Friday, March 27, 2015

"சப்"புன்னு அறையலாம் போல இருக்கு இவங்க பேசறதைப் பார்த்தா..

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோல்வியைத் தழுவினாலும் தழுவினார்கள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் அவர்களைப் போட்டு கிழியோ கிழியென்று கிழித்து, அடித்து, துவைத்து தொங்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இதில் அதிகமாக அடிபடுவது அனுஷ்கா சர்மாதான். வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கதைதான் அனுஷ்காவுக்கு. அனுஷ்காவுக்கு கொடுமைக்கார மாமியார்களாக மாறிப் போயுள்ளனர் ஒட்டுமொத்த ரசிகர்களும். அவரையும், கோஹ்லியையும் சேர்த்து படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில் இதுதான் சாக்கென்று பிரபலங்களின் பேட்டிகள் வேறு கிரிக்கெட் வீரர்கள் பற்றியும், உலகக் கோப்பை தோல்வியினைப் பற்றியும். ஆனால், உண்மையில் நாமெல்லாம் தெளிவாகத்தான் இருக்கின்றோமா?

முன்பெல்லாம் சமூக வலைதளங்களின் தாக்கங்கள் அவ்வளவாக இல்லை. நம்மிடையேவும் ஒரு ஆரோக்கியமான மனப்பான்மை இருந்து வந்தது. கோபம் அல்லது மகிழ்ச்சி என்ற அளவோடு போய் விடும். ஆனால் இன்று அப்படி இல்லை. விதம் விதமாக கொண்டாடுகிறார்கள்.. விதம் விதமாக திட்டுகிறார்கள். இன்றைய நிலையில், அந்தரங்கம் என்ற ஒன்றே யாருக்கும் இல்லாத அளவுக்கு, ஒரு சமூக வலைதளங்கள் பிடித்தாட்டுகின்ற உலகில் நாம் வாழ்ந்து வருகின்றோம். யார் முந்திக்கொண்டு மற்றவர்களை கலாய்க்கின்றோம், கிண்டல் அடித்து ஸ்டேட்டஸ் போடுகின்றோம் என்ற மனநிலையில் உறுதியாக இருக்கின்ற நாம் அப்படி கலாய்க்கப்படுபவர்களுக்கும் ஒரு மனம் உண்டு என்பதனை மறந்தே போகின்றோம்.

வெற்றியையும், தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்கின்ற ஒரு எளிதான மனப்பான்மையினை தொலைத்து வெகுநாட்கள் ஆகின்றது நாம். இத்தனை நாட்களும் மற்ற போட்டிகளில் எல்லாம், மற்ற கிரிக்கெட் அணிகளை இந்திய அணி தோற்கடித்த போது மாற்றி, மாற்றி அவர்களை கேலிக் கூத்தாக்கிய நாம், இன்று நம்முடைய அணி போராடித் தோற்ற போதிலும் ஏதோ நாமே களத்தில் இறங்கி நெற்றி வேர்வை நிலத்தில் பட பேட்டிங்கும், பவுலிங்கும் செய்தது போல் அவர்களை காய்ச்சி எடுக்கின்றோம். இதில், பாவம் மேட்ச்சினை பார்க்கப்போன அந்தப் பெண் அனுஷ்கா சர்மாவையும் சேர்த்து அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்... ஏதேனும் ஒரு வேலையில் நீங்கள் முழுமனதாக ஈடுபட்டாலும் சரி,


ஏனோதானோவென்று செய்தாலும் சரி அதில் தோல்வியைத் தழுவ நேர்ந்தால் உங்களுடைய மனதின் ரணம் எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதினை. அவர்கள் பலகோடி சம்பளம் வாங்குகின்றார்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதனையும் தாண்டி கிரிக்கெட் களத்தில் இறங்கி, தூக்கத்தினையும் தொலைத்துவிட்டு அந்த இரவில் நம்முடைய கனவான உலகக் கோப்பைக்காக போராடிய சராசரி மனிதர்கள்தான் அவர்களும். உங்களுடைய வெற்றியைக் காண உங்கள் மனம் நேசிக்கும் காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதைப் போலத்தான் அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலியா சென்றதும்.


காலையில் ஒரு ஒருமணி நேரத்திற்கு வாக்கிங் போகவே 10 தடவை அலாரத்தினை அணைப்போம் நாம். ஆனால், கிட்டதட்ட 40, 50 நாட்களுக்கு மேலாக ஓயாத உடற்பயிற்சியும், பயிற்சியும், புது இடத்தின் உணவும், அலைச்சலும், குறிக்கோளுக்காக மனதினை மெருகேற்றி, மெருகேற்றி ஏற்பட்ட மன உளைச்சலுமே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்பதனை நாம் ஒத்துக் கொள்ள மறுக்கின்றோம். ஏனெனில், நம்மால் வெற்றியினை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அந்த வெற்றியைப் பெற்றுத்தந்தால் மட்டுமே அவர்கள் நம்மவர்கள். இல்லையெனில், அவர்கள் நம்முடைய எதிரிகள். சக மனிதரை மதிக்காமல், அவர்களுக்கு இந்த சமயத்தில் மன ஆறுதல் அளிக்காமல் கேவலமான கமெண்ட்டுகளையும், ஏதோ வானத்திலிருந்தே குதித்து வந்தவர்கள் போல், தோல்வியைக் கண்டே அறியாதவர்கள் போல் சமூக வலைதளங்களில் அவர்களை நாம் கேலிக் கூத்தாக்குவதும் நம்முடைய மனதின் அடி ஆழத்தில் உறைந்து போயிருக்கும் அழுக்கின் மறுப்பக்கத்தினைத்தான் உலகிற்கு எடுத்துரைக்கின்றது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024