Friday, March 27, 2015

உலகக் கோப்பை தோல்விக்கு தோனி ஏன் காரணமாகிறார்... அலசுகிறது இந்த கட்டுரை

விளையாட்டின் இறுதியில் ஒருவர்தான் வெற்றிபெறமுடியும். பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருக்கிறது’’ என்று அரை இறுதி தோல்விக்குப் பிறகு சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி. ‘‘மூணு மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத அணியை உலகக்கோப்பையில் அரை இறுதிவரை அழைத்துவந்திருக்கிறார் தோனி. உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிறந்த தனது குழந்தையைக் கூட பார்க்கப்போகாமல், நாடுதான் முக்கியம் என்று சொன்னவர் தோனி’’ என்று ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்-களில் தோனிக்கு ஆதரவாக மெசேஜ்கள் பரவுகின்றன.
இந்த உலகக்கோப்பையின் அரை இறுதிவரை இந்தியாவை அழைத்துவந்த பெருமை முழுக்க முழுக்க தோனிக்குத்தான் சேரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் கடந்த நான்கு வருடங்களாக ஒரு ஒழுங்கற்ற, நிலையில்லாத, சரியான பௌலர்கள் இல்லாத மோசமான அணியை வழிநடத்தி வந்ததன் பரிசுதான் சிட்னி படுதோல்வி என்பது தோனிக்குத் தெரியும். இப்போதையே இந்திய அணியில் இருக்கும் எந்த வீரருக்குமே நிலையான ஆட்டம் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் போனதுதான் சோகம்.

தோனியின் ரோல் என்ன?

சச்சின், ஷேவாக், கம்பீர், யுவராஜ், ஜாகீர் கான் என அணியின் சீனியர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தவுடன் அவர்களுக்கு மாற்றாக திறமையான வீரர்களை இந்திய அணிக்குள் அழைத்துவர வேண்டிய கடமை தேர்வாளர்களுக்கு உள்ளது. அதே கடமையும், பொறுப்பும் அணியை வழிநடத்திச் செல்லும் பங்கு கேப்டனுக்கும் உண்டு. ரஞ்சி கோப்பை மட்டும் அல்ல உள்ளூர் திறமைகளை சரியாகக் கண்டெடுத்து இந்திய அணிக்குள் அவர்களை கொண்டுவர இப்போது ஐபிஎல் போட்டிகளும் இருக்கிறது. சிறப்பாக விளையாடும் வீரர்களை ‘இவர் எனக்கு வேண்டும்’ என்று கேட்டுப்பெறும் உரிமை கேப்டனுக்கு உண்டு. சௌரவ் கங்குலிதான் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் உள்ளிட்ட இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அவர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து சிறப்பாக விளையாட வழிகாட்டியவர்.

கேப்டன் தோனி ரெய்னா, தவான், ரோஹித், ரஹானே உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்கினார். இவர்கள் திறமையான வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்களிடம் ஒரு ஒழுங்கு இல்லை. இவர்கள் அனைவருமே வெளிநாட்டு மைதானங்களில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை ஆடியவர்கள். உலகக்கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே படுதோல்வி அடைந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டிகளில் ஒன்றில்கூட இந்த அணியால் வெற்றிபெறமுடியவில்லை. அந்த மோசமான தோல்வியை சந்தித்த அதே அணியை வைத்துக்கொண்டுதான் 2015 உலகக்கோப்பைக்குத் தயாரானார் தோனி. தொடர்ந்து சொதப்பிய வீரர்களில் ஒருவரைக்கூட மாற்ற தோனி ஏன் மெனக்கெடவே இல்லை?

‘ஹார்சஸ் ஃபார் கோர்சஸ்’ தியரியை பின்பற்றுகிறேன்’’ என்பார் தோனி. ‘‘போட்டி நடைபெறும் நாள் அன்று பிட்ச்சின் தன்மை, தட்டவெப்ப சூழல் இவற்றைப் பொருத்துதான் அணியைத் தேர்ந்தெடுக்க முடியும். எல்லோரும் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்கிற பாலிசியைப் பின்பற்ற மாட்டேன்’ என்று முன்பு சொல்லிய தோனி ஒரு ஒழுங்கே இல்லாத வீரர்களை வைத்து சமாளித்துவிடலாம் என்று எப்படி முடிவெடுத்தார்?
முதல் போட்டியான பாகிஸ்தானுடனான ஆட்டம்தான் இந்தியா தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற தைரியமும், உற்சாகமும் கொடுத்தது. அந்தப் போட்டியில் கோஹ்லியின் இரண்டு ஈஸியான கேட்சுகளைத் தவறவிட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். கோஹ்லியின் அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் அப்போதே முடிவுகள் மாறியிருக்கும். இந்த உலகக்கோப்பையில் கோஹ்லி, தவான், ரெய்னா, தோனி, ரோஹித் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பாக ஆடினார்களேத் தவிர இவர்கள் யாரும் ஒரே அணியாக ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை.
 
'பின்ச் ஹிட்டர்'சேவாக்குக்கு மாற்று ஆட்டக்காரர் கண்டுபிடிக்கப்படவில்லை

ஹை ஸ்கோரிங் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்றால் தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் ஆட்டம் துவங்கியவுடனே அடித்து ஆடி எதிர் அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையவைக்கும் பின்ச் ஹிட்டர்கள் வேண்டும். வீரேந்திர ஷேவாக் இந்த வேலையைத்தான் செய்தார். தனது விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் பவுண்டரி, சிக்ஸர்களால் எதிர் அணி பௌலர்களை வெளுத்துவாங்குவார். பௌலருக்கு எந்த லைனில் பந்துவீச வேண்டும் என்பதே மறந்துபோகும். பிரண்டன் மெக்கல்லம், ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற வீரர்கள் இப்போது இதைத்தான் செய்கிறார்கள். ஷேவாக் ஃபார்மில் இல்லை அவரைக் கழற்றிவிடவேண்டும் என்று சரியான முடிவை எடுத்த தோனியும், இந்திய அணி தேர்வாளர்களும் அவருக்கான மாற்று வீரரை ஏன் இறுதிவரை அடையாளம் காணவே இல்லை?

‘‘மிகவும் திறமையான வீரர்’’ என்று சொல்லியே ரோஹித் ஷர்மா இந்தியா ஆடும் எல்லாப் போட்டிகளிலும் இடம்பிடித்துவருகிறார். இரண்டு இரட்டை சதங்கள் அடித்த இந்த உலக சாதனை நாயகன் உலகக்கோப்பையின் 8 போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி 330 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் வங்காளதேசத்துக்கு எதிரானப் போட்டியில் அடித்த 137 ரன்களைக் கழித்துவிட்டால் மற்ற ஏழு போட்டிகளில் அவர் அடித்தது மொத்தமே 190 ரன்கள்தான்.


அனுஷ்கா ஷர்மாவுடன் காதல்... பத்திரிகையாளருடன் மோதல்!

தொடர்ந்து சதம் அடிக்கிறோம், நாம்தான் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸ் கோஹ்லிக்கு இப்போது சரியான பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கும் என நம்பலாம். இந்தியாவில், இந்தியப் பத்திரிகையில் வெளியான அனுஷ்கா ஷர்மா பற்றிய ஒரு துணுக்கு செய்திக்கு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டை கவர் செய்யவந்த நிருபர் மீது பாயவைத்தது அந்த ஓவர் கான்ஃபிடன்ஸ்தான். அனுஷ்கா ஷர்மா- விராட் கோஹ்லி காதல் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். 2011 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். 2015 உலகக்கோப்பையில் சச்சினாக இருந்து இந்திய பேட்டிங் டிபார்ட்மென்ட்டுக்கு தோள் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு விராட் கோஹ்லிக்கு இருந்தது. ஆனால் அவரோ அனுஷ்கா ஷர்மாவுடன் காதல், பத்திரிகையாளுடன் மோதல் எனப் பாதை விலகியது தன்னை பெரிதும் நம்பிய இந்திய அணி நிர்வாகத்துக்கும்,  ரசிகர்களுக்கும் அவர் செய்த துரோகம்.

கோடிகளைக் கொட்டும் பிஸ்னஸ்!


இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் ஒரு வியாபாரம். 1996 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகுதான் கிரிக்கெட் இந்தியாவில் மிகப்பெரிய வியாபாரமாக உருவெடுத்தது. இரண்டு மேட்சில் விளையாடியவர்களுக்கு கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப், விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம், ஸ்டார் அந்தஸ்த்து என புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்தனர் கிரிக்கெட் வீரர்கள். 20/20 யுகம் ஆரம்பித்தபிறகு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிகெட் வீரர்களும் பணம் சம்பாதிப்பதில் உச்சத்தைத் தொட்டுவிட்டார்கள். இன்று உலகிலேயே பணக்கார கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் போர்டுதான். ஆனால் கையில் கோடி கோடியாய் பணம் வைத்திருக்கும் ஒரு அமைப்பால் தன் அணிக்கு திறமையான இளம் வீரர்களை கண்டெடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.
அணிக்குள் திறமையான வீரர்களைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டிய அமைப்பும் அதன் நிர்வாகிகளும், உச்சநீமன்றத்தில் எப்படி வாதிட்டு தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுவதில் பிஸியாக இருக்கும்போது பாவம் ரசிகர்கள் நாம் என்ன செய்ய முடியும். 

இங்கிலாந்தில் 2019 உலகக்கோப்பை!

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் இருக்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு பிட்ச் கூட இந்தியாவில் கிடையாது. நம்மூர் மைதானங்களில் 140கிமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசவும் முடியாது. அப்படியே பந்து வீசனாலும் இங்கே பந்து பவுன்ஸ் எல்லாம் ஆகாது. 2019 உலகக்கோப்பை, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தில்தான் நடைபெற இருக்கிறது. இங்கு வெற்றிபெற வேண்டும் என்றால் திறமையான பௌலர்களும், தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களும் வேண்டும். அதற்கு ஏற்றவாறு அணியைத் தயார் செய்தால்தான் இந்தியாவால் 2019 உலகக்கோப்பையை வெல்ல முடியும். இல்லை என்றால் 1983 உலகக்கோப்பை வெற்றிக்குப்பின் மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல 28 ஆண்டுகள் ஆனதுபோல், நாம் அடுத்த உலகக்கோப்பையை வெல்ல இன்னும் 24 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
- சார்லஸ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024