Saturday, March 28, 2015

பிரபலமடையாத செல்போன் டிக்கெட் முன்பதிவு வசதி: விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம் என பயணிகள் குற்றச்சாட்டு

செல்போன் மூலம் சென்னை புறநகர் ரயில்களின் டிக்கெட்டைப் பெறும் வசதி, பயணிகளிடம் பெரிய அளவில் சென்று சேராமல் உள்ளது. இத்திட்டம் பற்றி போதுமான விளம்பரம் செய்யப்படா ததே இதற்கு காரணம் என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் செல்போன் மூலம் புறநகர் மின்ரயில் டிக்கெட் முன்பதிவு (எம்-டிக்கெட்டிங்) செய்யும் வசதி கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

செல் போன்களைப் பயன்படுத்துபவர் கள் ‘பிளேஸ்டோரில்‘ ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுள்ளே சென்று, செல்போன் எண் மூலம் இவ்வசதிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) இருந்தால் அதன் மூலம் செல்போன் ‘ரீசார்ஜ்’ (குறைந்தபட்சம் ரூ.50) செய்வது போல் தேவைப்படும்போது அதற் கான இருப்புத்தொகையின் மதிப்பை கூட்டிக்கொள்ளலாம்.

‘யூடிஎஸ்’ செயலி மூலம் செல்போனில் டிக்கெட் முன்பதிவு செய்ததும், உங்களது போனுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பாஸ்வேர்டு (ஒன்டைம் பாஸ்வேர்டு) அனுப்பப்படும். ரயில் நிலையத்துக் குச் சென்றதும், அங்குள்ள ‘ஏடிவிஎம்’ இயந்திரத்தில் ‘மொபைல் டிக்கெட்டிங்’ என்னும் மெனுவில் ‘ஒன்டைம் பாஸ் வேர்டை’ குறியீடு செய்ததும், டிக்கெட்டின் ‘பிரின்ட்அவுட்’ வந்து விடும்.

தானியங்கி இயந்திரம் பழுதாகியிருந்தாலோ, அல்லது டிக் கெட்டைப் பெறத் தெரியவில்லை என்றாலோ, அருகில் உள்ள டிக் கெட் கவுன்ட்டரில் ‘ஒன்டைம் பாஸ் வேர்டை’ தெரிவித்தால் அவர்கள் டிக்கெட் தந்துவிடுவார்கள்.

சென்னையில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த இரண்டரை மாதங்களில் 700-க்கும் குறைவானவர்களே இதைப் பயன்படுத்தியுள்ளனர். இப்படியொரு வசதி இருப்பதைப் பற்றி பயணிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப் படுகிறது.

மேலும், ‘ஏவிடிஎம்’ வசதி, அரக்கோணம் மார்க்கத்தில் அம்பத் தூர், பெரம்பூர் ரயில் நிலையங் களிலும், கும்மிடிப்பூண்டி மார்க்கத் தில் திருவொற்றியூர் ரயில் நிலையத்திலும் மட்டுமே உள்ளன. அதனால் இவ்வசதியைப் பற்றி அறிந்திருந்தாலும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள் ளது. அதேநேரத்தில், கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 14 ரயில் நிலையங்களில் ‘ஏவிடிஎம்’ வசதி உள்ளது. அதனால் அந்த மார்க்கத்தில் சிலருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்துள்ளது.

விழிப்புணர்வு இல்லை

இது குறித்து ஆர்.யோகானந்த் என்ற ரயில் பயணி கூறும்போது, “இப்படியொரு திட்டம் இருப்பது பெரும்பாலானோருக்குத் தெரிய வில்லை. மேலும் செல்போனில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், ரயில் நிலையத்துக்குப் போய் ‘ஏடிவிஎம்’ இயந்திரத்தில் டிக்கெட் எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக, ஒரேயடியாக வரிசை யில் நின்றே டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது” என்றார்.

குரோம்பேட்டை ரயில் பயணி கள் சங்கத்தின் தலைவர் வி.சந்தா னம் கூறும்போது, “ரயில்வே ஊழியர்களுக்குக்கூட இவ்வசதி பற்றி தெரியவில்லை. எனவே இதுபற்றி, ரயில்வே துறை, பொதுமக்களின் மனதில் பதியும் வகையில் விளம்பரங்களை வெளியிடவேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் பதிவு செய்யவும் ஏற்பாடுசெய்யவேண்டும்” என்றார்.

பெருங்களத்தூரை சேர்ந்த பிரசன்னா என்ற அரசு ஊழியர் கூறும்போது, “அனைவரும் பயன் படுத்தும் வகையில் இதனை எளிமைப்படுத்த வேண்டும். ‘ஏடிவிஎம்’ இயந்திரங்களை எல்லா நிலையங்களிலும் நிறுவவேண்டும்” என்றார்.

எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட்

இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தெற்கு ரயில்வே உயரதி காரிகள் கூறும்போது, “சென்னை யில் அதிக எண்ணிக்கையிலான ரயில் நிலையங்களில் ஏடிவிஎம் இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுதவிர, எஸ்.எம்.எஸ் மூலம் டிக்கெட்டை வழங்கும் திட்டத்தையும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்” என்றனர்.

100 crores savings...dinamalar 28.3.2015

பாரத ரத்னாவுக்கு பெருமை

நாட்டில் பல விருதுகள் வழங்கப்படுகின்றன. சில விருதுகளால் அதை பெறுபவர்கள் பெருமையடைவார்கள். சில விருதுகள் அதைப்பெறுபவர்களுக்கு பெருமை அளிப்பதோடு, தகுதியான ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதை வழங்கியவர்களுக்கும் பாராட்டும், புகழும் போய் சேரும். அந்தவகையில், முன்னாள் பிரதமரான 90 வயது அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதால், அந்த விருதுக்கே ஒரு உயரிய கவுரவம் கிடைத்துள்ளது. அரசியலில் இவர்போலத்தான் இருக்கவேண்டும் என எடுத்துக்காட்டாக வாழ்பவர் வாஜ்பாய். அதனால்தான் அவருக்கு இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் வரவேற்றன. பொதுவாக அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுபவர் வாஜ்பாய். பா.ஜ.க.வுக்கு நேர் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கே, வாஜ்பாயை அரசியலில் பீஷ்ம பிதாமகன் என்று பாராட்டினார். பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்த காலத்தில்கூட தி.மு.க. தலைவர் கருணாநிதி, வாஜ்பாயை ஒரு தவறான கட்சியில் இருக்கும் நல்ல மனிதர் என்று பாராட்டினார்.

10 முறை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்து இருக்கிறார். முதல் இருமுறைகளில் காலங்கள் குறைவாக இருந்தாலும், 3 முறை தொடர்ந்து பிரதமராய் இருந்தார். பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வெற்றி, தொழில் வளர்ச்சிக்கு தனியாரையும் ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர சாலை, கல்வி வளர்ச்சிக்கான சர்வ சிக்ஷா அபியான் என்று அவரது சாதனையை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கவேண்டும் என்பதில் ஆசையோடு இருந்தார். அரசியல் நாகரீகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய வாஜ்பாய், தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் அதிக அன்பு கொண்டவர். அவர் பிரதமராக இருந்தபோது, டெல்லியில் சென்னையில் இருந்து சென்ற ‘தினத்தந்தி’யின் தலைமை நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழ்நாட்டின் வளமான கலாசார பாரம்பரியம், பெருமைமிகு சரித்திரத்தின்மீது நான் எப்போதும் பாசம் கொண்டவன். எனக்கு தமிழ்மொழி தெரியாவிட்டாலும், தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் கவிதைகள் மீதும் மிகுந்த மதிப்பு உண்டு. திருவள்ளுவர், தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர், இந்திய எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் நட்சத்திர கூட்டங்களில் ஒளிமிகுந்த நட்சத்திரங்களாக உள்ளனர். தமிழ்நாட்டைப்பற்றி நான் எப்போது நினைத்தாலும், எனது நண்பரான திராவிட அரசியல் இயக்க ஜாம்பவான் மறைந்த அண்ணா பற்றி நினைப்பேன். டெல்லி மேல்சபையில் ஒன்றாக இருந்தோம். தமிழக மக்களுக்காக அவர் உணர்வுபூர்வமான வீரராக திகழ்ந்தார். ஆனால், அவர் சிறந்த தேசியவாதியாகவும் விளங்கினார். தமிழ்நாட்டை எப்போதும் விரும்புகிறேன். தமிழக சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய தலைவராக பிரகாசித்த மறைந்த எம்.ஜி.ஆர் மீதும் எனக்கு மரியாதை உண்டு என உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க பேசினார்.

