லீ க்வான் யூ இன்று (திங்கள்கிழமை) காலமானார். அவருக்கு வயது 91. அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து...
* சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான 'லீ க்வான் யூ', பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார்.
* சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப் போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது.
* உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். 'கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்' என்ற அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டவர்.
* இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காந்திக்கு எவ்வளவு வருத்தத்தைக் கொடுத்ததோ லீக்கு அந்த அளவு வருத்தம் கொடுத்தது மலேசியா - சிங்கப்பூர் பிரிவினை. இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூரை மலேசியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த கோபமே லீயின் வைராக்கியமாக மாறி சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்தது.
* 'அடியாத மாடு படியாது' என்பதில் நம்பிக்கை கொண்டவர் லீ. ''பள்ளியில் படிக்கும்போது நான் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் விளாசுவார்கள். அதுவே என்னை ஒழுக்கமாக மாற்றியது. அதனால்தான், தவறு செய்வோருக்கு பிரம்படி கொடுக்கும் தண்டனை அமல்படுத்தினேன்'' என்பார்.
* விளையாட்டு, பொழுதுபோக்கு பிரியர் லீ. கோல்ப், நடனம், நீச்சல் அவருக்கு பிடித்தமானவை. சிகரெட், பீர் பழக்கம் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தொப்பை போடுவதால் பீரை நிறுத்தினார். புகைப்பதால் மக்கள் ஓட்டுப்போட யோசிக்கிறார்கள் என்று உளவுத்துறை சொன்னபோது அதையும் நிறுத்தினார்.
* லீயை பொறுத்தவரை புனைவு நூல்கள் குப்பை. அவரே பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் டாம் கிளான்சி.
* இன்றைய அரசியல்வாதிகள் லீயிடம் கற்கவேண்டியதில் முக்கியமானது மதச்சார்பின்மை. 'அரசியல், பொருளாதாரம் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமானால் உங்கள் மத அங்கிகளை கழற்றிவிட்டு வாருங்கள்'' என்பார் லீ.
* அவரது ஆட்சியில் கேள்விகள் கேட்ட எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமையாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊழல், வறுமை, உள்நாட்டு குழப்பம் என்று சிக்கலாக இருந்த சூழலில் நாட்டை முன்னேற்ற தனக்கு வேறு வழி இல்லை என்றார் லீ.
* தன்னைப் பற்றிய சர்ச்சைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார். படித்தவர்கள், படித்தவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அவரது கொள்கை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. மனித அறிவு வளர்ச்சிக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதிய லீ அவ்வாறு அறிவித்தார்.
No comments:
Post a Comment