அபிமானத்துக்குரிய தங்கள் கதாநாயகன் இரட்டை வேடங்களில் நடித்தால் அதைக் கொண்டாடத் தவறியதில்லை ரசிகர்கள். அன்று எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இரட்டை வேடங்களில் நடித்தபோது இன்றைய அதிநவீனக் கம்போசிட்டிங் (compositing) தொழில்நுட்பம் இல்லை.
அன்று இரட்டை வேடங்கள் ஒரே காட்சியில் தோன்றுவதைப் படம்பிடிக்க நடிகரோடு தொழில்நுட்பக் குழுவும் கடும் உழைப்பைத் தர வேண்டியிருந்து. உதாரணத்துக்கு ‘நாடோடி மன்னன்’ படத்தை எடுத்துக் கொள்வோம். எம்.ஜி.ஆர் ராஜா மார்த்தாண்டனாக ஒரு வேடத்திலும், அவரது ஆட்சியை எதிர்த்து மக்களாட்சி வேண்டும் எனப் போராடும் புரட்சியாளன் வீராங்கன் என்ற மற்றொரு வேடத்திலும் நடித்திருந்தார்.
இரண்டு கதாபாத்திரங்களும் சந்தித்துக்கொள்ளாதவரை பிரச்சினை இல்லை. ஆனால் இரண்டு கதாபாத்திரங்களும் சில காட்சிகளில் ஒன்றாகத் தோன்றியே ஆக வேண்டும் அல்லவா? இந்தப் படத்தை இயக்கி நடித்த எம். ஜி.ஆர். முதலில் மார்த்தாண்டன் தொடர்புடைய காட்சிகளையெல்லாம் படம்பிடித்துக் கொண்டார். பிறகு வீராங்கன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படம்பிடித்தார். இருவரும் தோன்றிய காட்சிகளை எப்படிப் படம்பிடித்திருப்பார்? அதற்கு அப்போது பயன்படுத்திய தந்திரம்தான் ‘ பிளாக் மாஸ்க்’.
நாடோடி மன்னனில் மார்த்தாண்டன், வீரங்கனுடன் கைகுலுக்கும் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். செட்டில் எந்த இடத்தில் இரண்டு வேடக் கதாபாத்திரங்களும் நிற்கவேண்டும், அந்த ஷாட்டின் வடிவமைப்பு(shot composition) என்ன, அப்போது செட்டின் ஒளியமைப்பு என்ன என்பதையெல்லாம் ஒளிப்பதிவாளர் முடிவு செய்துவிடுவார்.
முதலில் மார்த்தாண்டன் வலப்புறம் நின்று கைகளை நீட்டி, எம்.ஜி.ஆருக்கான ஒரு டூப் வேஷ நடிகரின் கைகளைக் குலுக்குவார். இப்போது கேமராவின் கண்கள் என்று வருணிக்கப்படும் அதன் லென்ஸ் வழியே இந்தக் காட்சி பதிவாக வேண்டும். வீராங்கன் நிற்கப்போகும் இடப்பக்கம் கேமராவில் பதிவாகாமல் இருக்க வேண்டும். இதனால் கேமராவின் பார்வையை அதன் இடப்பக்கம் முழுவதையும் கருப்பு வண்ணக் காகிதத்தால் பாதி மறைத்துவிடுவார்கள்.
இப்போது மார்த்தாண்டன் நடிக்கும் ஷாட்டைப் படம்பிடித்துவிடுவார்கள். ஷாட் பதிவாகி முடிந்ததும் கேமராவில் மறைக்கப்பட்ட பகுதியானது பிலிமில் எதுவும் பதிவாகாமல் அப்படியே நெகட்டிவாக இருக்கும். இப்படி எடுக்கப்பட்ட முதல் ஷாட்டில் எத்தனை பிரேம்கள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை பிரேம்களை பிலிம்ரோலில் ரிவர்ஸ் செய்து சரியான முதல் பிரேமில் ‘க்யூ’ செய்து வைப்பார்கள். இம்முறை மார்த்தாண்டன் நின்றிருந்த இடத்தை கேமரா பதிவு செய்யாமல் இருக்க கேமராவின் மற்றொரு பாதி கருப்புக் காகிதத்தால் மறைக்கப்பட்டுவிடும்.
வீராங்கன் நிற்க வேண்டிய இடப்புறத்தில் மேக் அப்பை மாற்றிக்கொண்டு எம்.ஜி. ஆர். வீராங்கன் தோற்றத்தில் நிற்பார். டூப் நடிகர் கைகுலுக்கியபோது ஒளிப்பதிவாளர் குறித்துக் கொண்ட அதே இடத்தில் நின்று வீராங்கனாக நடிப்பார். இப்போது ஒரே பிலிமில் ஒரே நடிகரால் நடிக்கப்பட்ட இரண்டு வேடக் காட்சி தயார்.
இந்தக் கடின முறையை நவீன கம்போசிட்டிங் முறை சுலபமாக்கிவிட்டது. உடலோடு ஒட்டிப்பிறந்த இரட்டைக் கதாபாத்திரங்களில் மாற்றன் படத்தில் சூர்யா நடித்திருந்தார். அவர் அந்தப் படத்தில் ஏற்றிருந்த அகிலன், விமலன் ஆகிய கதாபாத்திரங்களின் குணாதிசயம் வெளிப்படும்படி, உடல்மொழி, வசன உச்சரிப்பு இரண்டிலும் வேறுபாடு காட்டி இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக நடித்திருந்தார் என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். உண்மையில் நவீன கம்போசிட்டிங் முறை தரும் வசதியால் சூர்யா இதைச் சுலபமாகச் செய்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.
முதலில் ஒரு கதாபாத்திரத்தை அதற்குரிய அத்தனை காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார் சூர்யா. பிறகு மற்றொரு வேடத்திற்கு சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் இந்த இரட்டையர் வேடங்கள் இடம்பெறும் எல்லா காட்சிகளும் ‘கிரீன் மேட்’ பின்னணியில் பச்சை வண்ணத் துணியை செட்டின் பின்புலத்தில் கட்டி படம் பிடிக்கப்பட்டன.
எதற்காக இந்தப் பச்சை வண்ணத் திரையின் பின்னணியில் இவர்கள் தோன்றும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன? வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை, அல்லது காட்சிகளை வெட்டி ஒட்டவே இந்த பச்சை வண்ணப் பின்னணி பயன்படுகிறது.
அது எப்படி என்பதை எப்படி அடுத்த பகுதியில் எளிமையாகப் புரிந்துகொள்வோம். அப்போது தசாவதாரம் கமலும் ஸ்பைடர்மேனும் நமக்குத் துணையாக வருவார்கள்.
படங்கள் உதவி: ஞானம்
No comments:
Post a Comment