2004–ம் ஆண்டு மே மாதம் 1–ந்தேதி அவர் ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் மீது அவருக்கு இருந்த பாசம் பளிச்சிட்டது. முதுமையில் இருக்கும் அவருடைய வீட்டுக்கே சென்று நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ‘பாரத ரத்னா’ விருதை வழங்கியதற்காக ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக, அவர் நேசித்த தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் அரசியலில் அவருடைய வழியில் அனைவரும் பயணம் செய்தால் நட்பு அரசியல் மிளிரும், பகைமை உணர்ச்சி, பழிவாங்கும் உணர்ச்சிக்கு இடம் இருக்காது.

Friday, March 27, 2015

"சப்"புன்னு அறையலாம் போல இருக்கு இவங்க பேசறதைப் பார்த்தா..

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோல்வியைத் தழுவினாலும் தழுவினார்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் அவர்களைப் போட்டு கிழியோ கிழியென்று கிழித்து, அடித்து, துவைத்து தொங்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இதில் அதிகமாக அடிபடுவது அனுஷ்கா சர்மாதான். வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கதைதான் அனுஷ்காவுக்கு. அனுஷ்காவுக்கு கொடுமைக்கார மாமியார்களாக மாறிப் போயுள்ளனர் ஒட்டுமொத்த ரசிகர்களும். அவரையும், கோஹ்லியையும் சேர்த்து படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில் இதுதான் சாக்கென்று பிரபலங்களின் பேட்டிகள் வேறு கிரிக்கெட் வீரர்கள் பற்றியும், உலகக் கோப்பை தோல்வியினைப் பற்றியும். ஆனால், உண்மையில் நாமெல்லாம் தெளிவாகத்தான் இருக்கின்றோமா?

முன்பெல்லாம் சமூக வலைதளங்களின் தாக்கங்கள் அவ்வளவாக இல்லை. நம்மிடையேவும் ஒரு ஆரோக்கியமான மனப்பான்மை இருந்து வந்தது. கோபம் அல்லது மகிழ்ச்சி என்ற அளவோடு போய் விடும். ஆனால் இன்று அப்படி இல்லை. விதம் விதமாக கொண்டாடுகிறார்கள்.. விதம் விதமாக திட்டுகிறார்கள். இன்றைய நிலையில், அந்தரங்கம் என்ற ஒன்றே யாருக்கும் இல்லாத அளவுக்கு, ஒரு சமூக வலைதளங்கள் பிடித்தாட்டுகின்ற உலகில் நாம் வாழ்ந்து வருகின்றோம். யார் முந்திக்கொண்டு மற்றவர்களை கலாய்க்கின்றோம், கிண்டல் அடித்து ஸ்டேட்டஸ் போடுகின்றோம் என்ற மனநிலையில் உறுதியாக இருக்கின்ற நாம் அப்படி கலாய்க்கப்படுபவர்களுக்கும் ஒரு மனம் உண்டு என்பதனை மறந்தே போகின்றோம்.

வெற்றியையும், தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்கின்ற ஒரு எளிதான மனப்பான்மையினை தொலைத்து வெகுநாட்கள் ஆகின்றது நாம். இத்தனை நாட்களும் மற்ற போட்டிகளில் எல்லாம், மற்ற கிரிக்கெட் அணிகளை இந்திய அணி தோற்கடித்த போது மாற்றி, மாற்றி அவர்களை கேலிக் கூத்தாக்கிய நாம், இன்று நம்முடைய அணி போராடித் தோற்ற போதிலும் ஏதோ நாமே களத்தில் இறங்கி நெற்றி வேர்வை நிலத்தில் பட பேட்டிங்கும், பவுலிங்கும் செய்தது போல் அவர்களை காய்ச்சி எடுக்கின்றோம். இதில், பாவம் மேட்ச்சினை பார்க்கப்போன அந்தப் பெண் அனுஷ்கா சர்மாவையும் சேர்த்து அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்... ஏதேனும் ஒரு வேலையில் நீங்கள் முழுமனதாக ஈடுபட்டாலும் சரி,


ஏனோதானோவென்று செய்தாலும் சரி அதில் தோல்வியைத் தழுவ நேர்ந்தால் உங்களுடைய மனதின் ரணம் எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதினை. அவர்கள் பலகோடி சம்பளம் வாங்குகின்றார்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதனையும் தாண்டி கிரிக்கெட் களத்தில் இறங்கி, தூக்கத்தினையும் தொலைத்துவிட்டு அந்த இரவில் நம்முடைய கனவான உலகக் கோப்பைக்காக போராடிய சராசரி மனிதர்கள்தான் அவர்களும். உங்களுடைய வெற்றியைக் காண உங்கள் மனம் நேசிக்கும் காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதைப் போலத்தான் அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலியா சென்றதும்.


காலையில் ஒரு ஒருமணி நேரத்திற்கு வாக்கிங் போகவே 10 தடவை அலாரத்தினை அணைப்போம் நாம். ஆனால், கிட்டதட்ட 40, 50 நாட்களுக்கு மேலாக ஓயாத உடற்பயிற்சியும், பயிற்சியும், புது இடத்தின் உணவும், அலைச்சலும், குறிக்கோளுக்காக மனதினை மெருகேற்றி, மெருகேற்றி ஏற்பட்ட மன உளைச்சலுமே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்பதனை நாம் ஒத்துக் கொள்ள மறுக்கின்றோம். ஏனெனில், நம்மால் வெற்றியினை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அந்த வெற்றியைப் பெற்றுத்தந்தால் மட்டுமே அவர்கள் நம்மவர்கள். இல்லையெனில், அவர்கள் நம்முடைய எதிரிகள். சக மனிதரை மதிக்காமல், அவர்களுக்கு இந்த சமயத்தில் மன ஆறுதல் அளிக்காமல் கேவலமான கமெண்ட்டுகளையும், ஏதோ வானத்திலிருந்தே குதித்து வந்தவர்கள் போல், தோல்வியைக் கண்டே அறியாதவர்கள் போல் சமூக வலைதளங்களில் அவர்களை நாம் கேலிக் கூத்தாக்குவதும் நம்முடைய மனதின் அடி ஆழத்தில் உறைந்து போயிருக்கும் அழுக்கின் மறுப்பக்கத்தினைத்தான் உலகிற்கு எடுத்துரைக்கின்றது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் அபிமான பொன்னியின் செல்வனை இனி கம்ப்யூட்டர் திரையில் காணலாம்!

சென்னை: சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று புதினமாக, 1950களில் வெளியானது 'பொன்னியின் செல்வன்' நாவல். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த புத்தகம், தமிழகத்தின் அனைத்து புத்தக கண்காட்சிகளிலும் அதிகப்படியாக விற்பனையாகும் வரலாற்று நாவலாக சாதனை படைத்து வருகிறது. வீரம், காதல், நகைச்சுவை, அன்பு, அறிவு, அரசியல், திடுக்கிடும் திருப்பங்கள் என வாசகர்களை கட்டிப்போடும் அத்தனை அம்சங்களும், உண்மையான வரலாற்று செய்திகளுடன், இணைந்துள்ளதால், புத்தகத்தின் மீதான ஈர்ப்பு தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நாவலின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்ட கமலஹாசன் இதை திரைப்படமாக எடுக்க முயன்றதாகவும், ஆனால், பொருட்செலவு கருதி அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர், இயக்குநர் மணிரத்னம் என பலர் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க முயற்சித்துள்ளனர். ஆனால் யாருடைய முயற்சியும் முழுமையடையவில்லை. தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநராக பணியாற்றும் ஈராஸ் நிறுவனம், பொன்னியின் செல்வனை கையிலெடுத்துள்ளது. ஆனால் திரைப்படமாக அல்லாமல் பகுதிகளாகப் பிரித்து இணயத்தில் பதிவேற்றப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமலோ, விசிடிக்களாகவோ இல்லாமல் ஒவ்வொரு பகுதியும் இணையத்தில் பதிவேற்றப்படும். பார்க்க விரும்புபவர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் பணம் செலுத்தி கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக் கொள்ளலாம் என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. அதிகபட்சம் 5 பகுதிகளாக பதிவேற்றம் செய்யப்படலாம் என்று ஈராஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. முன்பு ஒருமுறை, மணிரத்னம், பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் தர முயற்சித்தபோது எழுத்தாளர் ஜெயமோகனை திரைக்கதை எழுதினார். அந்த கதையில் நடிக்க விஜய் ஆசைப்பட்டார். தற்போது ஈராஸ் நிறுவனமும் ஜெயமோகனையே அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஈராஸ் கூறியுள்ளது.

