ரயில்வே பிளாட்பார டிக்கெட் கட்டண உயர்வு வரும் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ரூ.5-க்கான பயண டிக்கெட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத பிளாட்பாரத்தில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. அதே நேரம், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய்தான். அது மட்டுமின்றி, பிளாட்பார டிக்கெட் எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், பாசஞ்சர் ரயில் டிக்கெட் அந்த நாள் முழுக்க செல்லுபடியாகும். புறநகர் ரயில் டிக்கெட்கூட 1 மணி நேரம் வரை செல்லுபடியாகும். எனவே, 5 ரூபாய்க்கான பயணச் சீட்டை எடுத்து வைத்துக்கொண்டு, பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சமாளித்துவிடலாம் என்ற மனநிலையில் சில பயணிகள் உள்ளனர்.
இதற்கு வாய்ப்பு இல்லை. ரயில்வே நிலையங்களில் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்கின்றனர் ரயில்வே உயர திகாரிகள். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு தினமும் 7 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். பயணிகள், அவர்களை வழி யனுப்ப வருபவர்களைவிட மற்றவர்களின் கூட்டம் அதிகம் உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் ரகசிய ஆய்வு நடத்தியது. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக தங்கியிருப்பவர்கள் பலர் தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வந்து காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டுப் போகின்றனர். கட்டிட வேலைக்கு செல்பவர்கள் பலர், ரயில் நிலையத்திலேயே படுத்து தூங்கி, காலையில் எழுந்து குளித்துவிட்டுச் செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து சொந்த வேலைக்காக வருபவர்கள் பலரும் ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைகின்றனர்.
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், பல பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் பயன்பாட்டில் இல்லை.
இவர்கள் நடமாட்டத்தைக் குறைக்கவே பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. பிளாட்பார டிக்கெட் இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் முறை ஏப்.1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த ரயில்கள் வரும் இடத்துக்கு மட்டும் செல்லவேண்டும். புற நகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அந்த பகுதிக்கு மட்டும் போய் வர வேண்டும். பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் ரூ.10-க் கான பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். ரூ.5 கட்டணம் கொண்ட பயணச் சீட்டை எடுத்துவிட்டு சம்பந்தமில்லாத பிளாட்பாரத்தில் நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment