகளுடன் 'சரவண பவன்' ரேஞ்சுக்கு 'லஞ்ச்' கிடைக்கிறது. ' இன்று என்ன ஸ்பெஷல்' என்பதும் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும்.

எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். உங்கள் வயிறு நிரம்பாமல் போனால் மட்டுமே சாந்தி கேன்டீன் வருத்தப்படும். விலையோ வெறும் 25 ரூபாய்தான். வாடிக்கையாளர்களுக்கு ராஜ சாப்பாடு வழங்கி, அதற்கான ஜி.எஸ்.டி வரியையும் இந்த கேன்டீனே செலுத்துகிறது என்பதுதான் இப்போதையை ஆச்சரியத் தகவல். கோவை நகரில் பத்து ரூபாய்க்கு டீ கூட குடிக்க முடியாது. இந்தக் கேன்டீனிலோ ஃபில்டர் காபியின் விலையே 5 ரூபாய்தான்.

ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்ததும் ஹோட்டல்களில் 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் ரூ. 128 பில் கட்ட வேண்டியதிருக்கிறது. பிரச்னை என்னவென்றால், ஜி.எஸ்.டி வரியைக் காரணம் காட்டி குடிநீர் கேன் சப்ளை செய்பவர்கள் கூட 5 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளனர். இவர்கள் எந்த பில்லும் கொடுப்பதில்லை. நாமும் பில் பற்றி யோசிப்பதும் இல்லை. இதைப்போலவே பல ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி என்ற பெயரில் தாறுமாறாக பில் ஏற்றுகின்றனர். அத்தியாவசியப் பொருட்களில் அரிசி, காய்கறிக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை. சில பொருட்களுக்கு 5,12,18,28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை, பால், இன்ஸ்டன்ட் காபி, டீ போன்றவற்றுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரிதான் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல ஹோட்டல்களில் காபிக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறார்கள். ஹோட்டலில் பொங்கல், காபி சாப்பிடுகிறீர்கள் என்றால், மொத்த பில் 88.50 வருகிறது என்றால், அந்த 88.50 ருபாய்க்கு 18 சதவிகித வரி விதிக்கிறார்கள் காபிக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரிதானே விதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லாததால், பில்லை சரிபார்க்காமலேயே செலுத்தி விடுகின்றனர். ஆனால், சாந்தி கேன்டீனைப் பொறுத்தவரை, எந்த பொருளுக்கு என்ன ஜிஎஸ்டி வரியோ... அதை மட்டும் பில்லில் சரியாக காட்டி, வாடிக்கையாளர்கள் சார்பில் அரசுக்கு செலுத்தப்படுகிறது.

இங்கு, சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பண்டத்துக்கும் அதற்கான சி. ஜி.எஸ்,டி வரியும் எஸ்.ஜி.எஸ்.டி வரியும் தனித் தனியாக பிரித்துக் காட்டப்படுகிறது. ‘ஒரு குடும்பத்தின் மொத்த பில் ரூ.110 ஆகியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 3 கிச்சடி விலை ரூ.30, வெண்பொங்கல் ஒன்றின் விலை ரூ.10 , சப்பாத்தி ஒரு செட் ரூ.20,புளி சாதம் ரூ.10 ,ராகி பால் 3 ரூ.15, ராகி தோசை ரூ.10, பில்டர் காபி ரூ.5 ஆக மொத்தம் 110 பில் வருகிறது. அதில், கிச்சடியில் இருந்து காபி வரை ஜிஎஸ்டி வரி தனித்தனியாக பிரித்துக் காட்டப்படுகிறது. வாடிக்கையாளர் பில் தொகை 110 மட்டும் கட்டினால் போதுமானது. ஜி.எஸ்.டி வரியை கேன்டீன் நிர்வாகமே செலுத்துகிறது.

பல கடைகளில் என்ன பொருளுக்கு ஜி.எஸ்.டி வரி எவ்வளவு என்பதையும் பார்க்காமல் வாங்கி விடுகிறோம். மொத்த பில்லுக்குமாகச் சேர்த்து 18, 28 சதவிகிதம் என ஜி.எஸ்.டி வரியைச் செலுத்துகிறோம். தனித்தனியாக ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி வரி என்ன என்பதை நிறுவனங்கள் காட்ட முன்வருவதில்லை. இதுகுறித்த, விழிப்பு உணர்வு வாடிக்கையாளர்களுக்குத் தேவை!
கோவில் திருவிழாக்களில் குறையும் பக்தர்கள் கூட்டம்

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
01:36

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், வரதராஜப்பெருமாள் கோவில் திருவிழாவை தவிர, மற்ற கோவில்களின் விழாக்கள் மற்றும் உற்சவங்களில், பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது.

எனினும், காலம் காலமாக இடை விடாமல் நடைபெறும் விழாக்களில், இந்து மத பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, கோவில் ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

பல்லவர்கள்

காஞ்சிபுரத்தில், சைவம், வைணவம், பவுத்தம், சமணம் என, பல மதங்களை சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். அதனால், பாரம்பரிய நகரமாக பெயர் ஏற்பட்டது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் இன்னும் சிறப்பு பெற்று விளங்கி வருகின்றன.கோவில்களை நிர்மாணித்தவர்கள், கோவில்களின் செலவு மற்றும் விழாக்களுக்கான வருமானத்திற்கு, ஏராளமான நிலங்களை ஒதுக்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை பயன்படுத்தினர்.

பக்தர்களும், தங்கள் அன்றாட கடமை போல, கோவில் விழாக்களில் ஆர்வமாக பங்கேற்றனர்.இந்த நடைமுறை, மன்னர்கள் காலம் முடிந்த பின்னும் தொடர்ந்து நடந்தது. சமீப காலமாக, கோவில் நிலங்களை குத்தகையாக பெற்றவர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள், கோவில் நிர்வாகத்திடம் பணம் கொடுப்பதில்லை.

இதனால், கோவில்களில் வருமானம் குறைந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும், கோவில் விழாக்களை காணவும், அதில் பங்கேற்கவும், பக்தர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது.தேரோட்டம், பல்லக்கு ஊர்வலம், தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகளில் கூட, பக்தர்கள் பங்கேற்காமல், கோவில் நிர்வாகத்தினரும், அர்ச்சகர்களும் மட்டுமே பங்கேற்கும் நிலை காணப்படுகிறது.

தனித்தனி சமுதாயத்தினர் சார்பில் நடத்தப்படும் கோவில் விழாக்களில், சிறிதளவு கூட்டம் இருக்கிறது. ஆனால், பொதுவான விழாக்களில், அநேகமாக, பக்தர்கள் கூட்டம் இருப்பது இல்லை. கோவில் வழிபாடு, இறை நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், விழாக்களில் பங்கேற்போர் எண்ணிக்கை குறைந்து வருவது, கோவிலை நிர்வகிப்போருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை பொறுத்த மட்டில், ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழாவிற்கும், வரதராஜப்பெருமாள் கோவில் தேர் திருவிழாவிற்கும் மக்கள் கூட்டம் இருப்பது போல, மற்ற கோவில்களில் கூட்டத்தை காண முடிவதில்லை.பெரிய அளவில்இன்னும் சொல்லப்போனால், பிரசித்தி பெற்று விளங்கும் பழமையான கோவில் தேர் திருவிழாவிற்கு, பெரிய அளவில் தேர் இல்லை என்பதால், வண்டியில் தேர் போல் அலங்கரித்து இழுத்து செல்கின்றனர்; அதில் கூட மக்கள் செல்வதில்லை.எதிர்காலத்தில் இவ்வாறு திருவிழாக்களில் மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே போனால், அந்த கோவில்களில் விழா நடத்துவதற்கு ஆர்வம் இல்லாமல் போகும் நிலை உருவாகும்.

இதை தவிர்க்கும் வகையில், அறநிலையத்துறை மற்றும் வழக்கமாக திருவிழா நடத்தும் சமூக அமைப்புகளை அழைத்து பேசி, மக்கள் கூட்டத்தை அதிகரிக்க அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

முக்கிய விழாக்களில் பக்தர்கள் கூட்டம்

பிரம்மோற்சவ காலத்தில் குமரகோட்டம் முருகன் கோவிலில் இல்லாத கூட்டம் சஷ்டிக்கு இருக்கிறது. அதே போல, கச்சபேஸ்வரர் கோவிலில், கடைசி ஞாயிறு விழாவிற்கு கூட்டம் அதிகமாக இருக்கும். சித்திர குப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று ஆயிரக்கணக்கான கூட்டத்தை காண முடியும். வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி அன்று கூட்டம் இருக்கும்.மகா சிவராத்திரி அன்று கைலாசநாதர் கோவிலில், விடிய விடிய பக்தர்கள் கூட்டத்தை காண முடியும்.

விநாயகர் கோவிலில் வழக்கத்தை விட விநாயகர் சதுர்த்தி, ஆடி மாதங்களில் காமாட்சி அம்மன் கோவிலில் ஏராளாமான பக்தர்கள் வருவர்.

திருவிழாவிற்காக ஆகும் செலவு

ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பிரம்மோற்சவத்திற்காக ஒவ்வொரு கோவில்களிலும் செலவு வேறுபடுகிறது. ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. வரதராஜப்பெருமாள் கோவிலின் முக்கிய உற்சவத்திற்கு, 70 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.

ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விசேஷம் இருக்கும். அதற்கான கூட்டமும் அந்த விழாவில் காண முடியும். எல்லா காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் வரும் கோவில்களில் உண்டியல் வருமானம் அதிகம் இருக்கும். பிரமாண்டமாக கோவில்கள் இருக்கும் அளவிற்கு, பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. கோவில் விழாக்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கே. ஜெகதீசன், காஞ்சிபுரம்

பிரம்மோற்சவம் துவங்கும் முன் உபயதாரர்களுக்கு பத்திரிகை கொடுப்போம். அதற்கு முன் திருவிழா குறித்து ஒரு கூட்டம் நடத்துவோம். அதில் வழக்கமாக உபயதாரர்கள் கருத்தும் தெரிவிப்பர். கோவில் திருவிழா குறித்து விளம்பரம் சிலர் செய்வர். தற்போது இது தான் நடைமுறையில் இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் கூட்டத்தை வரவழைக்க வேண்டுமானால் இன்னும் விளம்பரப்படுத்த வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகும். மக்கள் விரும்பும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம். அவ்வாறு ஏற்பாடு செய்தால் இன்னும் கூட்டத்தை அதிகப்படுத்தலாம்.

கோவில் செயல் அலுவலர், காஞ்சிபுரம்கோவில் விழாக்களில் பக்தர்கள் அதிகளவு பங்கேற்க தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்; விளம்பரப்படுத்த வேண்டும்.

பி.நந்தகுமார், காஞ்சிபுரம்
மூக்கில் மோதிரம் அகற்றிய டாக்டர்கள்

  பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
00:06

திண்டுக்கல், திண்டுக்கல் காமாட்சிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்த்திக்,3. விளையாடும் போது பிளாஸ்டிக் மோதிரத்தை எடுத்து மூக்கில் திணித்து விட்டான்.

இதனால் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியபடி இருந்தது.
இது குறித்து அறியாத பெற்றோர், சிறுவனை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூக்கில் ஸ்கேன் செய்த டாக்டர்கள், மூக்கில் மோதிரம் சிக்கி இருந்ததை கண்டனர். பின், எண்டாஸ்கோபி மூலம் மூக்கில் இருந்த பிளாஸ்டிக் மோதிரத்தை எடுத்தனர். இந்த சிகிச்சை 30 நிமிடம் நடந்தது.
காரைக்குடி தியேட்டர்களில் ஒரே வகுப்பு, ஒரே கட்டணம்

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
22:28

காரைக்குடி, நாடு முழுவதும் ஜூலை 1ல் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி, தமிழகத்தில் 100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீதம், அதற்கு மேலான டிக்கெட்டுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர உள்ளாட்சிகள் மூலம் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தியேட்டர்கள் நான்கு நாட்கள் மூடப்பட்டது.

தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
காரைக்குடியில் நான்கு தியேட்டர்கள் உள்ளன. பாண்டியன் தியேட்டரில் முதல் வகுப்பு ரூ.40, இரண்டாம் வகுப்பு ரூ.30, மூன்றாம் வகுப்பு ரூ.5, சத்தியன் தியேட்டரில் ரூ.30, 25, 4, நடராஜா தியேட்டரில் ரூ.40, ரூ.35, ரூ.5, சிவம் தியேட்டரில் ரூ.40, 30, 25, 10 என மூன்று நான்கு வகுப்புகளாக டிக்கெட் கட்டணம் பொதுமக்கள் பார்வைக்காக எழுதி வைத்திருந்தாலும், ஒரே வகுப்பு, ஒரே கட்டணம் என்ற அடிப்படையில் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
சிவம் தியேட்டரில் மட்டும் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு பின் பாண்டியன், சத்தியன், நடராஜா தியேட்டரில் டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆக உயர்த்தப்பட்டது.
நுழைவு கட்டணம் ரூ.99.84, சி.ஜி.எஸ்.டி., ரூ.17.98, உள்ளாட்சி கேளிக்கை வரி ரூ.1,
எஸ்.ஜி.எஸ்.டி., 0.18, மொத்தம் 119. நேற்று கூட்டம் இல்லாததால் நடராஜா தியேட்டரில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
சிவம் தியேட்டரில் ரூ.30 கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு கணினி வழி டிக்கெட் இல்லாததால், வரிக்காக பிரித்து போடவில்லை.
மானாமதுரை: ஜி.எஸ்.டி.,க்கு பின் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் கேளிக்கை வரிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாததால், பழைய கட்டணங்களையே தியேட்டர்களில் வசூலித்து வருகின்றனர்.
சீனியப்பா தியேட்டரில் முதல் வகுப்பு : ரூ.90 இரண்டாம் வகுப்பு: ரூ.70 பெண்கள் : 30