இந்தியா தோல்வி : உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர்!

லகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தையடுத்து லக்னோவில் அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
உலகக் கேப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்பது கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக இருந்தது. ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.
இதனால் ஏராளமான ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள். இந் நிலையில் உத்தரபிரேதேச மாநிலம் லக்னோவில் 50 வயது அரசு ஊழியர் ஒருவர் கிரிக்கெட் தோல்வி காரணமாக கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உமேஷ் என்ற அந்த 50 வயது அரசு ஊழியர் நேற்று தனது சக ஊழியர்களுடன் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணி தோல்வியை நோக்கி செல்லத் தொடங்கியதும் மிகுந்த ஆதங்கத்துடன் இருந்துள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
ஆனால் அறையை விட்டு வெளியே சென்ற அவர் கட்டடத்தில் மீது இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உமேஷ் உயிரிழந்தார். கிரிக்கெட் தோல்விக்காக உமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று லக்னோ போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை தோல்விக்கு தோனி ஏன் காரணமாகிறார்... அலசுகிறது இந்த கட்டுரை

விளையாட்டின் இறுதியில் ஒருவர்தான் வெற்றிபெறமுடியும். பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருக்கிறது’’ என்று அரை இறுதி தோல்விக்குப் பிறகு சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி. ‘‘மூணு மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத அணியை உலகக்கோப்பையில் அரை இறுதிவரை அழைத்துவந்திருக்கிறார் தோனி. உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிறந்த தனது குழந்தையைக் கூட பார்க்கப்போகாமல், நாடுதான் முக்கியம் என்று சொன்னவர் தோனி’’ என்று ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்-களில் தோனிக்கு ஆதரவாக மெசேஜ்கள் பரவுகின்றன.
இந்த உலகக்கோப்பையின் அரை இறுதிவரை இந்தியாவை அழைத்துவந்த பெருமை முழுக்க முழுக்க தோனிக்குத்தான் சேரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் கடந்த நான்கு வருடங்களாக ஒரு ஒழுங்கற்ற, நிலையில்லாத, சரியான பௌலர்கள் இல்லாத மோசமான அணியை வழிநடத்தி வந்ததன் பரிசுதான் சிட்னி படுதோல்வி என்பது தோனிக்குத் தெரியும். இப்போதையே இந்திய அணியில் இருக்கும் எந்த வீரருக்குமே நிலையான ஆட்டம் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் போனதுதான் சோகம்.

தோனியின் ரோல் என்ன?

சச்சின், ஷேவாக், கம்பீர், யுவராஜ், ஜாகீர் கான் என அணியின் சீனியர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தவுடன் அவர்களுக்கு மாற்றாக திறமையான வீரர்களை இந்திய அணிக்குள் அழைத்துவர வேண்டிய கடமை தேர்வாளர்களுக்கு உள்ளது. அதே கடமையும், பொறுப்பும் அணியை வழிநடத்திச் செல்லும் பங்கு கேப்டனுக்கும் உண்டு. ரஞ்சி கோப்பை மட்டும் அல்ல உள்ளூர் திறமைகளை சரியாகக் கண்டெடுத்து இந்திய அணிக்குள் அவர்களை கொண்டுவர இப்போது ஐபிஎல் போட்டிகளும் இருக்கிறது. சிறப்பாக விளையாடும் வீரர்களை ‘இவர் எனக்கு வேண்டும்’ என்று கேட்டுப்பெறும் உரிமை கேப்டனுக்கு உண்டு. சௌரவ் கங்குலிதான் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் உள்ளிட்ட இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அவர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து சிறப்பாக விளையாட வழிகாட்டியவர்.

கேப்டன் தோனி ரெய்னா, தவான், ரோஹித், ரஹானே உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்கினார். இவர்கள் திறமையான வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்களிடம் ஒரு ஒழுங்கு இல்லை. இவர்கள் அனைவருமே வெளிநாட்டு மைதானங்களில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை ஆடியவர்கள். உலகக்கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே படுதோல்வி அடைந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டிகளில் ஒன்றில்கூட இந்த அணியால் வெற்றிபெறமுடியவில்லை. அந்த மோசமான தோல்வியை சந்தித்த அதே அணியை வைத்துக்கொண்டுதான் 2015 உலகக்கோப்பைக்குத் தயாரானார் தோனி. தொடர்ந்து சொதப்பிய வீரர்களில் ஒருவரைக்கூட மாற்ற தோனி ஏன் மெனக்கெடவே இல்லை?

‘ஹார்சஸ் ஃபார் கோர்சஸ்’ தியரியை பின்பற்றுகிறேன்’’ என்பார் தோனி. ‘‘போட்டி நடைபெறும் நாள் அன்று பிட்ச்சின் தன்மை, தட்டவெப்ப சூழல் இவற்றைப் பொருத்துதான் அணியைத் தேர்ந்தெடுக்க முடியும். எல்லோரும் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்கிற பாலிசியைப் பின்பற்ற மாட்டேன்’ என்று முன்பு சொல்லிய தோனி ஒரு ஒழுங்கே இல்லாத வீரர்களை வைத்து சமாளித்துவிடலாம் என்று எப்படி முடிவெடுத்தார்?
முதல் போட்டியான பாகிஸ்தானுடனான ஆட்டம்தான் இந்தியா தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற தைரியமும், உற்சாகமும் கொடுத்தது. அந்தப் போட்டியில் கோஹ்லியின் இரண்டு ஈஸியான கேட்சுகளைத் தவறவிட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். கோஹ்லியின் அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் அப்போதே முடிவுகள் மாறியிருக்கும். இந்த உலகக்கோப்பையில் கோஹ்லி, தவான், ரெய்னா, தோனி, ரோஹித் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பாக ஆடினார்களேத் தவிர இவர்கள் யாரும் ஒரே அணியாக ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை.
 
'பின்ச் ஹிட்டர்'சேவாக்குக்கு மாற்று ஆட்டக்காரர் கண்டுபிடிக்கப்படவில்லை

ஹை ஸ்கோரிங் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்றால் தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் ஆட்டம் துவங்கியவுடனே அடித்து ஆடி எதிர் அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையவைக்கும் பின்ச் ஹிட்டர்கள் வேண்டும். வீரேந்திர ஷேவாக் இந்த வேலையைத்தான் செய்தார். தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் பவுண்டரி, சிக்ஸர்களால் எதிர் அணி பௌலர்களை வெளுத்துவாங்குவார். பௌலருக்கு எந்த லைனில் பந்துவீச வேண்டும் என்பதே மறந்துபோகும். பிரண்டன் மெக்கல்லம், ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற வீரர்கள் இப்போது இதைத்தான் செய்கிறார்கள். ஷேவாக் ஃபார்மில் இல்லை அவரைக் கழற்றிவிடவேண்டும் என்று சரியான முடிவை எடுத்த தோனியும், இந்திய அணி தேர்வாளர்களும் அவருக்கான மாற்று வீரரை ஏன் இறுதிவரை அடையாளம் காணவே இல்லை?

