Monday, March 23, 2015

வாட்ஸ் அப் வாத்தியார்கள்!...வாசகர் பக்கக் கட்டுரை

வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப் -இல் அனுப்பும் ஆசிரியர்கள் ஒருபுறம்..சுவர் ஏறி  குதித்து ‘பிட்’ கொடுக்கும் பெற்றோர்கள் ஒருபுறம்.  இவை இரண்டுமே வெவ்வேறு  இடங்களில் நடந்த சம்பவங்களாக இருக்கலாம்..ஆனால் களங்கப்பட்டு நிற்பது என்னவோ நம் கல்வித்துறையும் ஆசிரியர்களின் மாண்புமே.

வாட்ஸ் அப்-இல் கேள்வித்தாளை அவுட் செய்த ஆசிரியர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அவர்கள் புனிதமான ஆசிரியப் பூந்தோட்டத்தின் களைகள். களைகள் களைந்தெறியப்படுவது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் மட்டுமே உண்மைக்  குற்றவாளிகளா என்றால், இல்லை என்பதே பதில். தமிழ் நாட்டில் எந்த தனியார் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பும், பதினோராம் வகுப்பும் நடத்தப்படுவதே இல்லை. இது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? அல்லது அவர்களை படிக்க வைக்கும் பெற்றோருக்கு தெரியாதா? 

நூறு சதவீத தேர்ச்சியை முன்னிறுத்தி நடத்தப்படும் கல்வி வியாபாரங்கள் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் சென்று விட்டதா? கல்வித்துறை அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களில் எத்தனை பேரின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில்கின்றனர்? அரசு பள்ளி வேண்டாம்..ஆனால் அரசு பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என நினைப்பது மட்டும் சரியா? பணத்தை தங்கள் பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்யும் பெற்றோருக்கு பணம் முக்கியமல்ல.
ஆனால் தங்கள் மகள் அல்லது மகனுக்கு கல்லூரியில் இலவச மருத்துவ அல்லது பொறியியல் சீட் வேண்டும். அதனைப் பயன்படுத்தி இந்த ‘சந்தைப்’ பள்ளிகள் முடிந்த வரை பணத்தை கறக்கின்றனர். அரசு பள்ளி மாணவன் ஒரு வருடத்தில் படித்து எழுதும் தேர்விற்கு இவர்கள் இரண்டு வருடமாக தங்கள் மாணவனை தயார் செய்கிறர்கள். அதுபோதாது என்று சனி,ஞாயிறு விடுமுறைகள் இல்லை, தீபாவளி பொங்கல் கொண்டாட்டங்கள் இல்லை.
இவ்வளவு கசக்கிப் பிழிந்தும் அவர்களின் மாணவர்கள் மாநில முதலிடம் பெற எத்தனை குறுக்கு வழிகள் இருக்கிறதோ அத்தனையும் முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்று தான் சமீபத்திய ‘வாட்ஸ் அப்’ கேள்வித்தாள் பரிமாற்றம். இது ஒரு உதாரணம் மட்டுமே. 

பத்தாம் வகுப்பைத் தவிர மற்ற எந்த வகுப்புகளிலும் சமச்சீர் பாடத்திட்டத்தை கடைப் பிடிக்காத, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டு சீட்டை நிரப்பாத தனியார் பள்ளிகளை கேள்வி கேட்பது யார்? அரசின் காதுகளுக்கு இவை எட்டுமா? கல்வி சீர்திருத்தம் கிட்டுமா? அரசுப் பள்ளி மாணவனின் நிலைமை மாறுமா? கல்வியை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த ‘சதுரங்க வேட்டையில்’ சதுரங்க ‘ராஜா’க்களை தப்பவிட்டு  சாதாரண சிப்பாய்களை  சிறைபிடித்து என்ன பயன்?

-மஹபூப்ஜான் ஹுசைன் ( காரிமங்கலம்) 

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...