Thursday, March 26, 2015

தமிழை மதித்த பிரதமர்!

இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1955 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவை சிங்கப்பூர் - மலேசிய நாடுகளுக்கு வருமாறு அந்த நாடுகளிலிருந்த தி.மு.கழக நிர்வாகிகள் பலர் நேரடியாகவும் கடிதங்கள் மூலமாகவும் வேண்டியபடி இருந்தனர்.

அங்கிருந்த தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களான சாரங்கபாணி ("தமிழ் முரசு'), செல்வக்கணபதி ("தமிழ் மலர்'), முருகு சுப்பிரமணியன் ("தமிழ் நேசன்') மற்றும் பொது வாழ்வில் பெரும் பங்குபெற்ற திருப்பத்தூர் வள்ளல் ரெங்கசாமி போன்ற பிரமுகர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வேண்டுகோள்களை அனுப்பியபடி இருந்தனர்.

சிங்கப்பூர் - மலேசியப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை ஒட்டி, தமிழ்நாட்டின் பத்திரிகைகளும் தத்தம் போக்கில் எழுதிவிட்டன.

அண்ணா தமது "திராவிட நாடு' இதழில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத்தில் புதியதொரு பகுதியை ஆரம்பித்தார்.

8-5-1955 அன்று வெளிவந்த அதன் முதல் இதழிலேயே "காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி' என்கிற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், பத்திரிகைகளில் வந்த செய்திகளை ஒட்டி தி.மு.கழகத்தின் முன்னுள்ள பெரும் பொறுப்புகளையும் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வலியுறுத்திவிட்டு, தமது சிங்கப்பூர் - மலேசியப் பயணத்தையும் குறிப்பிட்டு விட்டார்.

முதலில் வந்த செய்திகளின்படி 1955-இல் அண்ணாவின் பயணம் அமையவில்லை. பத்து ஆண்டுகள் கழித்து 1965 ஜூன் மாதத்தில்தான் அமைந்தது.

1965 ஏப்ரல் மாதத்திலேயே அண்ணாவின் வெளிநாட்டுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை நான் துவக்கி விட்டேன். பாஸ்போர்ட், விமானத் தொடர்புகள், வெளிநாட்டு நாணய அனுமதிகள் எல்லாம் பெற்று விட்டேன்.

அண்ணாவின் பெயரைக் கேட்டதுமே எல்லா இடங்களிலும் நிர்வாகிகளும் அதிகாரிகளும் உற்சாகத்துடன் தேவையான உதவிகளைச் செய்தனர்.

சிங்கப்பூர் - மலேசிய நாடுகளில் பல ஊர்களின் அண்ணாவுக்கு அழைப்புகள் இருந்தன. தமிழ்நாட்டிலேயே அண்ணாவின் சுற்றுப்பயணம் நேரப்படி நடப்பதில்லை. ஒரு தடவை அண்ணா "தொழுதூர் வந்நோம் பொழுது விடிந்தது' என்று எழுதினார்.

சிங்கப்பூர் - மலேசிய நண்பர்களுக்கு நான் முன் கூட்டியே கடிதம் எழுதி விட்டேன். ஒவ்வொரு நாளும் அண்ணா காலை 10 மணிக்கு மேல்தான் எழுந்திருப்பார். பெரும்பாலும் பிற்பகல் 4 மணிமுதல் 8 மணிவரை கூட்டங்கள் நடத்தலாம். இரவு 10 மணிக்குள் அண்ணா தங்குமிடத்திற்கு வந்துவிட வேண்டும். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களைத் தவிர மற்ற எந்த நிகழ்ச்சியும் இடையில் சேர்க்கப்படக்கூடாது.

முதலாவதாக, 1965 ஜூலை 16 அன்று சிங்கப்பூர் செல்வதாக இருந்தது.

எங்கள் நண்பர்கள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவைச் சந்தித்தாகவும், அண்ணாவின் கூட்டத்துக்கு தலைமை வகிக்க உற்சாகத்துடன் அவர் ஒப்புக் கொண்டதாகவும் எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

பிரதமரே தலைமை வகிப்பதால், அண்ணா பேசுவதற்கு ஏற்ற இடமாக "சாலான் பசார்' என்ற பெரிய மைதானம் ஒதுக்கப்பட்டது. அண்ணாவின் வருகையை அறிந்து சிங்கப்பூர் நகரமே குதுகலமானது.

அண்ணாவை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்கு தி.மு.கழகத் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர் கழகத் தோழர்கள் தந்த மாலைகளும் கைத்தறி ஆடைகளும் மலைபோல் குவிந்து விட்டன.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் நெடுஞ்செழியன் என்னை அழைத்து, மலேசியாவிலிருந்து அண்ணாவுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தை தந்து, "நான் சிங்கப்பூர் நண்பர்களிடம் பேசிவிட்டேன், கவலைப்பட வேண்டாம்' என்றார்.

விமானம் புறப்பட்டதும் அண்ணா அவர்கள் என்னிடமிருந்த கடிதத்தைப் பார்த்து முதலில் மிகவும் கவலைப்பட்டார். ஆனால், சிங்கப்பூர் விமான நிலையத்தில் கூடியிருந்த கூட்டம் அண்ணாவுக்கு ஆரவாரமான வரவேற்பைத் தந்தது.

அன்று மாலை "சாலான் பசான்' மைதானத்தில் கூட்டம் நடந்தது. பிரதமர் லீ குவான் யூ தலைமை வகித்து அதற்கு முன்னர் 1965-இல் பாங்காங் நகரில் அணிசாரா மாநாட்டுக்குச் சென்ற அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிங்கப்பூரில் பெரிய கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு அது போன்ற பெரியதொரு கூட்டம் அண்ணா கலந்துகொண்ட கூட்டம்தான்.

லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை அவர் ஒரு மாபெரும் பொருளாதார, ஜனநாயக நாடாக மாற்றினார்.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் சீனர்கள் 77 விழுக்காடு, மலாய் இனத்தவர்கள் 14 விழுக்காடு, தமிழர்கள் 6 விழுக்காடு இருந்து வருகிறார்கள்.

ஆயினும், சிங்கப்பூர் ஆட்சிமொழிகளாக சீனம், மலாய், ஆங்கிலம் தமிழ் என்ற வகையில் பிரதமர் லீ குவான் யூ அரசமைப்புச் சட்டத்தை வகுத்தார்.

அண்ணாவை வரவேற்றவர், தமிழுக்கு மிகவும் மதிப்புத் தந்தவர் லீ குவான் யூ. அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...