‘‘மிகவும் திறமையான வீரர்’’ என்று சொல்லியே ரோஹித் ஷர்மா இந்தியா ஆடும் எல்லாப் போட்டிகளிலும் இடம்பிடித்துவருகிறார். இரண்டு இரட்டை சதங்கள் அடித்த இந்த உலக சாதனை நாயகன் உலகக்கோப்பையின் 8 போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி 330 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் வங்காளதேசத்துக்கு எதிரானப் போட்டியில் அடித்த 137 ரன்களைக் கழித்துவிட்டால் மற்ற ஏழு போட்டிகளில் அவர் அடித்தது மொத்தமே 190 ரன்கள்தான்.


அனுஷ்கா ஷர்மாவுடன் காதல்... பத்திரிகையாளருடன் மோதல்!

தொடர்ந்து சதம் அடிக்கிறோம், நாம்தான் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸ் கோஹ்லிக்கு இப்போது சரியான பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கும் என நம்பலாம். இந்தியாவில், இந்தியப் பத்திரிகையில் வெளியான அனுஷ்கா ஷர்மா பற்றிய ஒரு துணுக்கு செய்திக்கு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டை கவர் செய்யவந்த நிருபர் மீது பாயவைத்தது அந்த ஓவர் கான்ஃபிடன்ஸ்தான். அனுஷ்கா ஷர்மா- விராட் கோஹ்லி காதல் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். 2011 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். 2015 உலகக்கோப்பையில் சச்சினாக இருந்து இந்திய பேட்டிங் டிபார்ட்மென்ட்டுக்கு தோள் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு விராட் கோஹ்லிக்கு இருந்தது. ஆனால் அவரோ அனுஷ்கா ஷர்மாவுடன் காதல், பத்திரிகையாளுடன் மோதல் எனப் பாதை விலகியது தன்னை பெரிதும் நம்பிய இந்திய அணி நிர்வாகத்துக்கும்,  ரசிகர்களுக்கும் அவர் செய்த துரோகம்.

கோடிகளைக் கொட்டும் பிஸ்னஸ்!


இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் ஒரு வியாபாரம். 1996 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகுதான் கிரிக்கெட் இந்தியாவில் மிகப்பெரிய வியாபாரமாக உருவெடுத்தது. இரண்டு மேட்சில் விளையாடியவர்களுக்கு கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப், விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம், ஸ்டார் அந்தஸ்த்து என புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்தனர் கிரிக்கெட் வீரர்கள். 20/20 யுகம் ஆரம்பித்தபிறகு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிகெட் வீரர்களும் பணம் சம்பாதிப்பதில் உச்சத்தைத் தொட்டுவிட்டார்கள். இன்று உலகிலேயே பணக்கார கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் போர்டுதான். ஆனால் கையில் கோடி கோடியாய் பணம் வைத்திருக்கும் ஒரு அமைப்பால் தன் அணிக்கு திறமையான இளம் வீரர்களை கண்டெடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.
அணிக்குள் திறமையான வீரர்களைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டிய அமைப்பும் அதன் நிர்வாகிகளும், உச்சநீமன்றத்தில் எப்படி வாதிட்டு தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுவதில் பிஸியாக இருக்கும்போது பாவம் ரசிகர்கள் நாம் என்ன செய்ய முடியும். 

இங்கிலாந்தில் 2019 உலகக்கோப்பை!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் இருக்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு பிட்ச் கூட இந்தியாவில் கிடையாது. நம்மூர் மைதானங்களில் 140கிமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசவும் முடியாது. அப்படியே பந்து வீசனாலும் இங்கே பந்து பவுன்ஸ் எல்லாம் ஆகாது. 2019 உலகக்கோப்பை, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தில்தான் நடைபெற இருக்கிறது. இங்கு வெற்றிபெற வேண்டும் என்றால் திறமையான பௌலர்களும், தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களும் வேண்டும். அதற்கு ஏற்றவாறு அணியைத் தயார் செய்தால்தான் இந்தியாவால் 2019 உலகக்கோப்பையை வெல்ல முடியும். இல்லை என்றால் 1983 உலகக்கோப்பை வெற்றிக்குப்பின் மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல 28 ஆண்டுகள் ஆனதுபோல், நாம் அடுத்த உலகக்கோப்பையை வெல்ல இன்னும் 24 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
- சார்லஸ்

NEWS TODAY 2.5.2024