Tuesday, March 24, 2015

ஆர்.டி.ஐ., கேள்விக்கு பி.எஸ்.என்.எல்., 'காமெடி' பதில்: தகவல் கேட்டவர் அதிர்ச்சி

சென்னை: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், சென்னை, தமிழக வட்டங்களில் உள்ள, தரைவழி போன் இணைப்புகள் எவ்வளவு என்ற கேள்விக்கு, 'ஊழியர் மணியின் குடும்பத்தைப் பற்றி சொல்ல முடியாது' என, 'காமெடி'யாக ஒரு பதிலை அளித்துள்ளது பி.எஸ்.என்.எல்., நிர்வாகம்.

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்க தலைவர் சடகோபன், தகவல் அறியும் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., கீழ், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, 2015 ஜனவரி, 7ம் தேதி அனுப்பிய மனுவில், கேட்கப்பட்ட கேள்விகள்:

* பி.பி.எல்., காம்போ யு.எல்.டி., 999 சி.எஸ்., - 13 திட்டம் பற்றி தெரிவிக்கவும்.

* யு.எல்.டி., என்றால், எல்லையில்லா பதிவிறக்கம் என்று பொருள். ஆனால், உங்கள் திட்டத்தில் பதிவிறக்கம் செய்ய, எல்லை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதா?

* பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு வட்டத்தில், மாவட்ட வாரியாக தரை வழி இணைப்புகள் - பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?

* சென்னை வட்டத்தில், தரைவழி இணைப்புகள் எண்ணிக்கை மற்றும் பிராட்பேண்ட் எண்ணிக்கை எவ்வளவு?

* கடந்த, 2009 முதல், இணைப்பு செயல்பாடு தொடர்பாக, ஆண்டு வாரியாக பெறப்பட்ட புகார்கள் எத்தனை? அதைப்போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவை உட்பட, 10 கேள்விகளை, சடகோபன் கேட்டிருந்தார்.

இதற்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'உங்கள் மனு பெறப்பட்டது. விரைவில் பதில் அனுப்பப்படும்' என, தெரிவித்து, பிப்., 10ம் தேதி, சடகோபனுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தின் பொருள் என்ற பகுதியில், 'அவினாஷ் சிங்' என, குறிப்பிட்டு இருந்தது. பொருள், தவறாக உள்ளதைக் குறிப்பிட்டு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, பிப்., 18ம் தேதி, சடகோபன் கடிதம் எழுதினார். அதற்கு, மார்ச், 4ம் தேதியிட்டு, சடகோபனுக்கு அனுப்பிய பதிலில், அவர் கேட்ட கேள்விகளுக்கு தொடர்பே இல்லாத விஷயங்களை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், பதிலாக அளித்து உள்ளது.

பதில் விவரம்:

பி.எஸ்.என்.எல்., ஊழியர் சி.மணியின் குடும்பம், அவர் அப்பா பெயர், அவருக்கு எத்தனை குழந்தைகள் போன்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அத்தகவல்கள் அனைத்தும், அவர் சொந்த வாழ்க்கை தொடர்புடையது. எனவே, பி.எஸ்.என்.எல்., ஊழியர் மணி பற்றிய, சில கேள்விகளை ஆர்.டி.ஐ., சட்டம் - 2005 பிரிவு 8 (1) உட்பிரிவு (1)ன் படி, ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு, பதிலில் கூறப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் இந்த பதிலை கண்டு, அதிர்ந்து போன சடகோபன், என்ன கேள்வி கேட்டோம்; அதற்கு இப்படி பதில் அளித்துள்ளார்களே என, குழப்பத்தில் உள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: என் கேள்விகளுக்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவன, தகவல் தொடர்பு அலுவலர் அளித்த பதில், ஆர்.டி.ஐ., மூலம், வேறு யாரோ கேட்ட கேள்விகளுக்கு உரியது. என் கேள்விகள் கிடைத்தன. பதில் விரைவில் அளிக்கப்படும் என, அனுப்பிய கடித்தின் பொருளில், வேறு ஒருவர் பெயரை குறிப்பிட்டு இருந்தனர். இந்தத் தவறை சுட்டிக்காட்டி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, நான் நினைவூட்டியும் கூட, எனக்கு அளித்த பதில், வேறு ஒருவரின் கேள்விக்கு உரியது என, அறிந்து கொள்ளவில்லை. ஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அலுவலர், கேள்விகளை படிப்பதில்லை. குறைந்தபட்சம், பதில் கடிதத்தில் கையெழுத்து போடும் போது கூட, கேள்வி கேட்டவர் யார்; அதற்கு உரிய பதில் தான் தயார் செய்யப்பட்டு உள்ளதா; உரியவருக்கு தான், கடிதம் அனுப்பப்படுகிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. நிர்வாகத்தில், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த, ஆர்.டி.ஐ., சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை, அரசு அதிகாரிகள் கவனமாக கையாள்வதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இவ்வாறு, அவர் கூறினார். இச்சம்பவம் குறித்து, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தை அணுகியபோது, 'தவறு நடத்திருந்தால், சரி செய்யப்படும்' என, பதில் அளித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024