Monday, March 30, 2015

பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்? by திண்ணை வாத்தியார்

Return to frontpage


சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம்


கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் விதவிதமான பலபரீட்சைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். எல்லாம் சரி. யாருக்காக? எதற்காக? என்பதுதான் முக்கிய விஷயம்.

கற்றல் திறன் குறைவான மாணவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவ்வப்போது அவர்களின் பெற்றோரிடம் மாணவரின் பயிற்சியைக் குறித்து விவாதிக்கவேண்டும். அதிகாலையில் வாசிக்க, மாணவன் அல்லது மாணவியை எழுப்ப வைக்கவேண்டும். இரவு 9 மணிக்குத் தொலைபேசியில் அழைத்து, மாணவர் கற்கிறாரா என்பதை உறுதிபடுத்தவேண்டும். தலைமையாசிரியிடம் ஒவ்வொரு வாரமும் எந்தெந்த மாணவருக்கு, எத்தனை முறை, எந்தெந்த நேரத்தில் தொலைபேசியில் உரையாடப்பட்டது என்கிற விவரத்தை ஆசிரியர்கள் கையால் எழுதி அளிக்கவேண்டும். இதுதவிர. ஆசிரியர்கள் கூட்டாகவோ, தனியாகவோ ஒரு மாணவ, மாணவியரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது பார்க்கவேண்டும். அதாவது உங்களின் முழுசிந்தனையும் மாணவரை நோக்கி இரவு பகல் அமையவேண்டும் என்பதே கல்வித்துறையின் விருப்பம்.

என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?

சமீபத்தில் ஒரு விழிமாற்றுத்திறனாளி ஆசிரியர் தன் ஊரிலிருந்து தனியாகக் காலை 5 மணிக்குப் பேருந்து பிடித்து, தான் பணிபுரியும் பள்ளிக்குக் காலை 6 மணிக்கு வந்து வகுப்பு எடுக்கிறார். உண்மையில் அவர் வந்து சேரும்வரை அவருக்கு எதுவும் துர்சம்பவம் நடக்கவில்லை என்பது ஓர் ஆறுதல். பிறகு அவர், மாலை வகுப்பு முடிந்தபின் சமுதாயக்கூடத்தில் இரவு 9 மணி வரை எடுத்துவிட்டு வீடு திரும்புகிறார். அவருக்குச் சர்க்கரை நோய். ஏதாவது அவருக்கு விபரீதம் ஏற்பட்டால் அதற்கு அவர்தான் பொறுப்பு. வீடு திரும்பும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டால் அவர்தான் பொறுப்பு.

மற்றொரு ஆசிரியர் குழு மாணவர்களின் இல்லம் நோக்கிச் செல்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களை அந்த ஊரில் வைத்துத் தனிப்பயற்சி தருகிறது. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். நீங்கள் இல்லம் நோக்கிச் சென்று கற்பிக்கவேண்டும். ஏன் வருவதில்லை? என்று கேட்கக்கூடாது. அதற்காகத் தான் இல்லம் நோக்கிப் பள்ளி என்ற திட்டம். இது ஒரு புதிய உத்தி. இந்த உத்தியைப் பயன்படுத்தி மாணவர்களைத் தேடித் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவேண்டும்.

இன்னொரு ஆசிரியர், இரவு 7 மணி முதல் 11 மணி வரை வகுப்பு எடுத்துவிட்டு, மாணவர்களுடன் அங்கேயே தூங்கிப் பின் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வகுப்பைத் தொடங்கி காலை 7 மணி வரை எடுத்துவிட்டு வீடு திரும்பி, ஓய்வு எடுத்துவிட்டுக் காலை 9 மணிக்குப் பள்ளி திரும்புகிறார். மாணவர்களும் அவ்வண்ணமே. இதற்கிடையில் மாணவருக்குத் தேவையான உணவை ஆசிரியர்தான் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தாகவேண்டும்.

ஒரு பெண் ஆசிரியர் மாணவர்களைத் தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உணவு அளித்துக் கற்பிக்கிறார். சனி, ஞாயிறுகளில் தன் வீட்டில் உணவளித்துப் பயிற்சி அளிக்கிறார்.

இன்னொரு ஆசிரியை தன்னுடைய பணிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, தன் குடும்பத்தை மறந்துவிட்டு, ஞாயிறு முழுவதும் மாணவர்களுக்குக் கற்பிக்கவருகிறார். அவருடைய குடும்பத்தைப் பற்றிய முழுசிந்தனையையும் அவர் ஒதுக்கிவிட்டுக் கற்பிக்கிறார். இரவு வீடு திரும்பியபின், அவருக்குத் தொலைபேசி ஒன்று வருகிறது. மது அருந்திய ஒருவர், அவரிடம் தவறாகப் பேசும் நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது மாணவரின் தந்தை. மறுநாள் காலை அவர் மன்னிப்பு கோருகிறார். இதையும் அந்த ஆசிரியை சகித்துக்கொள்ளவேண்டும். ஒரு ஆசிரியையின் தொலைபேசி எண் ஏன் பொதுமக்களுக்குரியதாக வேண்டும்?

ஒரு ஆசிரியர் தன் மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு ஊராகச் சென்று, அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது போல, மாணவர்களைச் சேர்த்துவந்து, கட்டாயமாக உட்காரவைத்துத் தேர்ச்சிக்காகக் கற்பிக்கிறார். மீண்டும் அவர் அந்த மாணவர்களை ஊரில் விட்டுவிட்டு தன் வீடு திரும்ப இரவு 10 ஆகிவிடுகிறது. வரும் வழியில் மாணவர்களுக்கு ஏற்படும் அசாம்பாவிதத்திற்கு அவரே பொறுப்பு. அவருக்கு ஏற்படும் அசம்பாவிதத்திற்கு யாரும் காரணம் ஆகமுடியாது. காரணமும் கோரமுடியாது.

காலை 6-9 வரை சிறப்பு வகுப்பு, பின் 9.00 - 4.30 வரை வழக்கமான வகுப்பு, பிறகு 4.30 - 5.30 வரை சிறப்பு வகுப்பு, பின்பு 6-9 வரை இரவு வகுப்பு, காலை 4-6 வரை சிறப்பு வகுப்பு, சனி, ஞாயிறு முழுவதும் சிறப்பு வகுப்பு என மாறி மாறி சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் மாணவன் மூச்சுவிடவும், ஆசிரியர் ஓய்வு எடுக்கவும் நேரம்தான் இல்லை. இத்தனை சிறப்பு வகுப்புகள் எதற்காக?

ஏன் இந்த ஓட்டம்..?

ஒரு கற்பவரின் தேர்ச்சி ஒரு பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துகிறது. ஒரு பள்ளியின் உயர்ச்சி, மாவட்டத்தின் உயர்ச்சி அதாவது மாநில அளவில் அதன் தரம் உயர்கிறது. ஒரு வேளை கற்பவர் தோல்வி அடைந்தால் ஒரு பள்ளி, மாவட்டத்தின் தரம் வீழ்கிறது. எனவே ஒரு பள்ளி உயரவேண்டும், ஒரு மாவட்டம் மாநில அளவில் தரம் உயரவேண்டும் என்று ஒட்டம்தான் இதற்குக் காரணம். இந்த ஓட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நிகழ்கிறது. மாணவர், ஆசிரியர், பள்ளி, மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் என்ன? என்று கேள்வி எழுதாதபோது, ஏன் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஏன் இந்த ஓட்டம் நிகழவில்லை? என்பதுதான் கேள்வி.

இந்த சிறப்பு வகுப்புகள் எத்தனை மாதங்கள் நடக்கின்றன என்ற கேள்வி எழுந்தால், தேர்வுக்கு இரண்டு மாதம் முன்புதான் என்பது பதில். உடனடி உணவு என்பதுபோல் உடனடி பயிற்சி. இந்த உடன் அடி பயிற்சியில் மாணவர்களைத் தேரவைக்கவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களைத் தன்பிள்ளைபோல், மாணவர்களின் வறுமைக் குடும்பத்தைத் தன் குடும்பம்போல் பாவித்து. சகிப்புத்தன்மையுடன், எவ்வளவு அவமானம் ஏற்பட்டாலும் பொறுமையுடனும், ரோஷத்தையும் கவுரவத்தையும் விட்டுவிட்டு, இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவேண்டும். இது எல்லாம் எதற்காக?

ஒரு மாணவர் தேர்ச்சி அடைய போதுமான மதிப்பெண் 35-க்காக. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே அந்த மாணவர் தேர்ச்சி அடைந்துவிடுவார். பள்ளி நாட்கள் மொத்தம் 205. இந்த நாட்களில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் மட்டுமே படிக்க ஒரிரு வாரம்போதும். ஆனால் என்ன நடக்கிறது? ஆசிரியர் கற்று தரும் பாடங்களைத் தினமும் நேரம் ஒதுக்கி வாசிக்காமல், சமூகச் சீர்க்கேட்டிற்கும் விளையாட்டுக்கும் பொழுதுபோக்குக்கும் நேரத்தை வீணடித்த மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் அயராது பாடுபடவேண்டும். கோடிக்கணக்காகப் பள்ளிக்குச் செலவழிக்கும் அரசை எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது. அது பள்ளியையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நன்றாகத்தான் வைத்துள்ளது. ஆனால், ஓர் அரசுப் பள்ளியில் கால் சதவீத மாணவர்களின் பொறுப்பின்மையால் அரசும் ஆசிரியர்களும் படாதபாடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் உதவிகளும் கேலிக்குரியதாகின்றன.

பெற்றோரின் பொறுப்புதான் என்ன?

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?

அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...