Tuesday, March 24, 2015

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? - அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. அதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 25-ம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவை நாளை கூடுகிறது. நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அத்துடன் முதல்நாள் கூட்டம் முடிந்துவிடும்.

அதன்பிறகு, பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும். அதையடுத்து பேரவை மீண்டும் கூடும் நாளில், பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசுவார். அதைத் தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதத்துக்கும் மேல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். நாளை தாக்கல் செய்யப்படுவது, தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகளை எதிர்பார்க்கலாம். அரசு ஊழியர், ஆசிரியர் நியமனம், அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு, விவசாயக்கடன் வட்டி தள்ளுபடி, புதிய கல்லூரிகள் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாவதற்கும் வாய்ப்புள்ளது.

அனைத்து அரசு ஊழி யர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் புதிய ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்துமாறு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, பட்ஜெட்டில் ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமின்றி புதிதாக சேர விரும்பும் இளைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024