ஸ்ரீபிரியா தியேட்டரில் முதல் வகுப்பு: ரூ.70, பெண்கள் : 20
காளையார்கோவிலில் உள்ள தியேட்டரில் கட்டண மாற்றம் இல்லை.
சிவகங்கை: ரவிபாலா தியேட்டரில் பழைய கட்டணம்: முதல் வகுப்பு 30 ரூபாய், இரண்டாம் வகுப்பு 20 ரூபாய், மூன்றாம் வகுப்பு 4 ரூபாய். ஜி.எஸ்.டி.,க்கு பின் புதிய கட்டணம் மாற்றமில்லை. ஜே.பி., தியேட்டரில் பழை கட்டணம்: 2 ரூபாய். ஜி.எஸ்.டி.,க்கு பின் கட்டணம் மாற்றமில்லை.
50 வயது கடந்த ஊழியர்களுக்கு உ.பி.,யில் கட்டாய ஓய்வு

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
00:20




லக்னோ: அரசு அலுவலகங்களில் வேலை செய்யாமல் துாங்கி வழியும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

பணிகள் பாதிப்பு : இம்மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், ஊழியர்களின் அலட்சியம் மற்றும் சோம்பேறித்தனத்தால், பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. பல ஊழியர்கள், பணி நேரத்தில் வேலை செய்யாமல் துாங்கி வழிவதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இதையடுத்து, மாநில தலைமை செயலர் ராஜிவ் குமார், அனைத்து துறை செயலர்கள், கூடுதல் செயலர்களுக்கு அனுப்பிய உத்தரவு:அரசு அலுவலகங்களில் பணிபுரியும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களின் பணித்திறன் கண்காணிக்கப்படும். உரிய நேரத்தில் பணிகளை முடிக்காதவர்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.

3 மாத நோட்டீஸ் : இதற்கு, 2017 மார்ச், 31 அன்று, 50 வயது நிறைவடைந்த ஊழியர்களின் பட்டியலை தயாரித்து, பணியாளர் நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். தங்கள் துறையில் உள்ள, 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள், கட்டாய ஓய்வில் செல்ல, மூன்று மாத, 'நோட்டீஸ்' வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ரயில்வே தேர்வு
319 கோடி பேப்பர்கள் மிச்சம்

புதுடில்லி:பல்வேறு பதவிகளுக்கான தேர்வை, ஆன்லைனில் ரயில்வே நடத்தியதன் மூலம், 319 கோடி பேப்பர்கள் மிச்சமானதாக, தெரிவிக் கப்பட்டுள்ளது.




இது பற்றி இந்திய ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரயில்வே பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வ தற்கு, எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், 'ஏ 4' அளவுடைய பல கோடி பேப்பர் கள் செலவாகி வந்தன. ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபு பொறுப்பேற்றபின், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ரயில்வே பணிகளுக்கான தேர்வை, ஆன்லைனிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. உதவி ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உட்பட 14 ஆயிரம்பணியிடங்களுக்கான, முதல் கட்ட தேர்வு, நாடு முழுவதும், 351 மையங்களில், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது; 92 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 2.73 லட்சம் பேர், தேர்வு செய்யப்பட்டு, அடுத்த கட்ட எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த தேர்வு, கடந்த, ஜன., 17 - 19 தேதிகளில் நடந்தது.

இதுவும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. இதில் இருந்து, 45 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, நேர் முக தேர்வுக்குஅழைக்கப்பட்டனர்.பேப்பர் செலவு இல்லாமல் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம், 319 கோடி பேப்பர்கள் மிச்சமாயின; நான்கு லட்ச மரங்கள் காப்பாற்றப்பட்டன.

ஆன் லைனில் நடத்தப்பட்டதால், முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. கேள்வி தாள் வெளியானது உட்பட, எந்தமுறைகேடுக் கும், இதில் இடமில்லை. நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களில், 14 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் சான்றிதழ் கள், செப்டம்பரில் ஆய்வு செய்யப்பட்டு, தீபாவளிக்கு முன் அவர் கள் பணியில் சேருவர். உலகிலேயே, ஆன் லைனில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தேர்வு, என்ற சாதனையையும், ரயில்வே படைத்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 20.08.2026