சென்னை, அரசினர் தோட்ட புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி முடிவடைந்து உள்ளது. வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில், இந்திய மருத்துவக் கவுன்சிலான - எம்.சி.ஐ., அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பல்நோக்கு மருத்துவமனை:
கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், புதிய தலைமை செயலகக் கட்டடத்தை, அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது. இதையொட்டி, 'புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்' என, அரசு அறிவித்தது. இதற்காக, 200 கோடி ரூபாயில், ஏழு அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடந்தது. மே மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்திய மருத்துவக் கவுன்சிலிடம், முறையான அனுமதி பெற வேண்டி உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கட்டுமானப் பணி விரைந்து முடிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கட்டுமானப் பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க, அரசு உத்தரவிட்டதால், சிறப்புக் கவனம் செலுத்தினோம். கல்லூரிக்கு தேவையான பிரிவுகள், ஆய்வகங்கள் என, எல்லா பணிகளும் முடிந்துள்ளன. 100 பொறியாளர்கள், 15 நாட்கள் இரவு, பகலாக முயற்சித்து, பணிகளை இறுதி செய்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
எம்.சி.ஐ., அனுமதி:
கட்டுமானப் பணி முடிந்தாலும், மாணவர் சேர்க்கை நடத்த, எம்.சி.ஐ., அனுமதி கிடைக்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை நடத்தும் வகையில், எல்லா பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அனுமதி கோரப்பட்டு உள்ளது. எம்.சி.ஐ., எந்த நேரத்திலும் ஆய்வுக்கு வரலாம். சிக்கல் ஏதுமின்றி, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, கல்லூரி செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.
செங்கல்பட்டு கல்லூரியில் எம்.சி.ஐ., குழுவினர் ஆய்வு:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில், 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்தன. இரு ஆண்டு களுக்கு முன், 100 இடங்களாக உயர்த்திக் கொள்ள, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என, எம்.சி.ஐ., ஆண்டுதோறும் ஆய்வு நடத்தும். அதன்படி, மூன்று பேர் கொண்ட, எம்.சி.ஐ., குழு, நேற்று காலை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்தது. கல்லூரியில் உள்ள வசதிகள், ஆய்வகங்கள், பேராசிரியர், பணியாளர்கள், வகுப்பறைகள், விடுதிகளில் ஆய்வு செய்தது. 'டீன்' ஐசக்மோசஸ், வசதிகள் குறித்து விவரித்தார். மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை, சிகிச்சைக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தியது. குழுவினரின் ஆய்வு இன்றும் தொடர்கிறது. அதன்பின், இந்திய மருத்துவக் கவுன்சிலில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment