Monday, March 23, 2015

'அறமும், ஒழுக்கமும் ஏட்டில் மட்டுமே படிக்கின்ற விஷயமாகி விட்டது!'

‘‘பள்ளிகளில் தேர்வு நடக்குபோது மாணவர்கள் பிட் அடிப்பது சாதாரண விஷயம். இதையெல்லாம் தடுக்க முடியாது. பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களால் தேர்வு நடத்த முடியாது. பெற்றோர்களே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?” - இப்படிச் சொன்னது ஒரு சுப்பனோ, குப்பனோ இல்லை. பீகார் மாநிலத்தின் கல்வி அமைச்சர் பி.கே.சாகி என்பதுதான் மீள முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத அடுக்கு மாடிக் கட்டடம் அது. கட்டத்தில் கொத்தனார்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் பரவிய அந்தப் படத்தைப் பார்த்த எல்லோருக்கும் முதலில் தோன்றியது இதுதான். அதன் பிறகுதான் தெரிந்தது அது பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் பள்ளிக்கூடம் என்பது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுப்பதற்காக வரிசைக்கட்டி நிற்கிறார்கள் மாணவர்களின் பெற்றோர்கள்.


நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்பது பொருள். இந்தியாவின் அறிவு சார்ந்த பெருமைகளில் முதன்மையாது, முக்கியமானது நாளந்தா பல்கலைக்கழகம். கி.பி.427-ம் ஆண்டு உருவான இந்தப் பல்கலைக்கழகம் உலகத்துக்கே கல்வியின் சிறப்பை எடுத்துச் சொல்லும் அறிவுக்கடல். ‘நுழைவுத் தேர்வு என்ற ஒரு விஷயம் நாளந்தா பல்கலைக்கழத்தில் இருந்துள்ளது. இங்கே விண்ணப்பிக்கும் மாணவர்களை அப்படியொரு தேர்வு வைத்துதான் தேர்ந்தெடுத்துள்ளனர். உலகின் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் இங்கே வந்து தங்கிப் படித்துள்ளனர். இங்கே படிக்க வரும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், உடைகள் என அத்தனையும் இலவசமாகவே கொடுக்கப்பட்டுள்ளது’ என்று இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் தனது குறிப்பில் எழுதியிருக்கிறார்.

குப்தர்கள் காலத்தில் தொடங்கி அதன் பிறகு வழி வழியாக வந்த மன்னர்கள் எல்லோருமே நாளந்தா பல்கலைக்கழத்தின் செலவுகளுக்காக, 200 கிராமங்களில் வருவாயை தனியாகவே ஒதுக்கி வந்தனர். இதுமட்டுமல்ல... பல்கலைக்கழத்துக்குச் சொந்தமான நிலத்தில் காய்கறிகள் பயிரிடுவது, மாடுகள் வளர்ப்பது என்று உணவுத் தேவைக்கான அத்தனைக்கும் அங்கேயே கிடைத்தது. 10 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் நாளந்தாவில் படித்ததாகவும் குறிப்புகள் உள்ளது. இன்று புகழ்பெற்ற பல்கலைக்கழங்களாகச் சொல்லப்படும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களுடன் ஒப்பிடும்போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது நாளந்தா பல்கலைக்கழகம். ‘ஏட்டில் உள்ளதை மட்டும் கற்றுத்தரும் இடமாக கல்விக்கூடம் இருக்கக்கூடாது. மாணவர்களுக்கு விவாதங்களுடன் கூடிய படிப்பை வழங்கும் இடமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாளந்தா பல்கலைக்கழத்துக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் தேடி வருகிறார்கள்!’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

நிற்க!

நாளந்தா பல்கலைக்கழம் அமைந்திருப்பது பீகார் மாநிலத்தில்தான். நாளந்தாவில் இருந்து 132 கிலோமீட்டர் தூரத்தில்தான் வைஷாலி மாவட்டம் உள்ளது. உற்றார், உறவினர் கூடி நின்று, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுக்கிறார்கள். கல்வியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் மாநிலத்தில்தான் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருகிறது. கல்வி அமைச்சர் சொல்லியிருக்கும் கருத்தைப் பார்த்தால் இது இந்த ஆண்டு புதிதாக நடந்த சம்பவமாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் பெருகிவிட்டக் காரணத்தால் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஒரு மாணவன் தவறு செய்தால் அதைத் தட்டிக்கேட்க வேண்டிய முதல் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அடுத்து ஆசிரியருக்கு! இங்கே பெற்றோர்களும் தவறுகளுக்குத் துணைபோக, ஆசிரியர்கள் அதற்குச் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1100 பேர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்திருப்பதை பீகார் அரசு கண்டுபிடித்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.

இது சிக்கியவர்கள் மட்டும்தான். படிக்காமலேயே ஆசிரியராக இருப்பவர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருப்பதால்தான் மாணவர்களுக்கு அறமும், ஒழுக்கமும் ஏட்டில் மட்டுமே படிக்கின்ற விஷயமாகி விட்டது. மாணவனுக்கு நல்லது, கெட்டது இரண்டையும் கற்றுத்தரும் இடம் பள்ளிக்கூடம்தான். நல்லதை கற்றுத்தர அங்கே நல்லவர்கள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் இருக்க வேண்டும். அஸ்திவாரமே சரியில்லாதபோது, கட்டடத்தை குறை சொல்லி என்ன பிரயோஜனம்?

கல்வியில் பின் தங்கிய மாநிலம் என்று வருத்தப்படுவதாலோ, ஊர்கூடி காப்பியடிக்க மாணவர்களுக்கு பிட் கொடுப்பதாலோ முன்னுக்கு வந்துவிட முடியாது என்பதை பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் உணர வேண்டும்!

-கே.ராஜாதிருவேங்கடம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024