திருப்பூர்: குடிபோதையில் நாகப்பாம்பை செல்ஃபி எடுத்தவரை, அது போட்டுத் தள்ளிய சம்பவம் தாராபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரகுமார் (27). இவரது மனைவி செல்வி (23). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.
இனிமையான இல்லற வாழ்க்கையை தொடங்கிய சந்திரகுமார், வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் இரவில் மது குடித்துவிட்டு காற்றுக்காக வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்துள்ளார்.
தனது செல்போனில் விளையாடிக் கொண்டே வாட்ஸ் அப்பில் தனது நண்பர்களுக்கு படங்களை அனுப்பியபடியே அயர்ந்து தூங்கி இருக்கிறார்.
அப்போது, நள்ளிரவில் நாகப்பாம்பு ஒன்று சந்திரகுமார் மீது ஊர்ந்திருக்கிறது. போதையில் இருந்த அவர் உடல் மீது ஊர்வது கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு என்பதை அறியாமல் உருண்டு புரண்டு படுத்திருக்கிறார். அப்படியும் ஏதோ ஒன்று தனது உடல் மீது ஊர்வது போல் இருக்கவே சந்திரகுமார் எழுந்து பார்த்துள்ளார். அப்போது, நாகப்பாம்பு ஒன்று படமெடுத்தபடி இருந்துள்ளது.
போதையில் இருந்த சந்திரகுமார், நாகப்பாம்பை கண்டு அதிர்ச்சி அடையாமல் அதை கையில் பிடித்தபடி தனது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். அந்த படத்தை, ''எனது வீர தீர செயலை பாருங்கள்" என்ற வாசகத்துடன் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்கிறார். அந்த நேரத்தில் நாகப்பாம்பு, 'நானே படம் எடுப்பேன், என்னைப்போய் படம் எடுக்கிறாயா என்று சந்திரகுமாரை தீண்டி இருக்கிறது. உடனே விஷம் உடலில் பரவ, வாயில் நுரை தள்ளிய நிலையில் சந்திரகுமார் மயங்கி விழுந்துள்ளார்.
அந்த நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த செல்வி, தனது கணவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். செல்வியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சந்திரகுமாரை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சந்திரகுமார் பரிதாபமாக இறந்துள்ளார்.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் செல்ஃபி மோகம், தற்போது தாராபுரத்தில் ஒரு புதுமாப்பிள்ளையின் உயிரையே பறித்திருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment