Saturday, March 28, 2015

பாரத ரத்னாவுக்கு பெருமை

நாட்டில் பல விருதுகள் வழங்கப்படுகின்றன. சில விருதுகளால் அதை பெறுபவர்கள் பெருமையடைவார்கள். சில விருதுகள் அதைப்பெறுபவர்களுக்கு பெருமை அளிப்பதோடு, தகுதியான ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதை வழங்கியவர்களுக்கும் பாராட்டும், புகழும் போய் சேரும். அந்தவகையில், முன்னாள் பிரதமரான 90 வயது அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதால், அந்த விருதுக்கே ஒரு உயரிய கவுரவம் கிடைத்துள்ளது. அரசியலில் இவர்போலத்தான் இருக்கவேண்டும் என எடுத்துக்காட்டாக வாழ்பவர் வாஜ்பாய். அதனால்தான் அவருக்கு இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் வரவேற்றன. பொதுவாக அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுபவர் வாஜ்பாய். பா.ஜ.க.வுக்கு நேர் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கே, வாஜ்பாயை அரசியலில் பீஷ்ம பிதாமகன் என்று பாராட்டினார். பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்த காலத்தில்கூட தி.மு.க. தலைவர் கருணாநிதி, வாஜ்பாயை ஒரு தவறான கட்சியில் இருக்கும் நல்ல மனிதர் என்று பாராட்டினார்.

10 முறை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்து இருக்கிறார். முதல் இருமுறைகளில் காலங்கள் குறைவாக இருந்தாலும், 3 முறை தொடர்ந்து பிரதமராய் இருந்தார். பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வெற்றி, தொழில் வளர்ச்சிக்கு தனியாரையும் ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர சாலை, கல்வி வளர்ச்சிக்கான சர்வ சிக்ஷா அபியான் என்று அவரது சாதனையை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கவேண்டும் என்பதில் ஆசையோடு இருந்தார். அரசியல் நாகரீகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய வாஜ்பாய், தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் அதிக அன்பு கொண்டவர். அவர் பிரதமராக இருந்தபோது, டெல்லியில் சென்னையில் இருந்து சென்ற ‘தினத்தந்தி’யின் தலைமை நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழ்நாட்டின் வளமான கலாசார பாரம்பரியம், பெருமைமிகு சரித்திரத்தின்மீது நான் எப்போதும் பாசம் கொண்டவன். எனக்கு தமிழ்மொழி தெரியாவிட்டாலும், தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் கவிதைகள் மீதும் மிகுந்த மதிப்பு உண்டு. திருவள்ளுவர், தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர், இந்திய எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் நட்சத்திர கூட்டங்களில் ஒளிமிகுந்த நட்சத்திரங்களாக உள்ளனர். தமிழ்நாட்டைப்பற்றி நான் எப்போது நினைத்தாலும், எனது நண்பரான திராவிட அரசியல் இயக்க ஜாம்பவான் மறைந்த அண்ணா பற்றி நினைப்பேன். டெல்லி மேல்சபையில் ஒன்றாக இருந்தோம். தமிழக மக்களுக்காக அவர் உணர்வுபூர்வமான வீரராக திகழ்ந்தார். ஆனால், அவர் சிறந்த தேசியவாதியாகவும் விளங்கினார். தமிழ்நாட்டை எப்போதும் விரும்புகிறேன். தமிழக சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய தலைவராக பிரகாசித்த மறைந்த எம்.ஜி.ஆர் மீதும் எனக்கு மரியாதை உண்டு என உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க பேசினார்.

2004–ம் ஆண்டு மே மாதம் 1–ந்தேதி அவர் ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் மீது அவருக்கு இருந்த பாசம் பளிச்சிட்டது. முதுமையில் இருக்கும் அவருடைய வீட்டுக்கே சென்று நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ‘பாரத ரத்னா’ விருதை வழங்கியதற்காக ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக, அவர் நேசித்த தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் அரசியலில் அவருடைய வழியில் அனைவரும் பயணம் செய்தால் நட்பு அரசியல் மிளிரும், பகைமை உணர்ச்சி, பழிவாங்கும் உணர்ச்சிக்கு இடம் இருக்காது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024